சபரிமலைக்கு விடுமுறை தினத்தில் வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பக்தர்களுக்கு தேவையான வசதிகள் அனைத்தும் செய்து தரப்பட்டு வருவதாக திருவாங்கூர் தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.
சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் கார்த்திகை 1 முதல் 41 நாள் மண்டல பூஜை வழிபாடு துவங்கி நடைபெற்று வருகிறது. தினமும் அய்யனை தரிசிக்க 70 ஆயிரம் பேர் மெய்நிகர் வரிசை மூலமும் பத்தாயிரம் பேர் உடனடி முன்பதிவு மூலமும் அனுமதிக்கப்படுகின்றனர்.
தற்போது சபரிமலைக்கு தினமும் 80 ஆயிரம் பேர் முன்பதிவு செய்து இருந்தாலும், முன்பதிவு செய்ததில் 10 முதல் 15 சதவீதம் பக்தர்கள் வருவதில்லை. இதனால் சராசரியாக பக்தர்களின் வருகை குறைந்து வரும் நிலையில், சனி ஞாயிறு கிழமைகளில் மற்றும் விடுமுறை தினங்களில் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
நேரடி முன்பதிவு மையம் பம்பையில் செயல்படுகிறது. இங்கும் ஆதார் அட்டையுடன் முன்பதிவு செய்து சபரிமலை ஐயனைக் காண ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். சனிக்கிழமை 87,216 பேர் மலை ஏறியுள்ளனர். இதில், 9,822 ஸ்பாட் புக்கிங் இருந்தது.
இன்று ஞாயிற்றுக்கிழமை சுமார் ஒரு லட்சம் பக்தர்களுக்கு மேல் ஐயப்பனை தரிசிக்க வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 80 ஆயிரத்துக்கு உட்பட்ட பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து சென்றுள்ளனர்.
சன்னிதானம், பம்பை, நிலக்கல் போன்ற அனைத்து இடங்களிலும் கடும் நெரிசல் ஏற்பட்டுள்ளது. கடந்த வாரம் இந்த இடங்களில் மக்கள் கூட்டம் குறைவாக இருந்தது. பம்பையில் வாகனங்களை நிறுத்தும் வசதி உள்ளதாகவும், பக்தர்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
வரும் நாட்களில் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கும் என போலீசார்
தெரிவித்தனர். அப்பம், அரவணை கவுண்டர்கள் முன்பு பிரசாதம் வாங்க கூட்டம் அலை மோதுகிறது. செங்கநல்லூர் ரயில் நிலையத்தில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது.
மரகூட்டம் பகுதியில் மூன்று இடங்களில் பக்தர்களை கட்டுப்படுத்தி வருகின்றனர். ஒரே நேரத்தில் பலர் சன்னிதானம் வருவதை தடுக்கவே இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்
கண்ணூரில் விபத்து
கண்ணூரில் ஐயப்பன் பக்தர்கள் சென்ற மினி பேருந்து கவிழ்ந்து இருவரின் நிலை கவலைக்கிடமானது. கர்நாடகாவை பூர்வீகமாகக் கொண்ட ஐயப்பன்கள் பயணித்த மினி பஸ் விபத்துக்குள்ளானது. யாத்ரீகர் குழுவில் இருந்த 6 பேர் காயமடைந்தனர். அவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. விபத்து அம்பாலா சாலை சந்திப்பில் நடந்துள்ளது இந்த சம்பவம் காலை 7 மணியளவில் நடந்தது. இன்று சபரிமலைக்கு சென்றுவிட்டு, பழையகண்டியில் இருந்து பிலத்தராவுக்கு பேருந்து சென்று கொண்டிருந்தது.
சாலையோரத்தில் இருந்த மின்கம்பத்தில் மோதிய பேருந்து அருகில் உள்ள வயல்வெளியில் கவிழ்ந்தது. உள்ளூர்வாசிகள் முதலில் ஓடினார்கள். தகவல் கிடைத்ததும் போலீசார் வந்தனர். வாகனத்தின் முன் பகுதி முற்றிலும் சேதமடைந்தது.
இந்த நிலையில் சபரிமலைக்கு வேன், கார், பஸ் போன்ற வாகனங்களில் வரும் பக்தர்கள் குறிப்பிட்ட வேகத்தில் வந்து கவனமுடன் வாகனங்களை இயக்கி விபத்து ஏற்படாமல் இருக்க கேரளா காவல்துறை போக்குவரத்து துறை கேட்டுக் கொண்டுள்ளது.
சபரிமலை யாத்திரையின் போது, வாகனத்தை இயக்கும் போது மிக மிக கவனமாக இயக்கவும், களைப்புடன் வாகனத்தை இயக்க வேண்டாம் என்றும் கேரளா போக்குவரத்து துறை அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த ஆண்டு சபரிமலைக்கு மண்டல காலத்தில் ஐயப்பனை தரிசிக்க வரும் பக்தர்கள்ம் ராஜபாளையம்ம் குற்றாலம், தென்காசி, செங்கோட்டை வழி அதிக அளவில் வந்து செல்கின்றனர்.
குற்றால அருவிகளில் தண்ணீர் போதுமான அளவு விழுகின்றது. இந்தப் பக்கத்தில் உள்ள ஐயப்பன் படை வீடு கோவில்களான குளத்துப்புழா, ஆரியங்காவு, அச்சன்கோவில் போன்ற கோவில்களுக்குச் செல்ல விரும்பும் பக்தர்கள் அதிக அளவில் பொதிகை ரயில், கொல்லம் ரயில், சிலம்பு அதிவிரைவு ரயில்களில் செங்கோட்டைக்கு வந்து, இங்கிருந்து முக்கிய சுற்றுலா தலங்களுக்குச் சென்று பின்னர் சபரிமலைக்குச் செல்கின்றனர்.
சபரிமலைக்கு சென்று திரும்பும் பக்தர்கள் குற்றாலத்தில் குளித்து, திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில், திருச்செந்தூர் கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு செல்கின்றனர்.
ஆந்திரா பக்தர்கள் அதிக அளவில் தற்போது வருகின்றனர். குற்றாலத்தில் ஐயப்ப பக்தர்கள் வருகையால் சீசன் காவி வேஷ்டி துண்டு விற்பனை அதிகரிக்கவில்லை. ஆனால் நேந்திரங்காய் சூப் விற்பனை சுடச்சுட நடந்து வருகிறது.