இந்த முறை மனதின் குரலில் நான் ஒரு புதிய அணுகுமுறையைக் கையாள நினைத்தேன். நீங்கள் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு, உங்கள் கேள்விகள், உங்கள் ஆலோசனைகள் ஆகியவற்றைப் பதிவு செய்யுங்கள் என்று நாட்டு மக்களிடம் நான் வேண்டுகோள் விடுத்தேன். மனதின் குரலில் அவற்றைப் பரிசீலனை செய்வேன் என்று கூறியிருந்தேன். 55000த்துக்கும் மேற்பட்ட குடிமக்களிடமிருந்து எனக்கு அழைப்புக்கள் வந்தன என்பது மகிழ்ச்சி அளிக்கும் விஷயம். சியாச்சென், கட்ச், காம்ரூப், கஷ்மீர், கன்னியாகுமரி ஆகிய தொலைவான பகுதிகளிலிருந்து எல்லாம் அழைப்புக்கள் வந்திருக்கின்றன. அழைப்புக்கள் வராத பகுதி என்று ஏதும் இல்லை என்ற அளவுக்கு இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் ஆலோசனைகள் குவிந்திருக்கின்றன. இது ஒரு சுகமான அனுபவம். அனைத்து வயதினரும் ஆலோசனைகளை அளித்திருக்கிறார்கள். சில ஆலோசனைகளை கேட்பதே கூட சுகமளிப்பதாக இருந்தது, மற்றவை மீது என் குழுவினர் கவனத்தை செலுத்தி வருகிறார்கள். நீங்கள் ஓரிரு நிமிடங்கள் வரை பேசியிருக்கலாம், ஆனால் என்னைப் பொறுத்த வரை உங்கள் ஆலோசனைகளும், செய்திகளும் மிகவும் மகத்துவம் வாய்ந்தவை. அரசு உங்கள் ஆலோசனைகள் மீது கண்டிப்பாக தன் முழுமையான கவனத்தை செலுத்தும்.
நாலாபுறங்களிலும் negativity எதிர்மறை எண்ணங்கள் நிறைந்திருக்கின்றன என்று பொதுவாகத் தோன்றும்; ஆனால் என்னுடைய அனுபவமோ வேறு மாதிரியானது. இந்த 55000 பேர்களும் எந்தத் தங்கு தடையுமின்றி தங்கள் கருத்துக்களை எப்படி வேண்டுமானாலும் வெளிப்படுத்தி இருக்க முடியும், எதை வேண்டுமானாலும் கூறியிருக்க முடியும்; ஆனால் அவர்களின் அனைத்துக் கருத்துக்களும் ஆக்கபூர்வமாக, நல்ல ஆலோசனைகள் அளிக்கும் விதமாக, புதுமையானவையாக, மனதின் குரலை ஒட்டியே வெளிப்படுதியிருப்பது போல அமைந்திருக்கிறது. இது எனக்கு மிகுந்த ஆச்சரியத்தையும் ஆனந்தத்தையும் ஏற்படுத்துகிறது. அதாவது, பொதுமக்கள் எத்தனை ஆக்கபூர்வமான எண்ணங்களைச் சுமந்து கொண்டிருக்கிறார்கள் என்பது நமக்கும் நம் நாட்டுக்கும் எத்தனை பெரிய முதலீடு? ஏதோ ஒன்றிரண்டு சதவீதம் அழைப்புக்களில் தீவிரமான குற்றச்சாட்டுக்கள் இருக்கலாம். ஆனால் எஞ்சியிருக்கும் 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட அழைப்புக்கள் சக்தியும் ஆனந்தமும் அளிக்கக் கூடிய தகவல்களாகவே இருந்தன. மேலும் குறிப்பாக, மாற்றுத் திறனாளிகளிடமிருந்து வந்த அழைப்புக்கள், அதிலும் பார்வைக் குறைபாடு உடையவர்களிடமிருந்து அதிகம் அழைப்புக்கள் வந்தன. இவர்களால் தொலைக்காட்சிகளைப் பார்க்க முடியாது, ரேடியோவை அவசியம் கேட்பார்கள் என்பது ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம். பார்வைக் குறைபாடு உள்ளவர்களுக்கு வானொலி என்பது எத்தனை முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது என்பதை இதிலிருந்து என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது. எனக்கு ஒரு புதிய பரிமாணம் புலப்படுகிறது. அவர்கள் தெரிவித்திருக்கும் அரிய தகவல்கள் அரசு புரிந்துணர்வோடு செயல்பட போதுமானதாக இருக்கிறது.
