பெங்களூர்:
வடகிழக்குப் பகுதி, தேசிய நீரோட்டத்தில் இணைந்துவிட்டது என்றும், இந்தத் தேர்தலில் வடகிழக்கு மக்கள் வெறுப்பு அரசியலை நிராகரித்து விட்டனர் என்றும் பிரதமர் மோடி பெருமிதத்தோடு தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலம் தும்கூருவில் அமைந்துள்ள ராமகிருஷ்ண விவேகானந்த ஆஸ்ரமத்தில் ஞாயிற்றுக் கிழமை அன்று சகோதரி நிவேதிதாவின் 150ஆம் ஆண்டு பிறந்த தின விழா நடந்தது. பிரதமர் மோடி பெங்களூருவில் இருந்தபடியே இந்த விழாவில் வீடியோ கான்பிரன்ஸிங் மூலம் உரையாற்றினார்.
மோடி தனது உரையில் “வடகிழக்கு மாநிலங்களில் நடந்த தேர்தலில் பாஜக.,வுக்குக் கிடைத்த வெற்றி என்னை மிகவும் மகிழ்ச்சியடையச் செய்துள்ளது. வடகிழக்கு மாநில மக்கள் வெறுப்பு அரசியலை நிராகரித்து, ஒட்டுமொத்தமாக பாஜக.,வுக்கு வாக்களித்து ஆட்சியில் அமர வைத்துள்ளனர். வடகிழக்கு மாநிலங்களில் இதற்கு முன் ஆட்சியில் இருந்த காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசுகள் தேசிய நீரோட்டத்தில் இருந்து விலகியே இருந்தன. ஆனால், என் அரசு அதை எல்லாம் விலக்கி, வடகிழக்கு மாநிலங்களை தேசிய நீரோட்டத்தில் இணைக்கவே முயற்சி செய்தது.
மத்தியில் ஆளும் பாஜக அரசு, நாட்டில் உள்ள அனைத்துப் பகுதி மக்களும் ஒன்றாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் பணியாற்றி வருகிறது. அதனுடன் யாரும் தாங்கள் தனிமைப் பட்டதாக உணர்ந்து விடக்கூடாது என்ற எண்ணத்தில் பணியாற்றி வருகிறது. நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்தால், பயங்கரவாதத்துக்கு சரியான பதிலடி தர முடியும். அதற்கு ஏற்றார்ப் போல் வடகிழக்கு மக்கள் மிகப் பெரிய மாற்றத்தை அளித்திருக்கிறார்கள். இந்த மக்கள் அளித்த வெற்றி நாடு முழுவதும் அனைவரும் ஒன்றாக இணைந்து கொண்டாடும் ஒரு சூழலை உண்டாக்கி இருக்கிறது… என்று பேசினார்.