
— கட்டுரை: கே.ஜி. ராமலிங்கம் —
இந்த நாள் ஒரு இனிய நன்னாள், பொன் எழுத்துக்களால் பொறிக்க வேண்டிய ஒரு திருநாள். சாதூர்மாஸ்ய காலம் வேறு நடந்து கொண்டு இருப்பதும், பகவத் பாதாளின் சிலைதிறப்பு விழாவும் ஒன்று சேர்ந்தார்ப் போல் அமைவது பொருத்தமாக இருக்கிறது.
ஆம் ஜகத்குரு ஸ்ரீ ஆதிசங்கர பகவத் பாதாளின் சிலான்யாசம் ஜகத்குருவிற்கு குருவாய் விளங்கி, அத்வைத சித்தாந்த தத்துவத்தை உபதேசம் செய்வித்த ஸ்ரீ கோவிந்த பகவத் பாதர் ஸ்ரீ ஆதிசங்கரரை தனது சிஷ்யரான ஏற்றுக்கொண்ட நர்மதா நதி தீரத்தில் அமைந்துள்ள ஓம்காரேஷ்வர் என்ற புண்ய ஷேத்ரத்தில் பிரம்மாண்டமான முறையில் நடைபெறுகிறது. மேலும் விநாயக சதுர்த்தி தினமும் கூட சேர்ந்து கொண்டது.
“முதாகராத்த மோதகம் ஸதா விமுக்தி ஸாதகம்
கலா தராவ தம்ஸகம் விலாஸிலோக ரக்ஷகம் |” என்ற கணேஷ பஞ்சரத்னம் படைத்த பகவத் பாதாள் பாதங்களுக்கு பணிவான வணக்கங்கள்…..
குருகடாக்ஷம் பரிபூர்ணம் –
ஜகத்குருவின் குரு (ஸ்ரீ கோவிந்த பகவத்பாதாள்) – ஒரு பார்வை
கல்வியறிவும், ஞானமும், அநுபூதியும் பெற்றவர்களில் சிலபேர் நன்றாக எழுதிவைப்பார்கள். சிலபேருக்கு எழுத வராது.
ஆனாலும் தங்களுடைய அநுபவ சக்தியால் அதே அநுபவத்தைப் பெறக் கூடிய உத்தம சிஷ்யர்களை உருவாக்கி, அவர்கள் மூலம் அத்வைத ஸித்தாந்தத்தை பிரச்சாரப்படுத்துவதில் இவர்களுக்கு விசேஷத் திறமை இருக்கலாம். அந்த வகையில் கோவிந்த பகவத்பாதாளை இந்த கோஷ்டியில் சொல்லலாம்.
உயர்ந்த சிஷ்யர்களை ரூபம் பண்ணும் திறமை கோவிந்த பகவத்பாதருக்கு விசேஷமாக இருந்திருக்கிறது.
அதனால்தான் அவருடைய மஹா பெரிய சிறப்பாக நம் ஆசார்யாளே அவரைத் தான் குருவாக வரித்து அவரிடமே சிஷ்யராகி உபதேசம் பெற வேண்டும் என்று இருந்திருக்கிறது.
ஜகத்குரு என்று ஜகத்தே கொண்டாடும் ஆசார்யாள் சிஷ்ய பாவத்தோடு இருந்துகொண்டு குரு பரம்பரையை விநயமாக ஸ்தோத்ரிப்பது வழக்கம்.
குரு மஹிமையைத் தெரிவிப்பதற்கே ‘குர்வாஷ்டகம்’ என்று ஸ்தோத்ரம் செய்திருக்கிறார். (இதை தனிப் பதிவாக கொடுக்கிறேன்).
கோவிந்த பகவத்பாதர் பத்ரிகாச்ரமத்தில் இருக்கும் போது வ்யாஸாசார்யாளின் தரிசனம் அவருக்குக் கிடைத்தது.
அவதாரமாக வரப்போகிறவருக்கு கோவிந்த பகவத்பாதாள் தான் குருவாயிருக்க வேண்டுமென்ற திவ்ய ஸங்கல்பத்தை அவருக்குத் தெரிவிக்க இது நல்ல ஸமயமாயிற்று.
வருங்காலத்துக்கெல்லாம் ப்ரஹ்ம வித்யையை கற்பதற்கு இது ஒரு அங்குரார்ப்பணமான விஷயத்தைப் பற்றிய அறிவிப்பு அல்லவா?
அதற்காகத் தான் சுகாசார்யாளும் மற்றும் கெளடபாதாசார்யாளும் அங்கே கூடியிருந்தார்கள்.
வ்யாஸர் கோவிந்த பகவத்பாதருக்கு ஈச்வர நிர்மித்தமாக ஏற்பட்டிருந்த பெரிய கார்யத்தைக் கொடுத்தார்.
