
ஒருநாள் கிரிக்கட் உலகக் கோப்பைப் போட்டி
37ஆம் நாள் – ஆப்கானிஸ்தான் vs தென் ஆப்பிரிக்கா
அகமதாபாத் – 10.11.2023
முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
ஆப்கானிஸ்தான் அணி (244, அஸ்மத்துல்லா ஒமர்ஜாய் 97*, ரஹமத் ஷா 26, நூர் அகமது 26, ரஹமத்துல்லா குர்பாஸ் 25, கோயட்சி 4/44, லுங்கி இங்டி 2/69, கேசவ் மகராஜ் 2/25) தெ ஆப்பிரிக்க அணி (47.3 ஓவர்களில் 247/5, ரஸ்ஸி வான் டெர் டுஸ்ஸன் 76*, அண்டிலே பெஹ்லுவாயோ 39*, குவிண்டன் டி காக் 41, மர்கரம் 25, டேவிட் மில்லர் 24, பவுமா 23, ரஷீத் கான் 2/37, நபி 2/35) 5 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
பூவாதலையா வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் மட்டையாடத் தீர்மானித்தது. முதல் 10 ஓவர்களில் இரண்டு விக்கட் இழப்பிற்கு 41 ரன் எடுத்தது. தொடக்க வீரர் ரஹமத்துல்லா குர்பாஸ் 25 ரன் எடுத்து ஒன்பதாவது ஓவரில் ஆட்டமிழந்தார்.. மற்றொரு தொடக்கவீரர் இப்ராஹிம் சத்ரன் 15 ரன் எடுத்து 10ஆவது ஓவரில் ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரில் மேலும் ஒரு விக்கட் விழுந்தது. அச்சமயத்தில் அஸ்மத்துல்லா ஒமர்ஜாய் ஆடவந்தார். அவர் இறுதி வரை ஆடி 97 ரன் அடித்தார். அவரால் சதம் அடிக்க முடியவில்லை. பிற தென் ஆப்பிரிக்க அணி வீரர்கள் அவருக்கு ஜோடியாக அதிக நேரம் நின்று ஆடாததால், அந்த அணி 50 ஓவர் முடிவில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 244 ரன் எடுத்தது. ஜெரால்ட் கோயட்சி 44 ரன் கொடுத்து 4 விக்கட் வீழ்த்தினார்.
குறைவாக ரன் எடுத்ததால் ஆப்கானிஸ்தான் நிகர ரன்ரேட் குறைவாக இருக்கும் என்பதால் இந்த நிலையிலேயே, இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் கூட அரையிறுதிக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
எளிமையான இலக்கை அடைய விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி வழக்கம் போல், இரண்டாவதாக ஆடும்போது, சொதப்பினார்கள். பவுமா (23 ரன்) 11ஆவது ஓவரிலும் டி காக் (43 ரன்) 14ஆவது ஓவரிலும் ஆட்டமிழந்தனர். மர்க்ரம் (25 ரன்) 24ஆவது ஓவரிலும் கிளாசன் (10 ரன்) 28ஆவது ஓஅவரிலும் ஆட்டமிழந்தனர். ரஸ்ஸி டுஸ்ஸன் (ஆட்டமிழக்காமல் 76 ரன்) உடன் இணைந்து முதலில் டேவிட் மில்லர் (24 ரன்) 38ஆவது ஓவர் வரை ஆடினார்.
பின்னர் வந்த அண்டிலே பெஹ்லுவாயோ 37 பந்துகளில் 39 ரன் அடித்து, குறிப்பாக கடைசி மூன்று பந்துகளை 6, 4, 6 என அடித்து தென் ஆப்பிரிக்க அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார். ஆட்டநாயகனாக ரஸ்ஸி வான் டெர் டுஸ்ஸன் அறிவிக்கப்பட்டார்.
நாளைய ஆட்டங்கள்
நாளை இரண்டு ஆட்டங்கள் நடைபெற உள்ளன. முதல் ஆட்டம் புனேயில் ஆஸ்திரேலிய அணிக்கும் வங்கதேச அணிக்கும் இடையே பகல் நேர ஆட்டமாக நடைபெறவுள்ளது. இரண்டாவது ஆட்டம் இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே கொல்கொத்தாவில் நடைபெறவுள்ளது.
பாகிஸ்தான் அரையிறுதிக்குத் தகுதி பெறுமா?
தற்போது நியூசிலாந்து அணி 10 புள்ளிகள், 0.743 ரன்ரேட்டுடன் நாலாவது இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் 8 புள்ளிகள், 0.036 ரன்ரேட்டுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது. நாளை நடைபெறுகிற ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி இங்கிலாந்து அணியை வென்றால் 10 புள்ளிகளைப் பெறும். ஆனால் நியூசிலாந்து அணியை விட அதிக ரன்ரேட் பெற வேண்டும்.
பாகிஸ்தான் அணி 0.75 என்ற ரன்ரேட்டைப் பெற, அந்த அணி முதலில் பேட் செய்தால் 288 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வெல்ல வேண்டும். ஒருவேளை இங்கிலாந்து அணி முதலில் பேட் செய்தால் பாகிஸ்தான் அணி 16 பந்துகளில் வெற்றி பெற வேண்டும். இரண்டும் நடக்க வாய்ப்பே இல்லை. எனவே நியூசிலாந்து அணி இந்திய அணியை அரையிறுதியில் மும்பையில் நவம்பர் 15ஆம் தேதி சந்திக்கும்.