புது தில்லி: நாடாளுமன்றத்தில் இன்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, 2015–2016–ஆம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். நரேந்திர மோடி அரசில் அவர் தாக்கல் செய்யும் முதலாவது முழுமையான பட்ஜெட் இது என்பதால் எதிர்ப்பார்ப்புகள் கூடியுள்ளன. வழக்கம் போல், நடுத்தர மக்களின் ஆதரவைத் தக்க வைக்கவும், பெருக்கிக் கொள்ளவும் பட்ஜெட் வழி கோல வேண்டும் என்பது மோடியின் எதிர்பார்ப்பு. வருமான வரி செலுத்தும் மாத சம்பளக்காரர்கள், இந்த பட்ஜெட்டில் பல்வேறு வரிச் சலுகைகளை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அவர்கள் வருமான வரி மட்டுமின்றி, அதன் மீது கல்விக்கான கூடுதல் வரியையும் செலுத்தி வருகிறார்கள். விலைவாசி உயர்ந்துள்ள நிலையில், அதற்கேற்ப வரிவிலக்குத் தொகை உயராததால், அவர்களின் சுமை அதிகரித்துள்ளது. அதுபோல், வணிக நிறுவனங்கள் தங்கள் வர்த்தகத்துக்கான சலுகைகளை எதிர்ப்பார்த்துள்ளனர். இது குறித்து நிபுணர்கள் சிலர் தெரிவித்த கருத்துகள்…. பணவீக்க உயர்வாலும், குடும்பச் செலவுகளின் உயர்வாலும் மாத சம்பளக்காரர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு வரிச்சலுகை அவசியம். கடந்த 10 ஆண்டுகளாக அவர்களுக்கு பயனளிக்கக்கூடிய எந்த திட்டமும் அறிவிக்கப்படவில்லை. தற்போதும் வரி விலக்கு பெறுவதற்கான அதிகபட்ச போக்குவரத்து படி, மாதத்துக்கு ரூ.800 ஆக உள்ளது. ஆனால், ஒரு நாளைக்கே போக்குவரத்து செலவு ரூ.200 ஆகும்போது, இந்த தொகை உயர்த்தப்பட வேண்டும். இதுபோல், வரி விலக்குக்கான மருத்துவ செலவுத்தொகை ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் என்பது மிகக்குறைவான தொகை. நடைமுறைக்கு ஏற்ப, இத்தொகையையும் அதிகரிக்க வேண்டும். வரி விலக்குக்கான குழந்தைகள் படிப்பு செலவு, மாதத்துக்கு ரூ.100 ஆக உள்ளதை அதிகரிக்க வேண்டும். சம்பள வருமானத்தில் நிலையாக ஒரு குறிப்பிட்ட தொகையை கழித்துக் கொள்ளும் முறை மீண்டும் அமல்படுத்தப்பட வேண்டும். உபரி வருமானம் மீதான வரி விதிப்பு, எல்லா பிரிவு ஊழியர்களுக்கும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். கடந்த பல ஆண்டுகளாக, வீட்டு கடன் வட்டிக்கான கழிவு, ரூ.1 லட்சத்து 50 ஆயிரமாகவே உள்ளது. ஆனால், வீடுகளின் விலை கணிசமாக உயர்ந்து விட்ட நிலையில், இத்தொகையை குறைந்தபட்சம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரமாக உயர்த்த வேண்டும். இதன்மூலம், மாத சம்பளக்காரர்கள் சொந்த வீடு வாங்க முடிவதுடன், அனைவருக்கும் வீடு வழங்குவதற்கான அரசின் சுமையும் குறையும். கருப்பு பணத்தை மீட்க நடவடிக்கை எடுத்து வரும் சிறப்பு புலனாய்வு குழு, கருப்பு பணத்தை ஒழிக்க பல்வேறு சிபாரிசுகளை சுப்ரீம் கோர்ட்டிடமும், மத்திய அரசிடமும் அறிக்கையாக தாக்கல் செய்துள்ளது. அதை ஏற்று, கருப்பு பணத்தை ஒழிப்பதற்கான கொள்கை முடிவுகளை மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி, பட்ஜெட்டில் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரி ஏய்ப்பு செய்வதை ‘குற்றம்’ என்று அறிவிக்க சிறப்பு புலனாய்வு குழு சிபாரிசு செய்துள்ளது. எனவே, ரூ.50 லட்சத்துக்கு மேல், வரி ஏய்ப்பு செய்பவர் மீது, வருமான வரி சட்டப்படி வழக்கு தொடருவது கட்டாயமாக்கப்படும் என்று தெரிகிறது.
மத்திய பட்ஜெட் தாக்கல் செய்கிறார் அருண் ஜேட்லி: சாமானியர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவாரா?
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari