
ஒருநாள் கிரிக்கட் உலகக் கோப்பைப் போட்டி
38ஆம் நாள் – இரண்டு ஆட்டங்கள் – 11.11.2023
முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெற்றன. முதல் ஆட்டம் வங்கதேசம், ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையே புனேயில் பகல்நேர ஆட்டமாக நடைபெற்றது. இரண்டாவது ஆட்டம் இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கிடையே கொல்கொத்தாவில் பகலிரவு ஆட்டமாக நடைபெற்றது. இரண்டுமே முக்கியத்துவம் இல்லாத ஆட்டங்கள்.
வங்கதேசம் vs ஆஸ்திரேலியா
வங்கதேச அணியை (306/8, ஹிருதய் 74, ஷண்டோ 45, லிட்டன் தாஸ் 36, தசிட் ஹசன் 36, அப்பாட் 2/61, சாம்பா 2/32) ஆஸ்திரேலிய அணி (44.4 ஓவர்களில் 307/2, மிட்சல் மார்ஷ் 177*, ஸ்மித் 63*, வார்னர் 53) 8 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
பூவாதலையா வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. வங்கதேச அணி வீரர்கள் அனைவரும் பொறுப்புடன் ஆடினர். ஆஸ்திரேலிய ஃபீல்டிங் மிகச் சிறப்பாக இருந்தது. வங்கதேச வீரர்கள் ஷண்டோ (45 ரன்), மகமதுல்லா (32 ரன்), நசும் அகமது (7 ரன்) ஆகிய மூவரையும் ரன் அவுட் செய்தனர். தவ்ஹித் ஹிருதய் 74 ரன்கள் எடுத்தார். 50 ஓவர் முடிவில் வங்கதேச அணி எட்டு விக்கட் இழப்பிற்கு 306 ரன் எடுத்தது.
இரண்டாவதாக ஆடவந்த ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் ட்ராவிஸ் ஹெட் 10 ரன்களில் மூன்றாவது ஓவரில் ஆட்டமிழந்தார். வார்னர் 23ஆவது ஓவர் வரை விளையாடி 61 பந்துகளில் 53 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். அதன் பின்னர் மிட்சல் மார்ஷ் 9 சிக்சர், 17 ஃபோர்களுடன் 132 பந்துகளில் 177 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அவருடன் ஜோடி சேர்ந்து ஆடிய ஸ்மித் 63 ரன்கள் எடுத்தார். இதனால் 44.4 ஓவர்களில் இரண்டு விக்கட் இழப்பிற்கு 307 ரன் எடுத்து வெற்றி பெற்றது. மிட்சல் மார்ஷ் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். ஏழு தொடர் வெற்றிகளுடன் ஆஸ்திரேலியா 14 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் மூன்றாம் இடம் பிடித்துள்ளது.
இங்கிலாந்து vs பாகிஸ்தான்
இங்கிலாந்து அணி (337/9, பென் ஸ்டோக்ஸ் 84, ஜோ ரூட் 60, ஜானி பெயர்ஸ்டோ 59, ரவுஃப் 3/64, அஃப்ரிதி 2/72, வாசிம் 2/74) பாகிஸ்தான் அணியை (43.3 ஓவர்களில் 244, ஆகா சல்மான் 51, பாபர் ஆசம் 38, ரிஸ்வான் 35, ஹரிஸ் ரவுஃப் 35, ஷகீல் 21, டேவிட் வில்லி 3/56, அதில் ரஷீத் 2/55, அட்கின்சன் 2/45, மொயின் அலி 2/60) 93 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
பூவாதலையா வென்ற முதலில் மட்டையாடத் தீர்மானித்தது. இங்கிலாந்து அணியின் முதல் 6 பேட்டர்கள் 47.2 ஓவர்கள் வரை ஆடினர். டேவிட் மலான் (31 ரன்), பெயர்ஸ்டோ (59 ரன்), ரூட் (60 ரன்), ஸ்டோக்ஸ் (84 ரன்), பட்லர் (27 ரன்), ப்ரூக் (30 ரன்) ஆகியோ சிறப்பாக ஆடி 47.2 ஓவரில் 308 ரன்கள் சேர்த்தனர். எனவே 50 ஓவர்களில் இங்கிலாந்து அணி 9 விக்கட் இழப்பிற்கு 37 ரன் எடுத்தது.
பின்னர் ஆடவந்த பாகிஸ்தான் அணிக்கு இரண்டாவது பந்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. அப்துல்லா ஷபீக் வில்லியின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ஃபகர் ஜமான் மூன்றாவது ஓவரில் ஆட்டமிழந்தார். பாபர் ஆசம் மற்றும் ரிஸ்வான் ஜோடி இணைந்து சிறிது ரன் சேர்த்தனர். ஆனால் பாபர் ஆசம் (38 ரன்) 14ஆவது ஓவரிலும் ரிஸ்வான் (36 ரன்) 23ஆவது ஓவரிலும் ஆட்டமிழந்தனர். அதன் பின்னர் வந்த வீரர்களில் ஆகா சல்மான் (51 ரன்) சுறுசுறுப்பாக ஆடினார். கடைசி மூன்று வீரர்கள் வீசப்பட்ட அத்தனை பந்துகளையும் அடித்தனர். அதனால் கடைசி விக்கட்டுக்கு 53 ரன் பார்ட்னர்ஷிப் கூட வந்தது. இறுதியில் பாகிஸ்தான் அணி 43.3 ஓவர்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 244 ரன் எடுத்தது, இதனால் இங்கிலாந்து அணி 93 ரன் கள் வித்தியாசத்தில் வென்றது.
இங்கிலாந்து, பாகிஸ்தான் இரண்டு அணிகளும் இந்த ஆட்டத்தின் முடிவால் எந்தவிதப் பயனும் பெறப்போவதில்லை. இங்கிலாந்து அணி 337 ரன் அடித்தபோதே பாகிஸ்தான் அணி அரையிறுதிக்குத் தகுதி பெறும் வாய்ப்பை இழந்துவிட்டது. நாளை, லீக் ஆட்டங்களின் கடைசி ஆட்டத்தில் இந்தியாவும் நெதர்லாந்து அணியும் விளையாடுகின்றன. இதுவும் முக்கியத்துவம் இல்லாத ஆட்டம். இந்தியா ஒன்பது ஆட்டங்களிலும் வெற்றி பெறுகிறதா எனப் பார்க்கவேண்டும். இந்திய அணி இதுவரை ஆடாத வீரர்களை விளையாட வைத்துப் பார்க்கலாம்.
முதல் அரையிறுதி ஆட்டம் இந்திய நியூசிலாந்து அணிகளுக்கிடையே மும்பை வான்கடே மைதானத்தில் நவம்பர் 15ல் நடைபெறும். இரண்டாவது அரையிறுதி ஆட்டம் ஆஸ்திரேலியாவிற்கும் தென் ஆப்பிரிக்க அணிக்கும் இடையே கொல்கொத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும்.