கேரள வனப் பகுதிகளுக்குள் சுற்றுலா பயணிகள் நுழைய அதிரடி தடை விதித்துள்ளது கேரள அரசு. தேனி மாவட்டம், குரங்கணி வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி மலையேற்றம் சென்ற 36 பயணிகளில் 9 பேர் பலியானதைத் தொடர்ந்து, கேரள அரசு இந்த அதிரடி முடிவை அறிவித்துள்ளது.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே உள்ள குரங்கணி வனப்பகுதி, சுற்றுலாப் பயணிகள் சென்று வரும் இடமாக இருந்தது. இங்கே, சென்னையில் இருந்து 24 பேரும், ஈரோடு, திருப்பூர் பகுதிகளைச் சேர்ந்த 12 பேரும் மலையேற்றம் சென்றனர். இவர்கள் சென்ற கொழுக்குமலை வனப்பகுதி கேரள வனத்துறைக்கும், தமிழக வனத்துறைக்கும் இடைப்பட்ட பகுதி. இந்த வனப்பகுதியில் பயணிகள் குழு மலைஏற்றம் செய்துவிட்டு இறங்கும் போது, திடீரெனப் பற்றிய காட்டுத் தீயில் சிக்கிக் கொண்டனர்.
ஆனால், திடீரெனப் பற்றிய இந்தக் காட்டுத் தீயில் இருந்து எப்படி தப்பிப்பது எனத் தெரியாமல், பதற்றத்தில் மலை இடுக்குகளில் குதித்து மேற்கொண்டு செல்ல இயலாமல் தீவிபத்தில் சிக்கி 9 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
இதை அடுத்து அங்கு நடந்த தீவிர மீட்புப்பணிக்குப் பின் 27 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மேலும், மீட்புப்பணியில் ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இந்த மீட்புப் பணியில் தமிழக வனத்துறை, தீயணைப்பு துறை ஆகியவற்றோடு கேரள வனத்துறையும் இணைந்து மேலும் யாரேனும் சிக்கியிருக்கிறார்களா என்று தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கேரள அரசு இன்று அதிரடியாக உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. கேரள வனத்துறைக்கு சொந்தமான பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் நுழைவதற்கு தடை விதித்ததுடன், மலை ஏற்றம் செல்பவர்கள், இயற்கை பயணத்தை அனுபவிக்க வரும் சுற்றுலாப் பயணிகள் இனி அனுமதி இல்லாமல் கேரள வனப்பகுதிக்குள் செல்ல முடியாது. அவ்வாறு சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கேரள அரசு தெரிவித்துள்ளது.