“நம்முடைய (ப்ரஹ்ம) ஸூத்ரத்துக்கு சரியாக அர்த்தம் பண்ணி அத்வைத வேதாந்தத்தை லோகத்தில் ஸ்தாபிப்பதற்காகப் பரமேச்வரனே அவதாரம் பண்ணப் போகிறான். ஸந்நியாஸியாயிருந்து துர்மதங்களைக் கண்டித்து வைதிக தர்மத்தை நிலைநாட்டப் போகிறான்.
லோக ஸம்ப்ரதாயத்தையொட்டி அந்த அவதார புருஷருக்கு ஒருத்தர் ஆச்ரமம் கொடுத்து உபதேசம் பண்ணவேண்டும். இந்தப் பெரிய கார்யம் உனக்கு ஸங்கல்பிக்கப்பட்டிருக்கிறது.”
“தக்ஷிணத்தின் கோடியில் கேரள தேசத்தில் அவதாரம் ஏற்படப் போகிறது. அந்த அவதாரம் செய்பவர் தனது பால்ய வயதிலேயே உபதேசம் வேண்டி அங்கிருந்து புறப்பட்டு வருவார். நாமெல்லாம் இங்கே வட கோடியில் ஹிமாலயத்தில் இருக்கிறோம்.
இத்தனை தூரம் அவர் நடந்து வரும்படி செய்து விடக்கூடாது. (காரணம்:) அவதாரம் என்பது ஒன்று; குழந்தை என்பது இன்னொன்று; அதோடு கூட சிஷ்யன் குருவைத் தேடிப் போகிற மாதிரியே குருவும் சிஷ்யனைத் தேடிப் போகவேண்டும்.
அதனால் பாதி தூரம் அவர் வருவதாகவும் பாதி தூரம் நீ போவதாகவும் இருக்கட்டும். இங்கே இருந்து மத்திய தேசத்துற்குப் போ.”
“நர்மதா தீரம் உனக்கு ஏற்கெனவே பழக்கப்பட்ட இடம். அங்கே போய், நீ மஹாபாஷ்ய உபதேசம் பெற்றுக் கொண்ட அதே அரச மரத்தடியிலேயே காத்துக் கொண்டிருக்கவும், அங்கே உள்ள குஹையில் ஆத்மாநுஸந்தானம் பண்ணிக்கொண்டு உட்கார்ந்திரு. உரிய காலத்தில் அவர் வந்து சேரும்போது ஆச்ரமம் கொடுத்து உபதேசம் பண்ணு” என்று கோவிந்த பகவத் பாதாளிடம் வ்யாஸர் சொன்னார்.
“ரவுன்ட் டேபிள் கான்ஃபரன்ஸ்’என்று உலகத் தலைவர்கள் கூடி ரிஸொல்யூஷன் பாஸ் பண்ணுகிற மாதிரி (தீர்மானம் நிறைவேற்றுவது போல்) வ்யாஸர், சுகர், கௌடபாதர், கோவிந்த பகவத்பாதர் ஆகிய நாலு பெரிய மஹான்கள் கூடிய அந்த மகாநாட்டில் ரிஸொல்யூஷன் பாஸ் ஆயிற்று!” (நன்றி – தெய்வத்தின் குரல்)
இந்த ஆதிசேஷ ஸ்வரூபம்தான் ஸ்ரீ கோவிந்த பகவத்பாதாளின் ஆதி ரூபம். ஆதி ரூபத்திற்கும் இந்த (கோவிந்த) ரூபத்திற்கும் நடுவே இன்னும் சில அவதார ரூபங்களும் அவருக்கு உண்டு. என்னென்ன? – ஒரு பார்வை
ஸெளமித்ரி, பலாத்ரிபுத்ர — ஸெளமித்ரி, பல, அத்ரி புத்ர –
ஸெளமித்ரி என்றால் ஸுமித்ரா புத்ரனான லக்ஷ்மணர். விஷ்ணு ராமராக வந்தபோது ஆதிசேஷன் லக்ஷ்மணராகக் கூட வந்தார்.
அரச மரத்தின் மேலே நாள் கணக்காக ஆஹாரமில்லாமல், தூக்கமில்லாமல் சந்த்ர சர்மா பாடம் கற்றுக்கொண்டாரே, அது எப்படி முடிந்தது என்பதற்கு இங்கே பதில் கிடைக்கிறது.
லக்ஷ்மணராக இருந்தபோது இதை விட பஹுகாலம் — பதினான்கு வருஷம் — வனவாஸத்தின் போது அவர் ஆஹாரமும் நித்திரையும் இல்லாமல் அண்ணாவுக்குப் பணிவிடை பண்ணிக்கொண்டு, காவல் காத்துக் கொண்டு இருந்திருக்கிறார்? அந்த எக்ஸ்பீரியன்ஸ் தான் இப்பவும் கைகொடுத்திருக்கிறது! இப்படிப் பண்ணவே, அப்போது ‘ட்ரெய்னிங்’ நடந்திருக்கிறது!
