இந்திய சுற்றுலாத் துறையை மனதில் வைத்து நான் incredible india என்றதொரு கருத்தை முன் வைத்தேன். நீங்கள் செல்லும் இடங்கள் பற்றிய நல்ல புகைப்படங்களை எனக்கு அனுப்பி வையுங்கள் என்று கேட்டுக் கொண்டேன். மிக யதார்த்தமாக நான் விடுத்த விண்ணப்பம் இது. ஆனால் இதற்கு கிடைத்த வரவேற்பு எனக்கு மிகப் பெரிய பிரமிப்பை ஏற்படுத்தியது. பல இலட்சம் பேர்கள் இந்தியாவின் மூலை முடுக்கெங்கிலும் எடுக்கப்பட்ட படங்களை அனுப்பி வைத்தார்கள், இவை போன்ற இடங்கள் கூட நம் நாட்டில் இருக்கின்றனவா என்பது குறித்து இந்திய அரசின் சுற்றுலாத் துறையோ, மாநிலங்களின் சுற்றுலாத் துறைகளோ கற்பனை கூட செய்து பார்த்திருக்க மாட்டார்கள். இவை அனைத்தும் ஒரு தளத்தில் வந்து குவிந்தன. இவற்றின் மீது அரசுக்கு கொஞ்சம் கூட பொருட்செலவு ஏற்படவே இல்லை. மக்கள் இந்தப் பணியை முன்னெடுத்துச் சென்றார்கள்.
கடந்த அக்டோபர் மாதத்திற்கு முன்பாக எனது முதல் மனதின் குரலில் காந்தி ஜெயந்தி பற்றித் தெரிவித்திருந்தேன்;. அக்டோபர் மாதம் 2ம் தேதியன்று நாம் காந்தியடிகளின் பிறந்த நாளைக் கொண்டாடுகிறோம் என்று கூறியிருந்தேன். ஒரு காலத்தில், நாட்டுக்காக கதராடைகள் என்று இருந்தது, ஆனால் இன்றோ பேஷனுக்காக கதராடைகள் என்று ஆக வேண்டும் இல்லையா? நீங்கள் கதராடைகளை வாங்குங்கள் என்று நான் மக்களிடம் வேண்டுகோள் விடுத்தேன். அதிகம் இல்லை, கொஞ்சமாகவாவது வாங்குங்கள் என்றேன். கடந்த ஓராண்டுக்காலத்தில் கதராடைகள் விற்பனை சுமார் இரண்டு பங்காகி இருக்கிறது என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இவை அனைத்தும் அரசு விளம்பரங்கள் வாயிலாக நடைபெறவில்லை, இதை செயல்படுத்த கோடிக்கணக்கான ரூபாய்கள் செலவு செய்யப்படவில்லை, இது மக்கள் சக்தியின் வெளிப்பாட்டால், உணர்வால் ஏற்பட்ட மாற்றம்.
ஏழையின் குடிசையில் விறகடுப்பு எரிகிறது, ஓரிடத்தில் குழந்தை அழுகிறது, ஏழைத் தாய்க்கு எரிவாயு சிலிண்டர் கிடைக்க வேண்டுமா இல்லையா என்று ஒரு முறை நான் மனதின் குரலில் வெளிப்படுத்தி இருந்தேன். இது தொடர்பாக நான் வசதிகளோடு இருப்பவர்களிடம் ஒரு விண்ணப்பம் விடுத்திருந்தேன். மானியத் தொகையை உங்களால் துறக்க முடியாதா என்று கேட்டிருந்தேன். சிந்தியுங்கள். இந்த நாட்டின் 30 இலட்சம் குடும்பங்கள் எரிவாயு மீதான மானியத்தைத் துறந்திருக்கிறார்கள் என்பதை நான் மிக்க மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். இப்படித் துறந்தவர்கள் பணக்காரர்கள் இல்லை. ஓய்வு பெற்ற ஒரு ஆசிரியர், கணவனை இழந்த ஒரு பெண், மானியத்தைத் துறக்க வரிசையில் நின்று கொண்டிருப்பதை நான் ஒரு முறை ஒரு தொலைக்காட்சியில் பார்த்தேன். சமுதாயத்தின் சாமான்யர்கள் கூட, மத்தியத் தட்டு மக்கள், மத்தியத் தட்டில் அடிநிலையில் இருப்பவர்கள் ஆகியோருக்கு மானியத்தைத் துறப்பது என்பது கடினமான ஒன்று தான். ஆனாலும் கூட, அவர்கள் இதைத் துறந்தார்கள். இது அமைதிப் புரட்சி இல்லையா? இது மக்கள் சக்தியின் வெளிப்பாடு இல்லையா? அரசுத் துறைகளின் அதிகார வட்டத்திற்கு அப்பாலும் ஒரு மிகப் பெரிய மக்கள் சக்தி இருக்கிறது, அது வல்லமை பொருந்தியது, ஆற்றல் மிக்கது, உறுதிப் பாடு உடையது என்ற பாடத்தை அரசுகளும் கற்றுக் கொள்ள வேண்டும். எந்த அளவுக்கு அரசுகள் மக்களை இணைத்துக் கொண்டு செயல்படுகின்றனவோ, அந்த அளவுக்கு சமுதாய மாற்றங்களை ஏற்படுத்தும் ஊக்கியாக அவை வெற்றி காண முடியும்.
எவற்றின் மீது எனக்கு நம்பிக்கை இருந்ததோ, மனதின் குரல் நிகழ்ச்சிக்குப் பிறகு அவையெல்லாம் எனக்கு உறுதிப்பாடாகவே மாறி விட்டன. ஆகையால் இன்று நான் மனதின் குரல் வாயிலாக, மீண்டும் ஒரு முறை மக்கள் சக்திக்கு பல கோடி வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். மக்கள் நான் கூறிய சின்னச் சின்ன விஷயங்களைக் கூட ஒரு பொருட்டாக எண்ணி, நாட்டு நலனுக்காக தங்களுடையதாக்கிக் கொண்டார்கள், இதில் தங்களையும் இணைத்துக் கொண்டார்கள். இதை விட சந்தோஷம் அளிக்கக் கூடியது வேறு என்ன இருக்க முடியும்?


