தமிழகத்தில் நடைபெறும் காவிரி ஆர்ப்பாட்டம் போராட்டங்களில் திமுக.,வுடன் கூட்டணிக் கட்சியினர் என்ற வகையில் காங்கிரஸாரும் கலந்து கொண்டு வந்தனர். இந்நிலையில், இன்று மத்திய அரசுக்கு எதிராக, நாடு முழுதும் நடைபெறும் போராட்டங்களின் ஒரு பகுதியாக, தமிழக காங்கிரஸாரும் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ளச் சென்றனர்.
சென்னை அடையாறில் இருந்து சேப்பாக்கம் நோக்கி தடையை மீறி பேரணி சென்ற காங்கிரஸ் கட்சியினர் கைது செய்யப் பட்டனர். கராத்தே தியாகராஜன் தலைமையில் சேப்பாக்கத்தில் உண்ணாவிரதமிருக்க பேரணியாக சென்ற காங்கிரஸ் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.
காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று நாடு முழுவதும் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படுகிறது. மத்திய அரசுக்கு எதிராகவும், நாடாளுமன்றத்தை சரியாக நடக்கவிடாமல் செய்ததற்காகவும், இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை நாடு முழுதும் நடத்துவதாக காங்கிரஸ் கட்சி அறிவித்திருந்தது. இன்று தில்லி ராஜ்கட்டில் கட்சித் தலைவர் ராகுல் காந்தி இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கி வைத்தார்.