குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய பிரதமர் மோடி எதிர்க்கட்சித் தலைவர் ராகுலுக்கு பதிலடி கொடுத்து ஆக்ரோஷமாக காங்கிரஸின் இரட்டை வேடத்தையும் நாட்டுக்கு எதிரான அதன் செயல்களையும் பற்றி பேசினார். அவற்றிலிருந்து..
— தமிழில் / குரல் : ஆர்.சுதர்ஸன் —
அவசரநிலைக்காலம் அதிகாரப் பேராசை மட்டுமல்ல, அரசியல் சட்டத்திற்கு எதிரானதும் கூட
எமர்ஜென்ஸி. சுயநலத்தின் உச்சகட்டம். அதிகாரப் பேராசை காரணமாக, யதேச்சாதிகார மனோநிலை காரணமாக, தேசத்தின் மீது திணிக்கப்பட்டது. யதேச்சாதிகார அரசின் ஆட்சி. தேசத்தின் ஒட்டுமொத்தக் கட்டமைப்பினையும், சின்னாபின்னப்படுத்தும் பாவம் புரியப்பட்டது.
அரசாங்கங்களை, கவிழ்ப்பது, ஊடகங்களை நசுக்குவது, அனைத்துவிதச் அராஜகங்களும், அரசியல் சட்டத்தின் உணர்வுக்கு எதிராக, அரசியல் சட்டத்தின் ஒவ்வொரு சொல்லுக்கு எதிராகவும் இருந்தன.
இந்தியாவுக்கு எதிராகச் சதி செய்யும் சூழலமைப்புகள் விளைவுகளைச் சந்திக்க நேரும் என்று எச்சரிக்கும் மோதிஜி
2014இலே, அரசாங்கப் பொறுப்புக்கு வந்த பிறகு, தேசத்தின் முன்பாக, ஒரு மிகப்பெரிய சவால் என்றால், காங்கிரஸின் சூழலமைப்பும் ஒன்றாக இருந்தது. இந்த அமைப்புத் தான், 70 ஆண்டுக்காலம் வரை, தழைத்துச் செழித்திருந்தது. இந்தச் சூழலமைப்பிற்கு நான், எச்சரிக்கை விடுக்க விரும்புகிறேன்.
இந்தச் சூழலமைப்பு உறுதியாக இருக்கிறது, இந்த தேசத்தின் வளர்ச்சிப் பயணத்தைத் தடுப்போம் என்று. தேசத்தின் முன்னேற்றத்தை தடம் புரளச் செய்வோம் என்று. நான் இன்று இந்த, சூழலமைப்பிற்குத் தெரிவிக்க விரும்புகிறேன், அதனுடைய அனைத்துச் சதிகளுக்குமான பதில், இப்போது அதன் மொழியிலேயே கிடைக்கும்.
இளைஞர்களின் எதிர்காலத்தோடு விளையாடியவர்கள் அனைவரையும் எங்கள் அரசாங்கம் தண்டிக்கும்
மதிப்பிற்குரிய குடியரசுத்தலைவர் அவர்கள், தன்னுடைய பேருரையினிலே, வினாத்தாள் கசிவு குறித்தும் கவலை தெரிவித்திருந்தார். நானும் கூட, தேசத்தின் அனைத்து மாணவர்களுக்கும், தேசத்தின் அனைத்து இளைஞர்களுக்கும் கூற விரும்புகிறேன். எங்கள் அரசாங்கம், இப்படிப்பட்ட சம்பவங்கள் நடக்காமல் தடுப்பதிலே, மிகவும் தீவிரமாக இருக்கிறது.
மேலும் போர்க்கால வேகத்திலே, நாங்கள், எங்கள் கடமைகளை நிறைவேற்றுவதற்காக, ஒன்றன்பின் ஒன்றாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். இளைஞர்களின் எதிர்காலத்தோடு விளையாடிப் பார்ப்பவர்களை, கண்டிப்பாகத் தப்பிக்க விட மாட்டோம்.
நீட் தேர்வு விஷயத்திலே, ஒட்டுமொத்த தேசத்திலும், தொடர்ந்து கைதுகள் நடைபெற்று வருகின்றன. மத்திய அரசாங்கம், முன்னமே கூட, ஒரு கடுமையான சட்டத்தை இயற்றியிருக்கிறது.
தேர்வுகள் நிர்வகிக்கப்படும், ஒட்டுமொத்த அமைப்பினையும், ஒழுங்குபடுத்துவதற்காக, அவசியமான முன்னெடுப்புகள், மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.