ராஜஸ்தான் மாநிலத்தின் அல்வர் பகுதியைச் சேர்ந்த பவன் ஆச்சார்யா அவர்கள் என்னோடு ஒரு தகவலைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார். பவன் ஆச்சார்யா அவர்களின் ஆலோசனையை நாட்டு மக்கள் அனைவரும் கேட்க வேண்டும், அதைப் பின்பற்ற வேண்டும் என்று நான் விரும்புகிறேன். என் பெயர் பவன் ஆச்சார்யா, நான் ராஜஸ்தானின் அல்வர் பகுதியைச் சேர்ந்தவன். தீபாவளி பண்டிகையின் போது நாட்டு மக்கள் அதிக அளவில் மண்ணாலான அகல் விளக்குகளைப் பயன்படுத்த வேண்டும் என்று பிரதம மந்திரி நரேந்திர மோதி அவர்கள் நாட்டு மக்களிடம் தனது மனதின் குரலில் வேண்டுகோள் விடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். மேலும் இப்படி மண் அகல்களைப் பயன்படுத்துவன் மூலம் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத அதே நேரத்தில், பல்லாயிரம் மண்பாண்டம் செய்யும் ஏழைகளுக்கு வேலைவாய்ப்பு கிட்டும், என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.
பவன் உங்கள் கருத்துக்கள் நாட்டின் மூலை முடுக்குகள் எங்கும் சென்று அடையும் என்று எனக்கு அசையாத நம்பிக்கை இருக்கிறது. அவர் மிகவும் அருமையான யோசனையை அளித்திருக்கிறார். மண் என்பது விலை மதிக்க முடியாதது. ஆகையால் மண்ணாலான விளக்குகளுக்கும் மதிப்பு காண முடியாது. சுற்றுச் சூழல் விஷயத்திலும் இதற்கென ஒரு சிறப்பிடம் இருக்கிறது. விளக்குகள் ஏழைகளின் வீடுகளில் தயாரிக்கப்படுகின்றன. மிக எளிய மக்கள் இவற்றைத் தயார் செய்வதன் மூலம் தங்கள் பிழைப்பை நடத்துகிறார்கள். இனி வரும் பண்டிகைகளின் போது, பவன் ஆச்சார்யா அவர்களின் ஆலோசனையை நாம் செவி மடுத்தால், மண் விளக்குகள் நம் இல்லங்களின் ஏற்றப்படும், ஆனால் அதன் ஒளி ஏழையின் குடும்பத்தில் வீசும் என்று நாட்டு மக்களின் முன்பு நான் விண்ணப்பம் வைக்கிறேன்.
