மும்பை:
தமிழகத்தில் தான் வங்கிகளில் நிதி மோசடி அதிகபட்சம் நடந்துள்ளதாக ரிசர்வ் வங்கி #Reservebank கூறியுள்ளது. மத்திய நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரத்தின் சொந்த மாநிலம் தமிழகம் என்பதும், அவர் நிதி அமைச்சராக இருந்த போதுதான் பெரும்பாலான மோசடிப் பேர்வழிகளும் வங்கிகளில் கடன் பெற்று இப்போது கம்பி நீட்டி வருவதும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.
இப்படி, தமிழகத்தில் அதிகாரிகள் துணையோடு நடந்துள்ள வங்கி மோசடிகளால் ரூ.2,450 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக 170 வழக்குகள் பதியப்பட்டு தமிழகம் முதலிடத்தில் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
வங்கிகளில் பல ஆயிரம் கோடி கடன் வாங்கிவிட்டு அதை திருப்பிச் செலுத்தாமல் தொழில் அதிபர்கள் வெளிநாட்டுக்கு தப்பி செல்லும் சம்பவங்கள் இப்போது அதிகரித்து வருகின்றன. ஒவ்வொரு மோசடிகளும் தனித்தனியாக வெளிப்படும்போது, பொதுமக்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. அத்துடன், மோசடிப் பண அளவும் ஒருவரை ஒருவர் விஞ்சும் வகையில் அதிகரித்தும் வருகிறது.

கிங் பிஷர் நிறுவன அதிபர் விஜய் மல்லையா ரூ.9 ஆயிரம் கோடியை எஸ்பிஐ.,யில் ஏமாற்றி ஓடினார் என்றபோது அதிர்ச்சி காட்டிய மக்கள், அடுத்து அவரை விஞ்சும் வகையில் வைர வியாபாரி நிரவ் மோடி ரூ.11,400 கோடியை பிஎன்பி.,யில் ஏமாற்றி விட்டார் எனும் போது மேலும் அதிர்ந்தனர். இருப்பினும் இந்த மோசடிக்கு வங்கி அதிகாரிகளே உடந்தையாக இருந்துள்ளனர். கடன் பெறும் தொழில் அதிபர்களிடம் இருந்து முறையான ஆவணங்களைப் பெறாமலும், போலியான பாதுகாப்பு ஆவணங்களும் கொடுத்து முறைகேடுகளுக்கு துணை போயிருக்கிறார்கள்.
தமிழகத்தில் இந்தியன் வங்கியில் தலைவராக இருந்த கோபாலகிருஷ்ணன் காலத்தில் போலி ஆவணங்கள் மூலம் கடன் கொடுத்ததில் நடைபெற்ற முறைகேடுகள் மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இன்றளவும் பேசும் விஷயமாக உள்ளது.
ப.சிதம்பரத்தின் உறவினரான தொழிலதிபர் ஏ.சி.முத்தையா, பொதுத் துறை வங்கியான ஐ.டி.பி.ஐ, வங்கியில் ரூ.665 கோடிக்கு மோசடி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது. பல்வேறு வங்கிகளில் போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து ரூ.665 கோடி மோசடி செய்த வழக்கில் தொழிலதிபர் ஏ.சி.முத்தையா மீது சிபிஐ., குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ததும் விசாரணை நடத்தப் பட்டதும் பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தாமல் இல்லை.

‘ஃபர்ஸ்ட் லீசிங் கம்பெனி இந்தியா லிமிடெட்’ (எஃப்எல்சிஐஎல்) நிறுவனத்தின் தலைவராக இருந்த ஏ.சி. முத்தையா மீது 3 குற்றப் பத்திரிகைகளை எழும்பூர் கூடுதல் தலைமை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்தது. ஏ.சி. முத்தையா, எஃப்எல்சிஐஎல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருந்த ஃபாரூக் இரானி ஆகியோர் கடந்த 1973-ஆம் ஆண்டு ஃபர்ஸ்ட் லீஸிங் என்ற பெயரில் நிதி நிறுவனத்தைத் தொடங்கி நடத்தி வந்தனர். பின்னர் நிறுவனத்தின் வளர்ச்சிக்காக ஐடிபிஐ வங்கி உள்ளிட்ட பல்வேறு வங்கிகளில் பல கோடி ரூபாய் கடன் பெற்றனர்.
இந்த நிதியை நிறுவனத்துக்குப் பயன்படுத்தாமல் வேறு தேவைகளுக்காகப் பயன்படுத்தியுள்ளது நிறுவனத்தின் தணிக்கையின்போது தெரியவந்தது. இதில் ரூ.273.99 கோடியை ஐடிபிஐ வங்கி மட்டும் கடனாக வழங்கியது. யூகோ வங்கி ரூ.142.94 கோடியும், பாரத ஸ்டேட் வங்கி ரூ.248.46 கோடியும் கடன் வழங்கின.
இந்தக் கடனைப் பெறுவதற்கு வங்கிகளில் போலியான கணக்குப் பரிவர்த்தனைகள், ஆவணங்களைச் சமர்ப்பித்திருப்பது வங்கிகளில் செய்யப்பட்ட தணிக்கைகளின் போது தெரிய வந்தது.
அதே நேரத்தில் கடனைப் பெற்றுக் கொண்ட ஃபர்ஸ்ட் லீஸிங் நிறுவனம் கடனைத் திருப்பிச் செலுத்த தங்களிடம் பணம் இல்லை எனக் கூறியது. இதையடுத்து ஐடிபிஐ உள்ளிட்ட வங்கிகள் கொடுத்த புகாரின் பேரில் சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. இது கடந்த 2017 டிசம்பரில் தெரியவந்த அதிர்ச்சிதான்!
வங்கிகள் இப்படி முறையற்ற வழிகளில் முறைகேட்டில் ஈடுபட்டு கடன் கொடுக்கும் போது, கடன் தொகைக்கு ஈடான சரியான சொத்துகளை அடமானமாகப் பெறத் தவறி விடுகின்றனர். அவற்றில் கூடுதல் மதிப்பீட்டு முறைகேட்டில் ஈடுபட்டு, நிறுவனம் திவாலாகும் நிலை வரும் போது, கடன் தொகைக்கான சரியான இழப்பீட்டைப் பெற இயலாமல் தவிக்கின்றனர்.

