பிரதமர் அவர்களே, நீங்கள் தூய்மையான இந்தியா என்ற இயக்கத்தை முடுக்கி விட்டிருக்கிறீர்களே, இதை செயல்படுத்த ஒவ்வொரு இடத்திலும், ஒவ்வொரு தெருவிலும் குப்பைத் தொட்டிகளை வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறான். இந்தச் சிறுவன் கூறியது மிகவும் சரியான விஷயம். தூய்மை என்பது நமது இயல்பாகவே ஆக வேண்டும், அதற்கான சாதனங்களையும் நாம் ஏற்படுத்தித் தர வேண்டும். இந்தச் சிறுவன் விடுத்திருக்கும் செய்தி எனக்கு மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது. அக்டோபர் மாதம் 2ம் தேதியன்று நான் தூய்மை குறித்த அறிவிப்பை செய்தேன். சுதந்திரம் அடைந்த பிறகு முதன் முறையாக, நாடாளுமன்றத்தில் பல மணித்துளிகள் தூய்மை பற்றிய விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. நமது அரசு மீதான விமர்சனங்களும் இடம் பெறுகின்றன. மோதி அவர்கள் தூய்மை பற்றி பெரிய பேச்சுக்கள் எல்லாம் பேசினார், ஆனால் பலன் என்ன? என்று கேட்டு என்னை நோக்கியும் விமர்சனங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. இதை நான் தவறாகவே கருதவில்லை. நாட்டின் நாடாளுமன்றம் கூட தூய்மை பற்றிய விவாதங்களில் ஈடுபடுகிறது என்று நான் இதை நல்லவிதமாகவே பார்க்கிறேன். இன்னொரு புறம் பாருங்கள், ஒரு பக்கம் நாடாளுமன்றம் இன்னொரு பக்கம் நாட்டின் குழந்தை இருவருமே தூய்மை பற்றிப் பேசுகிறார்கள் என்பதை விட நாட்டுக்குப் பெருமை அளிக்கும் விஷயம் வேறு என்னவாக இருக்க முடியும்? கருத்துக்களின் இயக்கம் நடைபெறுகிறதே, மாசுக்கு எதிராக ஒரு சூழல் ஏற்பட்டு வருகிறதே, தூய்மை மீதான ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கிறது. இது அரசுகளையும் பணியில் கண்டிப்பாக ஈடுபடுத்தும், ஈடுபடுத்தும், ஈடுபடுத்தும். உள்ளாட்சி அமைப்புகள் தொடங்கி, மாநில மற்றும் மத்திய அரசுகள் வரை அனைத்து அமைப்புக்களும் இதன் மீது பணியாற்றியே ஆக வேண்டும். இந்த இயக்கத்தை நாம் முன்னெடுத்துச் சென்றே ஆக வேண்டும். குறைகள் இருந்தாலும், இதை நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். நம் இந்தியாவை 2019ம் ஆண்டில், நாம் காந்தியடிகளின் 150வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் வேளையில், காந்தியடிகளின் கனவை மெய்யாக்கும் விதமாக நாம் செயல்பட வேண்டும். காந்தியடிகள் என்ன சொன்னார் தெரியுமா? ஒரு முறை அவர், சுதந்திரம், தூய்மை இவற்றுக்கு இடையே ஒன்றை நான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றால், நான் முதலில் தூய்மையையே விரும்புவேன், பிறகு தான் நாட்டின் சுதந்திரம் என்று கூறினார். காந்தியடிகளுக்கு விடுதலையை விட தூய்மையே மகத்துவம் நிறைந்ததாக இருந்தது. வாருங்கள், நாம் அனைவரும் காந்தியடிகளின் கருத்தை ஏற்றுக் கொள்வோம், அவரின் ஆசையை நிறைவேற்றும் விதமாக செயல்படுவோம்.
தில்லியைச் சேர்ந்த குல்ஷன் அரோடா அவர்கள் mygov இணையதளத்தில் ஒரு தகவலைப் பதிவு செய்திருக்கிறார். தீன் தயாள் உயாத்யாய் அவர்களின் நூற்றாண்டு பற்றித் தெரிந்து கொள்ள விரும்பியிருக்கிறார்.
