மக்களவையில் குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் போது, எதிர்க்கட்சித் தலைவர் ஆகியிருக்கும் ராகுல் பேச்சுக்கு பதில் அளித்து பிரதமர் மோடி பேசியவற்றில் இருந்து…
தமிழில் / குரல் : ராமஸ்வாமி சுதர்ஸன்
3ஆவது முறையும் ஆட்சியை ஒப்படைத்திருக்கும் மக்களாகிய மகேசர்கள்
என்னைப் போல இந்த தேசத்திலே பொதுவாழ்க்கையிலே பலர் இருக்கிறார்கள். அவர்கள் குடும்பத்திலே யாரும், கிராமத்தலைவராகக் கூட இதுவரை இருந்ததில்லை, கிராமமன்ற உறுப்பினராகவும் இருந்ததில்லை. அரசியலிலே எந்தத் தொடர்பும் இருந்ததில்லை. ஆனால் இன்று, பல மகத்துவம் வாய்ந்த பதவிகளை, அடைந்து விட்டு, தேசத்திற்கு சேவை புரிந்து வருகிறார்கள்.
இதற்கான காரணம் என்றால், பாபாசாகேப் ஆம்பேட்கர் அளித்திருக்கும் அரசியலமைப்புச் சட்டம் தான், இது தான் எங்களைப் போன்றோருக்கு சந்தர்ப்பத்தை அளித்திருக்கிறது.
மேலும் என்னைப் போன்ற அநேகர் இருக்கின்றார்கள், இவர்களுக்கெல்லாம், பாபாசாகேப் ஆம்பேட்கர் வாயிலாக அளிக்கப்பட்ட அரசியல்சட்டம், இதுவரை வருவதற்கான வாய்ப்பை அளித்திருக்கிறது.
மேலும் மக்களாகிய மகேசர்கள் அதன் மீது தங்கள் ஆமோதிப்பை அளித்திருக்கிறார்கள். 3ஆவது முறையும் ஆட்சியை ஒப்படைத்திருக்கிறார்கள்.
தன்னுடைய பாதுகாப்பிற்காக, பாரதம், எதை வேண்டுமானாலும் செய்யும்
2014ற்கு முன்பாக, அப்படியும் ஒரு காலம் இருந்தது, அப்போதெல்லாம், தீவிரவாதிகள் விரும்பிய இடத்துக்கு, விரும்பிய நேரத்துக்கு, இஷ்டத்துக்கு வருவார்கள், தாக்குதல் நடத்துவார்கள். ஆனால் அரசாங்கங்களோ, சும்மாவே பார்த்திருந்தார்கள்.
வாயைத் திறக்கக்கூட திராணியில்லாமல் இருந்தார்கள். இன்று, 2014ற்குப் பிறகான இந்துஸ்தானம், வீட்டிற்குள்ளே புகுந்து திருப்பி அடிக்கிறது. மேலும், தீவிரவாதத்தை ஆதரிப்பவர்களுக்கும் கூட, பாடம் புகட்டும் வல்லமையை நாம் வெளிப்படுத்தி இருக்கிறோம்.
தேசத்தின் ஒவ்வொரு குடிமகனும் நன்கு அறிவான், தன்னுடைய பாதுகாப்பிற்காக, பாரதம், எதை வேண்டுமானாலும் செய்யும் என்று.
எங்களைத் தோற்கடித்து விட்டது போன்ற பிரமையை நிலைநாட்ட முயற்சி செய்யும் காங்கிரஸ்
காங்கிரசின் வரலாற்றிலேயே, இது தான் முதல் தடவை. அவர்கள் தொடர்ந்து மூன்று முறைகளாக, காங்கிரஸால் 100 என்ற எண்ணிக்கையைத் தாண்ட முடியவில்லை. தன்னுடைய தோல்வியை, காங்கிரஸ் ஏற்றுக் கொள்ளுமேயானால் நன்றாக இருக்கும்.
மகேசர்களான மக்கள் அளித்திருக்கும் கட்டளையை, சிரமேற் தாங்க வேண்டும். ஆனால் இவர்களோ, தலைகீழாக அல்லவா நின்று கொண்டிருக்கிறார்கள்!! மேலும் காங்கிரஸ், மற்றும் அதன் சூழலமைப்பு, இந்தியாவின் குடிமக்களின் மனதிலே, எங்களைத் தோற்கடித்து விட்டது போன்ற பிரமையை, அவர்கள், நிலைநாட்ட முயற்சி செய்கிறார்கள்.