வைர வியாபாரி நிரவ் மோடியின் மோசடி வழக்கில் வங்கி அதிகாரிகள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து ரிசர்வ் வங்கி அளித்துள்ள புள்ளி விவரத்த்ல், பல ஆண்டுகளாகவே வங்கி அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபட்டுக் கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது.
2013-ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் 2018-ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை நாடு முழுவதும் 1232 வங்கி மோசடி வழக்கு பதியப்பட்டுள்ளன. இது வங்கி அதிகாரிகள் துணையோடு நடந்துள்ள மோசடிகள் அதனால் ரூ.2,450 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
தென் மாநிலங்கள் மற்றும் மகாராஷ்டிராவில் மட்டும் 609 வழக்குகள் பதிவாகியுள்ளன. இதில் தமிழகத்தில் 170 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. இதுவே நாட்டில் பதிவான வழக்குகள் எண்ணிக்கையில் மிக அதிகம். அந்த வகையில் தமிழகமே முதலிடத்தில் உள்ளது. அடுத்து ஆந்திராவில் 157 வழக்கும், கர்நாடகாவில் 125 வழக்கும், மகாராஷ்டிராவில் 107 வழக்கும் பதிவாகியிருக்கிறது. ராஜஸ்தானில் 38 வழக்குகள் பதியப் பட்டிருந்தாலும் அதிக பட்சமாக ரூ.1096 கோடி மோசடி நடந்துள்ளது.
வங்கி ஊழியர்கள் மட்டும் ஏறக்குறைய 1,232 மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். குறைந்தபட்சம் ரூ. ஒரு லட்சம் முதல் மோசடியிலும், திருட்டிலும் ஈடுபட்டுள்ளனர் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

ரிசர்வ் வங்கி பிறப்பித்த உத்தரவின்படி, வங்கியில் நடக்கும் ரூ. ஒரு லட்சம் அதற்கு அதிகமான தொகையுள்ள மோசடிகள் வங்கியில் நடந்தால் அதுகுறித்து ரிசர்வ் வங்கிக்கு தெரிவிக்க வேண்டும். ஆனால், குறைவான தொகை கொண்ட மோசடிகளும், ரூ. ஒரு லட்சத்துக்கும் அதிகமான பல மோசடிகளும் ரிசர்வ் வங்கிக்கு வங்கி நிர்வாகத்தால் தெரியப்படுத்தப்படவில்லை. இதன் மூலம் ஆயிரக்கணக்கான கோடிகள் இழப்பு ஏற்பட்டுள்ளதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து வங்கி மேலாளர் ஒருவர் கூறுகையில், ”தென் மாநிலங்களில் உள்ள வங்கிகளில் அதிகமான வங்கி மோசடிகள் நடக்க முக்கிய காரணம் அங்கு அதிகமான வங்கிக்கிளைகள் இருப்பதுதான். அதிலும் நகர்ப்புறங்களில் அதிகமான கிளைகள் இருப்பது. மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தென் மாநிலங்களில் உள்ள வங்கிகளில் அதிகமான டெபாசிட்கள் செய்யப்படுவதும் வங்கி ஊழியர்கள் எளிதாக மோசடி செய்ய காரணமாக அமைகிறது. ஊழியர்கள் குற்றச் செயல்களிலும் மோசடியிலும் ஈடுபட்டால் அதற்கு மன்னிப்பு தரக் கூடாது” என்று தெரிவித்தார்.
ஏற்கெனவே பஞ்சாப் நேஷனல் வங்கியில் நிரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோர் செய்த ரூ.12 ஆயிரம் கோடி மோசடியால் நாட்டு மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ள நிலையில், வங்கி ஊழியர்களே கடந்த 3 ஆண்டுகளில் ரூ.2 ஆயிரம் கோடிக்கு மேலாக மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது மக்களை மேலும் நிம்மதியற்ற சூழலுக்குக் கொண்டு செல்லும்.




பிஜேபி அரசà¯à®•à¯à®•à¯à®®à¯ இதில௠சம பஙà¯à®•௠உளà¯à®³à®¤à¯ அதை மறைதà¯à®¤à¯ காஙà¯à®•ிரஸà¯à®•à¯à®•௠மடà¯à®Ÿà¯à®®à¯‡ சமà¯à®ªà®¨à¯à®¤à®®à¯ உளà¯à®³à®¤à¯ போல௠கடà¯à®Ÿà¯à®°à¯ˆà®•ள௠எழà¯à®¤à®µà¯‡à®£à¯à®Ÿà®¾à®®à¯. பதà¯à®¤à®¿à®°à®¿à®•ையாளரà¯à®•ள௠நடà¯à®¨à®¾à®¯à®•மாக இரà¯à®•à¯à®• வேணà¯à®Ÿà¯à®®à¯. ஒர௠சாராரà¯à®•à¯à®•௠மடà¯à®Ÿà¯à®®à¯ எதிராக எழà¯à®¤à¯à®µà®¤à¯ நலà¯à®² மாணà¯à®ªà¯ அலà¯à®².