
கொரோனா கொரோனா என்று நடைபாதையில் நின்று கொண்டு கூவிக் கூவி விற்கிறார் ஒருவர். எதை என்று கேட்கிறீர்களா? கைகளால் தயாரிக்கப் பட்ட முகமூடிகளைத் தான். இந்த பேஸ் மாஸ்க்குகளுக்கு இப்போது தட்டுப்பாடு ஏற்பட்டு வருவதால், இது போன்று பிளாட்பார சரக்கு ஆகி விட்டது கைகளால் தயாரிக்கப்பட்ட முகமூடிகள்.
கொரோனா வைரஸ் பரவலாக்கம் குறித்த அச்சம் இப்போது சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் நகரங்களிலும் தலைதூக்கிவிட்டது. மேலும், காஞ்சிபுரத்தில் ஒருவருக்கு கொரோனா தாக்கம் குறித்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், அவருடன் பழகிய 27 பேருக்கு கொரோனா பாதிப்பு குறித்து சோதனைகள் மேற்கொள்ளப் பட்டன. அதில் அவர்களுக்கு பாதிப்பு இல்லை என்று தெரியவந்தது.
இந்நிலையில், கொரோனா பாதிப்புகளில் இருந்து தற்காத்துக் கொள்ள பலரும் மாஸ்க்குகளை அதிகம் வாங்கி வருகின்றனர். இதனைப் பயன்படுத்தி, டிஷ்யூ பேப்பர் உள்ளிட்ட பொருள்களால் சிலர் கைகளாலேயே மாஸ்குகள் செய்து விற்று வருகின்றனர்.
கொரோனா தாக்கம் தொடங்கிய நாள் முதல் பலரும் முகமூடி அணிந்து வலம் வருவதை பழக்கமாக்கிக் கொண்டுள்ளனர். ஒரு நாள் பயன் படுத்திய மாஸ்க்கை மறுநாள் பயன்படுத்தக் கூடாது என்பதால் விற்பனை அதிகரித்து வருகிறது இதனால் மாஸ்க்குகளின் விலையும் இரு மடங்கு மூன்று மடங்கு என அதையும் தாண்டி விலை ஏற்றம் கண்டு, ரூ.10க்கு விற்ற ஒரு மாஸ்க் விலை ரூ.20, ரூ. 30 என அதிகரித்து, விற்பனை செய்யப் பட்டு வருகிறது.
வெளி மாநிலங்களில் ஒரு மாஸ்க் ரூ.50க்கு விற்கப்படுகிறது. அதே நேரம் மக்கள் நல மருந்தகங்களில் ஒரு பேஸ் மாஸ்க் விலை ரூ 2 தானாம். ஆனால் இதனை பலரும் அதிக அளவில் வாங்கிச் சென்றதால், இப்போது இங்கே ஸ்டாக் இல்லை.
அதே நேரம், பேஸ் மாஸ்க்குக்கு புதிய வித டிசைனாக, டிஷ்யூ பேப்பரை வைத்து, அதனை பேஸ் மாஸ்க் போன் மடித்து, இர்புறமும் ரப்பர் பேண்ட் போட்டு அதனை விற்பனை செய்து வருகின்றனர். சிலர் டேக் நூல் போட்டு, கைகளால் தைத்து விற்பனை செய்கின்றனர்!
இந்த நிலையைப் பயன்படுத்தி ஒருவர் கொரோனா கொரோனா என்ற பெயரில் மாஸ்குகளை எப்படி விற்பனை செய்கிறார் பாருங்கள்….