
ஒருநாள் கிரிக்கட் உலகக் கோப்பைப் போட்டி
35ஆம் நாள் – இங்கிலாந்து vs நெதர்லாந்து
புனே – 08.11.2023
முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
இங்கிலாந்து அணி (339/9, பென் ஸ்டோக்ஸ் 108, டேவிட் மலான் 87, கிரிஸ் வோக்ஸ் 51,டி லீட் 3/74, வான் பீக் 2/88, ஆர்யன் தத் 2/67) நெதர்லாந்து அணியை (37.2 ஓவர்களில் 179, தேஜா நிடமனுரு 41*, ஸ்காட் எட்வர்ட்ஸ் 38, வெஸ்லி பரேசி 37, எங்கல்பிரக்ட் 33, மொயின் அலி 3/42, அடில் ரஷீத் 3/54, டேவிட் வில்லி 2/19 ) 160 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
பூவாதலையா வென்ற இங்கிலாந்து அணி முதலில் மட்டையாடத் தீர்மானித்தது. பென் ஸ்டோக்ஸின் அதிரடியான ஆட்டத்தில் கிடைத்த முதல் உலகக் கோப்பை சதம் இங்கிலாந்தை சரிவிலிருந்து மீட்டது, இறுதியில் அவர்கள் சவாலான ஸ்கோரான 339/9ஐப் பதிவு செய்தனர். சாம்பியன்ஸ் டிராபிக்குத் தகுதி பெறுவதற்காக ஆடிய இந்த ஆட்டத்தில் ஸ்டோக்ஸ் மற்றும் கிறிஸ் வோக்ஸ் இடையே ஒரு நல்ல பார்ட்னர்ஷிப் அமைந்தது.
இங்கிலாந்து 6 விக்கெட்டுக்கு 192 ரன்களுக்கு சரிந்தபோது ஒரு நல்ல வாய்ப்பை வீணடித்தது போல் தோன்றியது. முதலில், டேவிட் மலான் 74 பந்தில் 87 ரன்களுடன் சரியான தளம் அமைத்தார். இங்கிலாந்து 21வது ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 133 ரன்களை எட்டியது.
ஆனால் லோகன் வான் பீக்கை ரிவர்ஸ்-ராம்ப் செய்ய முயன்ற ஜோ ரூட் (28 ரன்), அவரைத் தொடர்ந்து ஹாரி ப்ரூக் (11 ரன்), ஜாஸ் பட்லர் (5 ரன்), மொயின் அலி (4 ரன்) ஆகியோர் ஆட்டமிழந்த பிறகு இங்கிலாந்து அணி 6/192 என்ற ஸ்கோருக்கு வந்தது. ஆர்யன் தத் பந்துவீச்சில் 41 ரன்களில் அவுட் ஆக இருந்தபோதும் ஸ்டோக்ஸ் உறுதியாக நின்றார். 58 பந்துகளில் தனது அரைசதத்தை எட்டினார். 45ஆவது ஓவரில் 3 சிக்ஸ், 1 ஃபோர் அடித்து ரன்ரேட்டை அதிகப்படுத்தினார்.
கடினமான இலக்கைத் துரத்திய நெதர்லாந்து அணிக்கு மேக்ஸ் ஓ டவுட், காலின் ஆக்கர்மேன் இருவரும் விரைவில் ஆட்டமிழந்தனர். பரேசி (37 ரன்), எங்கல்பிரக்ட் (33 ரன்), எட்வர்ட்ஸ் (38 ரன்), லீட் (10 ரன்), தேஜா நிடமனுரு (41 ரன்) ஆகியோர் மட்டுமே நெதர்லாந்து அணியில் நிலைத்து ஆடினர்.
பிற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர். எனவே 37.2 ஓவர்களில் 179 ரன்னுக்கு நெதர்லாந்து அணி ஆல் அவுட் ஆனது.
இங்கிலாந்து அணி 160 ரன் கள் வித்தியாசத்தில் தனது இரண்டாவது வெற்றியைப் பதிவுசெய்தது. சாம்பியன் ட்ராபிக்கு இங்கிலாந்து அணி தகுதி பெற அதிகமான வாய்ப்பு உள்ளது. நாளை நியூசிலாந்து இலங்கையை எதிர்த்து பெங்களூருவில் விளையாடுகிறது.
அந்த ஆட்டத்தில் நியூசிலாந்து வெற்றிபெற்றால் அரையிறுதிக்குத் தகுதி பெறும். இன்று பெங்களூருவில் மழை பெய்திருக்கிறது. நாளையும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டால் பாகிஸ்தான் அரையிறுதிக்குச் செல்லும் வாய்ப்பு உள்ளது.