எனதருமை நாட்டு மக்களே,
விநாயக சதுர்த்தியின் போது, முப்படையினரோடு சிறிது நேரத்தைக் கழிக்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. பாகிஸ்தானோடு 1965ம் ஆண்டு நடைபெற்ற போர் நிறைவடைந்து 50 ஆண்டுகள் கழிந்த நிலையில், தில்லியில் இண்டியா கேட் அருகே வீரத்துக்கான அஞ்சலி என்ற பொருள்படும் கண்காட்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. நான் அதை மிகவும் உன்னிப்பாக கவனித்து வந்தேன். அரை மணி நேரம் இருக்கலாம் என்று நான் சென்றிருந்தேன், ஆனால் நான் அங்கிருந்து கிளம்பிய போது இரண்டரை மணி நேரம் ஆகியிருந்தது, ஆனாலும் என்னால் முழுமையாக அதைப் பார்க்க முடியவில்லை. அங்கே என்னதான் இல்லை? ஒட்டு மொத்த சரித்திரத்தையும் உயிரோட்டத்தோடு வடித்திருந்தார்கள். கலைக்கண்ணோட்டத்தோடு பார்த்தாலும், அற்புதமாக இருந்தது, சரித்திரக் கண்ணோட்டத்தோடு பார்த்தாலும், கல்வி புகட்டுவதாக அமைந்தது, வாழ்கையில் கருத்தூக்கமாக அதை அணுகினாலும், தாய்நாட்டுக்கு சேவை செய்ய இதை விடக் கருத்தூக்கம் ஏற்படுத்தக் கூடியது வேறு ஒன்றும் இருக்க முடியாது. போரின் பெருமை மிக்க கணங்கள், நமது படையினரின் ஈடிணையில்லாத சாகஸம், தியாகம் ஆகியவை பற்றி நாம் கேள்விப் பட்டு வந்திருக்கிறோம். அந்தக் காலகட்டத்தைச் சேர்ந்த புகைப்படங்களோ, படச் சுருள்களோ இல்லை. ஆனால் இந்தக் கண்காட்சி மூலம் அந்தக் கால நிகழ்வுகளின் அனுபவத்தைப் பெற முடிந்தது. ஹாஜி பீர் போராகட்டும், அஸல் உத்தர் போராகட்டும், சாவிந்தா போராகட்டும், ஹாஜி புர் கணவாய் வெற்றிக் காட்சிகள் ஆகிய அனைத்தும் மெய்சிலிர்ப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றன. நம் முப்படையினரின் போர் சாகஸம் நம்மை பெருமிதம் கொள்ள வைக்கிறது. அந்தக் கண்காட்சியின் போது போரில் பங்கு எடுத்த வீரர்களின் குடும்பங்களையும் தியாகிகளின் குடும்பங்களையும் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. போரில் பங்கெடுத்த சில வீரர்கள் தங்கள் வாழ்கையின் மாலைப் பொழுதை எட்டியிருந்தார்கள், அவர்களும் அங்கே வந்திருந்தார்கள். அவர்களோடு நான் கைகுலுக்கிய போது அவர்களின் சக்தியைக் கண்டு நான் வியந்தேன். அது எனக்கு கருத்தூக்கம் அளித்தது. நீங்கள் வரலாறு படைக்க விரும்பினால், வரலாற்றின் நுணுக்கங்களை நீங்கள் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். வரலாறு நம்மை நமது வேர்களோடு இணைக்கிறது. வரலாற்றிலிருந்து நமது இணைப்பு துண்டிக்கப் பட்டு விட்டால், வரலாறு படைக்கும் திறனுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப் பட்டு விடும் வீரத்தின் இந்த கண்காட்சி மூலம் வரலாறு பற்றிய அனுபவம் ஏற்படுகிறது, வரலாறு பற்றிய அறிவு பிறக்கிறது, புதிய வரலாறு படைக்கும் விதைகளும் விதைக்கப்படுகின்றன. நீங்கள் தில்லிக்கு அருகில் இருப்பவர்கள் என்றால், நீங்களும், உங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்களும், இன்னும் சில காலம் தொடர்ந்து நடைபெறவிருக்கும் இந்தக் கண்காட்சியை அவசியம் சென்று பாருங்கள். என்னைப் போல சீக்கிரமாக அங்கிருந்து வந்து விட வேண்டாம், உங்களுக்கு 3 அல்லது 4 மணி நேரம் கண்டிப்பாக இதை முழுமையாகக் காணத் தேவைப்படும். கண்டிப்பாகப் பாருங்கள்.
மக்களாட்சியின் சக்தியைப் பாருங்கள், ஒரு சிறுவன் நாட்டின் பிரதமருக்கு கட்டளையிட்டிருக்கிறான். ஆனால் அவசரத்தில் அந்தச் சிறுவன் தனது பெயரைக் குறிப்பிட மறந்திருக்கிறான். அவன் பெயர் என்னிடம் இல்லாததால் அதைக் குறிப்பிட முடியவில்லை. ஆனால் அந்தச் சிறுவன் கூறிய விஷயம் பிரதமர் தன் கவனத்தை செலுத்தத் தகுந்ததாக இருக்கிறது மட்டுமல்லாமல், நாட்டு மக்கள் அனைவருமே தங்கள் கவனத்தை செலுத்துவதாக இருக்கிறது.


