
இந்தியா ஆஸ்திரேலியா நான்காவது டெஸ்ட், அகமதாபாத், மூன்றாம் நாள், 11.03.2023
— முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் —
அகமதாபாத்தில் நடக்கும் நான்காவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்க்ஸில் 167.2 ஓவர்கள் விளையாடி 480 ரன்னிற்கு ஆல் அவுட் (உஸ்மான் க்வாஜா 180, கிரீன் 114, மர்ஃபி 41, ஸ்மித் 38, நாதன் லியன் 34, ஹெட் 32, அஷ்வின் 6/91, ஷமி 2/134, ஜதேஜா 1/49, அக்சர் படேல் 1/47). இந்திய அணி முதல் இன்னிங்க்ஸில் 99 ஓவர்கள் விளையாடி மூன்று விக்கட் இழப்பிற்கு 289 ரன் (கில் 128. கோலி 59*, புஜாரா 42, ரொஹித 35, ஜதேஜா 16*, சுழல் பந்து வீச்சாளர்களான லியன், குன்னெமென், மர்பி தலா ஒரு விக்கட்) எடுத்தது.
நேற்றைய, இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி விக்கட் இழப்பின்றி 36 ரன் எடுத்திருந்தது. ரோஹித் ஷர்மா 17 ரன்னுடனும் கில் 18 ரன்னுடனும் ஆடிக்கொண்டிருந்தனர். இன்று 11 ஓவர்கள் ஆடிய பின்னர் ஒரு தவறான ஸ்ட்ரோக்கால் ரோஹித் ஆட்டமிழந்தார். அப்போது இந்திய அணியின் ஸ்கோர் 74. அதன் பின்னர் புஜாராவும் கில்லும் இணைந்து உணவு இடைவேளை வரை ஆடினர்.
40 ஓவர்கள் ஆடிய புஜாராவும் ஒரு தவறான ஆட்டத்தால் தனது விக்கட்டை இழந்தார். சுழல் பந்து வீச்சாளர்களுக்கு இன்னமும் ஆட்டக்களம் சாதகமாக மாறவில்லை. ஆஸ்திரேலிய அணி சுழல்பந்து வீச்சளர்களுக்கு ஓய்வு கொடுப்பதற்காக வேகப் பந்து வீச்சாளர்களைக் கொண்டு வந்தனர். அவர்கள் வினோதமாக வீசும் கை விக்கட்டைச் சுற்றி வரும் வகையில் (ஓவர் த விக்கட்) வீசிக்கொண்டிருந்தனர். இதனால் ஆட்டக் களத்தின் அந்தப் பகுதி பாதிப்படைந்து விரைவில் சுழல் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக மாறும் என்பது அவர்களின் திட்டமாக இருக்கும்.
இவ்வாறு பந்து வீசியபோது கால் பக்கத்தில் ஆறு முதல் ஏழு வீரகளை வேறு கேப்டன் ஸ்மித் நிறுத்தியிருந்தார். இன்று முழுவதுமே இத்தகைய ஃபீல்டிங்க்தான். இதனால் ரன் எடுக்க முடியவில்லை. இந்திய அணி 191 ரன்கள் பின் தங்கியிருக்கிறது. மூன்று நாள்களும் சராசரியாக நாளொன்றுக்கு 250 ரன்கள் அடிக்கப்பட்டிருக்கின்றன. விராட் கோலி, ஜதேஜா களத்தில் இருக்கின்றனர்.
இன்னமும் ஷ்ரேயாஸ் ஐயர், பரத், அக்சர் படேல், அஷ்வின், உமேஷ், ஷமி ஆகியோர் ஆடவேண்டும். ஸ்கோரிங் ரேட் சராசரியாக ஓவருக்கு 3 ரன் என இருக்கிறது. எனவே இந்தியா நாளை முழுவது ஆடினாலும் சுமார் 270 ரன்கள் அடிக்க முடியும்; அதாவது ஆஸ்திரேலியாவை விட சுமார் 80 ரன் அதிகம் அடிக்க முடியும். எனவே டெஸ்ட் ட்ராவை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது எனத் தோன்றுகிறது.