ஸெளமித்ரியாக வந்தவரே அப்புறம் பலராமராக க்ருஷ்ணாவதாரத்தில் வந்தார்.
தம்பியாக இருந்தவர் அண்ணாவாக வந்து அண்ணாவின் பெயரையும் வைத்துக் கொண்டார், பலராமர் என்று. பலபத்ரர் என்றும் சொல்வதுண்டு.
இங்கே “ஸெளமித்ரி பலாத்ரிபுத்ர” என்னுமிடத்தில் ‘பல’என்பது பலராமரைத்தான். அவரும் சேஷாவதாரம்.
அப்புறம் ‘அத்ரி புத்ரர்’. அதுதான் ஆத்ரேயர் என்னும் பதஞ்ஜலி.
ஹரியின் படுக்கையாக, ஹரனின் பாதரஸமாக, பூமியை தரிப்பவராக, லக்ஷ்மணராக, பலராமராக, பதஞ்ஜலியாக வந்தவர்தான் சந்த்ர சர்மாவாகப் பிறந்து கோவிந்த முனியானவர்.
இப்போது அவர் நர்மதா தீரவாஸியாக ஆனார். அதைத்தான் “உபரேவம் ஆத்ததாமா” என்று சொல்லியிருக்கிறது. ‘தாமா’ என்றால் இருப்பிடம். ரேவா என்பது நர்மதைக்கு இன்னொரு பெயர். ‘உபரேவம்’ என்றால் ‘ரேவாவுக்குப் பக்கத்தில்’, அதாவது நர்மதா தீரத்தில்.
நர்மதா தீரத்தில் வாஸ ஸ்தானத்தை உடையவர்தான் ‘உபரேவமாத்த தாமா’. இத்தகைய பல ரூபங்களைக் கொண்டவர் விஜயம் பண்ணட்டும் — “ஜயதாத்” — அவருடைய பேரும் கீர்த்தியும் எப்போதும் வெற்றிகரமாக விளங்கிக் கொண்டு இருக்கும் ஸ்ரீ கோவிந்த பகவத்பாதாள் நர்மதை நதிக்கரைக்கு வந்து சேர்ந்தார்.
பூர்வாச்ரமத்தில் எந்த மரத்துக்கு மேலே சிஷ்யராக இருந்துகொண்டு வ்யாகரண உபதேசம் கேட்டாரோ, அதே மரத்தின் அடியில் ஒரு குகையில், தாம் ப்ரஹ்ம வித்யோபதேசம் செய்வதற்கான சிஷ்யரை எதிர்பார்த்து உட்கார்ந்து கொண்டு அப்படியே நிஷ்டையில் ஆழ்ந்து விட்டார்.
ஜகத்குரு ஆதிசங்கரர், காலடியை நீங்கி, நர்மதை ஆற்றை அடைந்த போது, கோவிந்த பகவத் பாதாள், நர்மதை ஆற்றாங்கரையில் சமாதி நிலையில் இருந்தார்.
அந்நேரத்தில், நர்மதை ஆற்றில் எதிர்பாராது பெருக்கெடுத்த வெள்ளத்தை தடுக்க, தன் கமண்டலத்தைக் கொண்டு தடுத்து, சமாதி நிலையில் இருந்த கோவிந்த பகவத் பாதாளின் உயிரைக் காத்தார்.
ஆதிசங்கரரை நோக்கி நீ யார் எனக் கேட்டார். அதற்கு சங்கரர் அத்வைத தத்துவத்தில் செய்யுள் நடையில் சில சுலோகங்களில் நான் யார் என்பதை விளக்கியதை கேட்ட கோவிந்த பகவத் பாதர், சங்கரரை தன் சீடராக ஏற்றுக் கொண்டார்.
கோவிந்த பகவத் பாதரின் ஆணைப்படி, சங்கரர், உபநிடதம், பிரம்ம சூத்திரம் மற்றும் பகவத் கீதை ஆகிய இந்து சமயத்தின் மூன்று அடிப்படை நூல்களுக்கு பாஷ்யம் எழுதி, அத்வைத வேதாந்தத்தை இந்தியா முழுவதும் தானும், தனது சீடர்கள் மூலமும் பரப்பினார்.
கோவிந்த பகவத்பாதளின் நினைவைப் போற்றும் வகையில், ஆதிசங்கரர் தான் எழுதிய பஜ கோவிந்தம் எனும் நூலிலும் குரு தோத்திரத்திலும் (குர்வாஷ்டகம்) பகவத்பாதளின் பெருமைகளை விளக்கியுள்ளார்.
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர