இந்தியா-நியூசிலாந்து மூன்றாவது டி20 போட்டி – அகமதாபாத் –
1 பிப்ரவரி 2023
ஷுப்மன் கில் அதிரடியில் இந்தியா 168 ரன் வித்யாசத்தில் வெற்றி
-முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
இந்திய அணி (234/4. ஷுப்மன் கில் 126*, ராகுல் திரிபாதி 44, ஹார்திக் 30, சூர்யகுமார் 24) நியூசிலாந்து அணியை (12.1 ஓவரில் 66 ரன், மிட்சல் 35, சாண்ட்னர் 13, ஹார்திக் 4/16, அர்ஷதீப் 2/16, உம்ரான் 2/9, ஷிவம் மாவி 2/12) 168 ரன் கள் வித்தியாசத்தில் வென்றது.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையேயான மூன்றாவது டி20 போட்டி ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களுக்கு 4 விக்கெட் இழந்து 234 ரன்களை குவித்தது. இந்தியா சார்பில் தொடக்க வீரராக களமிறங்கிய சுப்மன் கில் 63 பந்துகளில் 126 ரன்கள் எடுத்தார்.
இவரை தொடர்ந்து ராகுல் திரிபாதி, கேப்டன் ஹர்த்திக் பாண்டியா மற்றும் சூர்யகுமார் யாதவ் முறையே 44, 30 மற்றும் 24 ரன்களை எடுத்தனர். இதைத் தொடர்ந்து 235 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களமிறங்கியது. நியூசிலாந்து அணிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஃபின் ஆலென், தேவன் கான்வே தங்களின் விக்கெட்களை இழந்தனர். அடுத்து களமிறங்கிய மார்க் சாப்மேன், கிலென் பிலிப்ஸ் வந்த வேகத்தில் நடையை கட்டினர். இந்தியா சார்பில் அர்ஷ்தீப் சிங், ஹர்த்திக் பாண்டியா பவர்பிளே ஓவர்களில் சிறப்பாக பந்து வீசி ஆரம்பம் முதலே விக்கெட்களை கைப்பற்றினர்.
இதன் காரணமாக வெற்றி இலக்கை துரத்த முடியாமலும், விக்கெட் சரிவை நிறுத்த முடியாமலும் நியூசிலாந்து அணி போராடியது. அந்த அணியின் டேரில் மிட்செல் மட்டும் நிதானமாக ஆடி வந்தார். 12.1 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 66 ரன்களை மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது.அதனால் மூன்றாவது டி20 போட்டியில் 168 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.
இந்தியா சார்பில் கேப்டன் ஹர்த்திக் பாண்டியா 4 விக்கெட்களையும், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக் மற்றும் ஷிவம் மாவி தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
ஆரம்பத்தில் தொடக்க வீரராக களமிறங்கிய இஷான் கிஷன் பிரேஸ்வெல் பந்தில் ஆட்டமிழந்தார். சுப்மன் கில் தொடக்கத்தில் அதிரடியாக ஆடவில்லை. அவ்வப்போது ஃபோர்கள் மட்டு அடித்து வந்தார். 12ஆவது ஓவருக்குப்பிறகு அவர் சிக்சர் மழை பொழிந்தார். 12ஆவது ஓவர் முடிவில் கில் 36 பந்துகளில் 7 ஃபோர்களோடு 51 ரன் எடுத்திருந்தார். அடுத்த 27 பந்துகளில் அவர் மேலும் 75 ரன்கள் சேர்த்தார்; அதில் 5 ஃபோர்கள் 7 சிக்சர்கள். நியூசிலாந்து அணி கில் எடுத்த ரன்களைக்கூட எடுக்க முடியாதது மிகப் பெரிய சோகம்.
இன்றைய ஆட்ட நாயகனாக ஷுப்மன் கில் அறிவிக்கப்பட்டார். தொடர் நாயகனாக ஹார்திக் பாண்ட்யா அறிவிக்கப்பட்டார். இந்திய அணி டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் வென்று தனது தொடர் வெற்றிச் சாதனையைத் தொடர்கிறது.