ஐ.பி.எல் 2023 முதல் ஆட்டம் – சென்னை vs குஜராத், 31.03.2023, அகமதாபாத்
- முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை (178/7, ருதுராஜ் கெய்க்வாட் 92, மொயின் அலி 23, ஷிவம் டுபே 19, தோனி 14, அம்பாதி ராயுடு 12, ஷமி, ரஷீத் கான், அல்சாரி ஜோசப் தலா 2 விக்கட்) குஜராத டைட்டன்ஸ் அணி (182/5, கில் 63, விஜய் ஷங்கர் 27, சாஹா 25, சாய் சுதர்ஷன் 22, ராஜ்வர்தன் ஹங்க்ரேகர் 3/36) ஐந்து விக்கட் வித்தியாசத்தில் வென்றது.
டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் சென்னை அணியை மட்டையாடச் சொன்னது. கணுக்கை காயத்தால் அவதிப்பட்டுக் கொண்டிருந்த ருதுராஜ் கெய்க்வாட் தனது ஐ.பி.எல் 2023 ஆட்டத்தை 92 ரன்களோடு அட்டகாசமாகத் தொடங்கினார்.
ஆனால் சென்னை அணியின் பிற வீரர்கள் அவருக்கு ஒத்துழைத்து ஆடாமல் வேகமாக அவுட் ஆகி வெளியேறினர். ஒரு கட்டத்தில் ஓவருக்கு 11 ரன் என்ற கணக்கில் ஆடிக்கொண்டிருந்த அணி 178 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது பரிதாபம். நன்றாக ஆடிக்கொண்டிருந்த ருதுராஜ் நூறு அடிக்க வாய்ப்பிருந்தும் அதனைத் தவறவிட்டது அதைவிட பரிதாபம். அவரது 92 ரன் ஆட்டத்தில் அவர் 4 ஃபோர் மற்றும் 9 சிக்சர் அடித்தார்.
இதற்குப் பின்னர் ஆடவந்த குஜராத் அணியின் வீரர்கள் அனைவரும் சிறப்பாக ஆடினர். விருத்திமான் சாஹா 16 பந்தில் 25 ரன், கில் 36 பந்துகளில் 63 ரன், சாய் சுதர்ஷன் 17 பந்தில் 22 ரன், விஜய் ஷங்கர் 21 பந்தில் 27 ரன், ரஷீத் கான் 3 பந்தில் 10 ரன் என அனைவரும் சிறப்பாக விளையாடினர்.
இதனால் குஜராத் அணி 19.2 ஓவரில் 182 ரன் அடித்து ஐ.பி.எல் 2023இல் தனது வெற்றிப் பயணத்தைத் தொடங்கியது.