எனதருமை நாட்டு மக்களே, மகத்தானவர்களின் வாழ்க்கை சரிதம் என்பது நாட்டு மக்கள் அனைவருக்கும் கருத்தூக்கம் அளிக்கக் கூடியதாக எப்போதுமே இருக்கிறது. அத்தகைய மகான்கள் எந்தக் கொள்கைப் பற்று உடையவர்களாக இருந்திருக்கிறார்கள் என்பதை மதிப்பீடு செய்வது நமது வேலையல்ல. நாட்டுக்காக வாழ்ந்து உயிர் துறந்த அனைவருமே நமக்கு கருத்தூக்கம் அளிப்பவர்கள் தாம். இப்போதெல்லாம் பல மகான்களை நினைவு கூரும் சந்தர்ப்பங்கள் நமக்கு வாய்க்கிறது. செப்டம்பர் மாதம் 25ம் தேதி பண்டித தீன் த்யாள் உபாத்யாய் அவர்கள், அக்டோபர் மாதம் 2ம் தேதி காந்தியடிகள், லால்பஹாதுர் சாஸ்த்ரி, அக்டோபர் 11ம் தேதியன்று ஜெய்ப்ரகாஷ் நாராயண் அவர்கள், அக்டோபர் 31ம் தேதி சர்தார் வல்லப்பாய் படேல் என கணக்கிலடங்காத பெயர்கள், அவற்றில் ஒரு சிலவற்றையே நான் குறிப்பிடுகிறேன். ஏனென்றால் இந்த நாடு பஹுரத்ன வசுந்தரா, அதாவது பல மனிதருள் மாணிக்கங்களைப் பெற்ற நாடு. நீங்கள் எந்த ஒரு தேதியை எடுத்துக் கொண்டாலும், வரலாற்றில் ஏதோ ஒரு மஹாபுருஷரின் பெயர் இடம் பெறும். இனி வரும் காலங்களில் அவர்களைப் பற்றிய நினைவுகளால் நம் மனங்களை நிறைத்துக் கொள்வோம். அவர்கள் வாழ்க்கை அளிக்கும் செய்தியை நாம் வீடுதோறும் எடுத்துச் செல்வோம். அவர்களிடமிருந்து நாமும் ஏதாகிலும் கற்க முயற்சி செய்வோம். குறிப்பாக, அக்டோபர் 2ம் தேதி பற்றி பதிவு செய்ய விரும்புகிறேன். அக்டோபர் 2ம் தேதி வணக்கத்துக்குரிய காந்தியடிகளின் பிறந்த நாள். கடந்த ஆண்டும் கூட, பல வகையான ஃபேஷன்களின் உடைகள், பல வகையான ஆடைகள் என இருக்கலாம், ஆனால் அவற்றில் கதராடைகளுக்கு என ஓரிடம் இருக்க வேண்டும் என்று கூறியிருந்தேன். நான் மீண்டும் ஒரு முறை கூறுகிறேன், அக்டோபர் 2ம் தேதி தொடங்கி ஒரு மாத காலம் வரை, கதராடை விற்பனையில் தள்ளுபடி அளிக்கப்படும், இதைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள், கதராடைகளுடன் சேர்ந்து, கைத்தறியாடைகளுக்கும் அதே அளவு முக்கியத்துவம் கொடுங்கள். நமது நெசவாளிகள் எத்தனை கடுமையாக உழைக்கிறார்கள். 125 கோடிப் பேர்கள் கொண்ட நாட்டு மக்கள் 5 ரூபாய், பத்து ரூபாய், 50 ரூபாய் என்ற அளவில் கூட கதராடையையோ, கைத்தறியாடையையோ வாங்கினால், நிறைவாக அந்தத் தொகை நெசவாளிக்குச் சென்று சேரும், கதராடை தயாரிக்கும் ஏழை விதவையைச் சென்று அடையும். ஆகையால் இந்த தீபாவளியன்று நாம் கண்டிப்பாக கதராடைகளுக்கு என ஒரிடத்தை ஒதுக்குவோம், நம் உடலில் அதற்கு என இடமளிப்போம். நீங்கள் முழுமையாக கதராடைகளையே அணிய வேண்டும் என்று நான் உங்களைக் கேட்டுக் கொள்ளவில்லை. ஏதோ கொஞ்சமாவது அதற்கு இடமளியுங்கள் என்று தான் வேண்டுகிறேன். கடந்த முறை நீங்கள் விற்பனையை கிட்டத்தட்ட இரட்டிப்பாக்கி விட்டீர்கள். இதனால் எத்தனை ஏழைகள் பலனடைந்தார்கள்! எந்தப் பணியை அரசு பல கோடி ரூபாய்கள் செலவு செய்தும் செய்ய முடியவில்லையோ, அதை நீங்கள் சின்னஞ்சிறு உதவியால் செய்து முடித்திருக்கிறீர்கள். இது தானே மக்கள் சக்தி ஆகையால் நான் மீண்டும் உங்களை இந்த விஷயத்தில் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.


