போராட்ட எதிரொலி; வங்கதேச பிரதமர் ராஜினாமா, ஆட்சியில் ராணுவம்!

Published:

sheik hasina bangladesh - 2026
#image_title

மாணவர் போராட்டம் காரணமாக பிரதமர் பதவியில் இருந்து விலகிய ஷேக் ஹசீனா, சகோதரியுடன் ராணுவத்துக்குச் சொந்தமான சி-130 விமானம் மூலம் நாட்டை விட்டு வெளியேறினார். இதை அடுத்து வங்கதேசத்தில் ராணுவ ஆட்சி அமலானது. ஷேக் ஹசீனா திரிபுரா தலைநகர் அகர்தலா சென்று, அங்கிருந்து தில்லி செல்ல உள்ளதாகக் கூறப்பட்ட நிலையில், அவர் உ.பி. மாநிலம் ஹிண்டன் ஏர்பேஸுக்கு வந்தார்.  பின்னர் அவர் வேறு நாட்டிற்கு செல்ல திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஷேக் ஹசீனாவின் மகள் வீடு லண்டனில் இருப்பதாகவும், அவர் அங்கே சென்று தங்கக் கூடும் என்றும் கூறப்பட்டது. எனினும் ஷேக் ஹசீனாவுக்கு லண்டனில் அரசியல் ரீதியாக அடைக்கலம் கொடுக்க அந்நாடு தயங்கியதாகவும் தகவல் வெளியானது. 

இட ஒதுக்கீடு தொடர்பாக ஏற்பட்ட மாணவர் போராட்டம் வலுவடைந்ததால் வேறு வழியின்றி, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். தலைநகரான டாக்காவை விட்டு வெளியேறினார். இதனை தொடர்ந்து இங்கு ராணுவ ஆட்சி பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டிற்கு எதிராக மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறையில் பலர்  உயிரிழந்தனர் இதை அடுத்து, பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என்று கோரிக்கைகள் எழுப்பப்பட்டன.

வங்கதேசத்தில் 1971-ம் ஆண்டு போரில் பங்கேற்றவர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த 2018-ல் அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியதையடுத்து அரசு நிறுத்தி வைத்தது.

ALSO READ:  சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

கடந்த சில மாதங்களுக்கு முன் இடஒதுக்கீட்டை மீண்டும் அமல்படுத்த போவதாக அந்நாட்டு அரசு அறிவித்தது. இதை எதிர்த்து வங்கதேச மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். பேராட்டம் வன்முறையாக மாறியதில் இதுவரை 105 பேர் உயிரிழந்தனர்.  இதை அடுத்து அனைத்து பள்ளி, கல்லூரிகள், பல்கலைக்கழங்கள் மூடப்பட்டன. சமூக வலைதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. வன்முறையில் பொது சொத்துக்கள் சேதமடைந்தன. குறிப்பாக வங்கதேச நாட்டின் சிறுபான்மையினராக உள்ள இந்துக்களின் சொத்துக்கள் குறிவைத்து சூறையாடப்பட்டன.  கடைகள் வணிகத்தலங்கள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன.

பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலக கோரி மாணவர்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தி வந்த நிலையில் இன்று ஷேக் ஹசீனா பிரதமர் பதவியில் இருந்து விலகினார். அவர், டாக்காவை விட்டு வெளியேறி, தனது சகோதரி ஷேக் ரிஹானாவுடன் சேர்ந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் பாதுகாப்பான இடத்திற்கு சென்றதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன..

இதன் பின்னர் போராட்டக்காரர்கள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் இல்லத்தை  முற்றுகையிட்டு சூறையாடினர்.  ஷேக் ஹசீனாவின்  படுக்கையறையில் படுத்துக் கொண்டும் வீட்டில் உள்ள பொருள்களை சுருட்டிக் கொண்டும், குறிப்பாக ஷேக் ஹசீனாவின் ஆடைகளை கையில் பிடித்தபடியும் படங்கள் எடுத்து அவற்றை சமூகத் தளங்களில் பகிர்ந்தனர். கடந்த வருடம் இலங்கையில் நடந்தது போன்ற அதே பாணியில் இந்த பிரச்சனைகள் நடந்து முடிந்தன.

