திசையன்விளை அருகே பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியில் பொங்கல் பரிசுப் பணம் எங்கே எனக் கேள்வி எழுப்பி திமுக நிர்வாகிகளிடம் பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
புத்தாண்டு பிறந்த கையோடு தமிழக மக்கள் நமது பாரம்பரிய பண்டிகையான பொங்கலைக் கொண்டாடுவதற்கு ஆயத்தமாகி வருகின்றனர்.
ஜன.,14ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது.இதைத் தொடர்ந்து, மாட்டுப் பொங்கல் மற்றும் காணும் பொங்கலும் அடுத்தடுத்து தமிழக மக்கள் கொண்டாடி மகிழ இருக்கின்றனர்.
தமிழக மக்கள் அனைவரும் இந்தப் பண்டிகையை சிறப்பாக கொண்டாட ஏதுவாக, ஆண்டுதோறும் பொங்கல் சிறப்பு தொகுப்பு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால், கடந்த சில ஆண்டுகளாக பொங்கல் பரிசுத் தொகுப்போடு, பணப்பரிசையும் அதிமுக தலைமையிலான தமிழக அரசு வழங்கி வந்தது. குறிப்பாக, கடந்த ஆண்டு கொரோனா மற்றும் ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் இழந்து தவித்த மக்களுக்கு ரூ.2,500 வழங்கப்பட்டது. எனவே, இந்த ஆண்டும் பொங்கல் பணப்பரிசை எதிர்நோக்கி மக்கள் காத்திருந்தனர்.
இந்த சூழலில், குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு மட்டும் வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்.
இது, ஏழை, எளிய மக்களுக்கு பெரும் அதிர்ச்சியையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியது. மேலும், பொங்கல் பரிசுத் தொகையை தமிழக அரசு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அதோடு, அரசு ஊழியர்களுக்கு 31 சதவீதம் அகவிலைப்படியை வழங்கிய தமிழக அரசு, கடந்த ஆட்சியைப் போன்று, ரேஷன் அட்டைதாரர்களுக்கு பரிசுத் தொகை வழங்க மறுப்பது ஏன்..? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இதனிடையே, பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியை முதலமைச்சர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு சென்னை தலைமை செயலகத்தில் தொடங்கி வைத்தார்.
இதைத் தொடர்ந்து, பிற பகுதிகளிலும், திமுகவினர் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்து வருகின்றனர்.
அந்த வகையில், நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள ரேஷன் கடை ஒன்றில், பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியில் பொங்கல் பரிசுப் பணம் எங்கே எனக் கேள்வி எழுப்பி திமுக நிர்வாகிகளிடம் பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், முழு கரும்பு மற்றும் பச்சரிசி உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை அப்பகுதியைச் சேர்ந்த திமுக நிர்வாகிகள் தொடங்கி வைத்தனர்.
அப்போது, பொங்கல் பரிசுத் தொகை எங்கே..? என்று அங்கிருந்த பெண்கள் கேள்வியை எழுப்பத் தொடங்கினர். இதனால், அதிர்ந்து போன திமுக நிர்வாகிகள், அங்கிருந்து லேசாக நழுவினர்.
அப்போது, ஒருவர் மட்டும் பெண்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ‘அதுதான் ஓட்டுக்கு ரூ.2,000 கொடுத்தோம்ல.. அப்புறம் என்ன,’ என்று அவர் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த பெண் ஒருவர், ‘ஒட்டுக்கு கொடுத்தது பத்தி பேசுல, ரேஷன் கடையில் ரூ.2,500 கொடுத்தாங்க, அதை ஏன் தரல,’ எனப் பதிலளித்ததோடு, கொடுத்த 21 பொருளாவது சரியா இருக்கா என்று செக் பண்ணி பாத்துக்கோங்க எனக் கூறினார்.
இதையடுத்து, பரிசுத் தொகுப்பை பெற்ற பெண் ஒருவர் 21 பொருட்களில் 18 தான் இருக்கிறது, என மற்றொரு பெண் கூறியது, அங்கிருந்த திமுக நிர்வாகிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பின்னர், அங்கிருந்தவர்களை சமாளித்து விட்டு, அவர்கள் அங்கிருந்து சென்றனர்.