நாடாளுமன்றம் முடக்கப்பட்டதைக் கண்டித்து, இன்று நாடு தழுவிய அளவில் பாஜக.,வினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது பகுதியில் அவை முழு நாள்களுமே முடங்கிப் போனது. பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி உள்ளிட்ட பிரச்னைகளைச் சொல்லி காங்கிரஸாரும், ஆந்திரப் பிரதேசத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரி தெலுகு தேசம் கட்சி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினரும், காவிரி மேலாண்மை வாரியம் கோரி அதிமுக.,வினரும் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனால் அவை முழுதும் முடங்கிப் போனது.
இந்நிலையில், நாடாளுமன்றம் எதிர்க்கட்சிகளால் முடக்கப்பட்டதைக் கண்டித்து, இன்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரதத்தை பாஜக., நடத்தியது. நாடாளுமன்ற எம்.பி.க்கள் தங்கள் தொகுதிகளில் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் அமர்ந்தனர். பாஜக., எம்.பி.க்களுக்கு ஆதரவாக பிரதமர் நரேந்திர மோடியும் இன்று உண்ணாவிரதத்தில் கலந்து கொள்வதாக அறிவித்தார்.
ஆனால், அவரது சென்னை பயணம் முன்னமே திட்டமிடப் பட்டிருந்ததால், சென்னை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு, தனது வழக்கமான அலுவல்களில் ஈடுபட்டார். சென்னைக்கு அருகே திருவிடவெந்தையில் இந்திய ராணுவ கண்காட்சியை தொடங்கி வைத்துப் பேசினார். அடையாறு புற்றுநோய் மையத்துக்கு சென்று ஐம்பதாம் ஆண்டு நினைவுக் கட்டிடங்களைத் திறந்து வைத்தார். பின்னர் மாலை தில்லி சென்று தனது உண்ணாவிரதத்தை நிறைவு செய்தார்.
இந்நிலையில் பாஜக.,வின் தலைவர் அமித்ஷா, கர்நாடக மாநிலத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளதால், அங்கேயே உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார். கர்நாடக தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ள அமித்ஷா, கட்சியினருடன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். அவருடன் அண்மையில் கட்சியில் இணைந்து நாடாளுமன்ற மாநிலங்களவைக்குத் தேர்வு செய்யப்பட்ட தொழிலதிபர் ராஜீவ் சந்திரசேகரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் அமர்ந்தார்.
இதனிடையே பா.ஜ.க வினர் இன்று நாடு முழுவதும் உண்ணாவிரதம் மேற்கொண்ட இந்த தினம், சர்வ ஏகாதசி என்றும், ஏகாதசி உபவாசம் மிகவும் சிறப்பானது என்றும், பா.ஜ.க. எப்பொழுதும் ஆன்மீகப் பாதையில் செல்வதன் எடுத்துக்காட்டு இது என்றும் சமூக வலைத்தளங்களில் சிலர் கருத்துகளைப் பதிவு செய்தனர்.