ALSO READ:  தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

இதுகுறித்து பிரதமர் அலுவலக உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், “வன்முறை வெடித்ததும், பிரதமர் இல்லத்தில் இருந்து ஷேக் ஹசீனா வெளியேறிவிட்டார். டாக்காவில் நிலைமை பதற்றமாக உள்ளது. போராட்டக்காரர்கள் பிரதமர் இல்லத்தை முற்றுகையிட்டுள்ளனர்” என்றார்.

ஷேக் ஹசீனா பதவி விலகியதை அடுத்து, போராட்டக்காரர்கள் வெற்றிப் பேரணி நடத்தினர். அப்போது, அந்நாட்டின் தந்தையும், முன்னாள் அதிபருமான முஜிபுர் ரஹ்மானின் சிலைகளை போராட்டக்காரர்கள் உடைத்தனர். முஜிபுர் ரஹ்மானின் மகள்தான் ஷேக் ஹசீனா என்பது குறிப்பிடத் தக்கது.

பதவி விலகி பிரதமர் வெளியேறிய நிலையில், வங்கதேசத்தில் ராணுவ ஆட்சி அமலாகியுள்ளது. போராட்டம் வெடித்த நிலையில் பிரதமர் பதவியில் இருந்து விலகும்படி  ஷேக் ஹசீனாவுக்கு ராணுவமும் கெடு விதித்து இருந்தது.

வங்கதேசத்தில் ராணுவ ஆட்சி அமலான நிலையில், அந்நாட்டு மக்களுக்கு ராணுவ தளபதி வக்கார் ஜமான் நாட்டு மக்களுக்கு உரை ஆற்றினார் அதில், ஷேக் ஹசீனா ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டு வெளியேறினார். இடைக்கால ஆட்சி அமைக்க நாங்கள் உதவி செய்வோம். முக்கியக் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ராணுவம் ஆலோசனை நடத்தி வருகிறது. இந்தக் கடினமான நேரத்தில் நாட்டு மக்களின் ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறோம். அனைவரின் பிரச்னைகள் தீர்த்து வைக்கப்படும். மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு வீடுகளுக்குச் செல்ல வேண்டும். நாட்டில் அவசர நிலையோ அல்லது கட்டுப்பாடுகளோ தேவையில்லை. இன்று இரவுக்குள் பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என்று குறிப்பிட்டார். 

ALSO READ:  சதுர்த்திக்கு சுதேசி, மண் பிள்ளையாரையே வாங்குங்கள், விற்பனை செய்யுங்கள்: பிரதமரின் அறைகூவல்!

இந்நிலையில் இந்தியாவில் தஞ்சமடைந்த ஷேக் ஹசீனா உத்தர பிரதேச மாநிலம் ஹிண்டன் ஏர்பேஸ் வந்தடைந்தார். அங்கே பாரதத்தின் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் அவரை சந்தித்து ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.

இதனிடையே ஷேக் ஹசீனா இந்தியாவுக்கு வந்த நிலையில் இந்தியாவில் ஏற்பட்டுள்ள நிலைமை குறித்தும் உலக அரசியல் நிலவரம் குறித்தும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார்.

வங்கதேசத்தை அடுத்துள்ள மாநிலங்கள் உஷார் படுத்தப்பட்டன. எல்லைப்புற மாநிலங்களில் இரவு முதல் தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் வங்கதேசத்தில் கடும் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கும் சிறுபான்மை இந்துக்களுக்கு பாதுகாப்பு அளிக்க கோரியும் அவர்கள் மேற்கு வங்க எல்லை வழியாக இந்தியா வந்தால் அவர்களுக்கு மத்திய அரசால் அண்மையில் அமல்படுத்தப்பட்ட சிஏஏ சட்டம் மூலம் குடியுரிமை வழங்கி ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்துள்ளன.

Related articles

Recent articles

spot_img