எனதருமை நாட்டு மக்களே,
என் மனம் வேறு ஒரு விஷயத்துக்காகவும் கூட சந்தோஷத்தில் ஆழ்கிறது. இதை உங்களோடு பகிர்ந்து கொள்ள நான் விரும்புகிறேன். மே மாதம் நான் கோல்காத்தா சென்றிருந்தேன். சுபாஷ் போஸ் அவர்களின் குடும்பத்தார் என்னை சந்திக்க வந்திருந்தார்கள். அவரது சகோதரர் மகன் சந்த்ர போஸ் இந்த சந்திப்பிற்கு ஏற்பாடு செய்திருந்தார். கணிசமான நேரம் சுபாஷ் போஸ் அவர்களின் குடும்பத்தாருடன் நேரம் செலவு செய்யும் பொன்னான வாய்ப்பு எனக்குக் கிட்டியது. சுபாஷ் பாபுவின் பெரிய குடும்பம் பிரதமரின் இல்லம் வர வேண்டும் என்று அன்று முடிவானது. சந்த்ர போஸ் மற்றும் அவரது குடும்பத்தார் இந்தப் பணியில் ஈடுபட்டார்கள். கடந்த வாரம் தான் சுபாஷ் போஸ் அவர்களின் ஐம்பதுக்கும் மேற்பட்ட குடும்பத்தார்கள் பிரதமரின் இல்லம் வரவிருக்கிறார்கள் என்பது முடிவானது. இது எனக்கு எத்தனை பெரிய மகிழ்ச்சியை அளிக்கும் விஷயம் என்பதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடியுமா? நேத்தாஜியின் குடும்பத்தார் அனைவருக்கும் தங்கள் வாழ்கையிலேயே முதன் முறையாக பிரதமரின் இல்லத்துக்கு வருகை தரும் வாய்ப்பு கிடைத்திருக்கலாம். இதை விட அதிக மகிழ்ச்சி எனக்கு என்னவென்றால், அக்டோபர் மாதம் இவர்களை பிரதம மந்திரி இல்லத்தில் வரவேற்கக் கூடிய கணத்தை விடப் பெரிய விருந்தோம்பல் இருக்க முடியாது. சுபாஷ் பாபுவின் குடும்பத்தார்களில் பலர் வேறு வேறு நாடுகளில் வசிக்கிறார்கள். அனைவரும் சிறப்பாக இதற்காகவே வருகிறார்கள் இது எனக்கு எத்தனை பெரிய சந்தோஷத்தை அளிக்கக் கூடிய விஷயம் தெரியுமா? அவர்களை வரவேற்க நான் ஆவலோடு காத்திருக்கிறேன்.
பார்கவி கானடே எனக்கு ஒரு செய்தியை தெரிவித்திருக்கிறார். அவர் கூறும் விதம், அவரது குரல் ஆகியவற்றைக் கேட்ட பிறகு அவரே கூட ஒரு தலைவி என்றே எனக்கு நினைக்கத் தோன்றுகிறது. ஒரு வேளை அவரே தலைமைப் பதவியையும் ஏற்கலாம் என்று படுகிறது. என் பெயர் பார்க்கவி கானடே. நீங்கள் இளைய தலைமுறையினருக்கு வாக்காளர் பதிவு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்; இதனால் இளைய தலைமுறையினரின் பங்களிப்பு அதிகரிக்கும்; எதிர்காலத்தில் அரசுகளை அமைப்பதிலும், அவற்றை செயல்படுத்துவதிலும் அவர்களின் பங்களிப்பு அதிகமாக இருக்கும் என்ற விஷயத்தை நீங்கள் தெரிவிக்க வேண்டும் என்று நான் பிரதம மந்திரியிடம் கேட்டுக் கொள்கிறேன். வாக்காளர் பட்டியலில் பெயர்களைப் பதிவிடுதல் பற்றியும் வாக்களித்தல் பற்றியும் பார்க்கவி அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார். உங்கள் குறிப்பு சரியானது. மக்களாட்சியில் ஒவ்வொரு வாக்காளரும் நாட்டின் விதியை நிர்ணயம் செய்வதில் முக்கியமான பங்கு வகிக்கிறார்கள். இந்த விழிப்புணர்வு மெல்ல மெல்ல வளர்ந்து வருகிறது. வாக்களிப்பு சதவீதமும் அதிகரித்து வருகிறது. இதற்காக நான் நாட்டின் தேர்தல் ஆணையத்துக்கு என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சில ஆண்டுகள் முன்பாக, நமது தேர்தல் ஆணையம் regulator, நெறிப்படுத்தல் பணியில் மட்டுமே ஈடுபட்டு வந்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அதன் செயல்பாட்டில் மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. இன்று நமது தேர்தல் ஆணையம் நெறிப்படுத்தல் பணியை மட்டும் செய்யவில்லை, அது ஒரு வகையில் facilitatorஆக, எளிதாக்கி துணை புரியும் அமைப்பாகவும் செயல்பட்டு வருகிறது. இது வாக்காளர்களுக்கு உதவி புரிவதாக ஆகி இருக்கிறது. அவர்களின் அனைத்து செயல்பாடுகள் மற்றும் எண்ணங்களின் மையக்கருவாக வாக்காளர்கள் விளங்குகிறார்கள். இது மிகவும் போற்றுதலுக்கு உரிய மாற்றம். ஆனால் வெறும் தேர்தல் ஆணையம் மட்டுமே செயல்படுவது என்பது போதாது. நாமும் கூட பள்ளிக்கூடங்களில், கல்லூரிகளில், நாம் வசிக்கும் பேட்டைகளில் இந்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளில் ஈடுபட வேண்டும். வாக்காளர் பட்டியல் புதுப்பிக்கப் பட்டுக் கொண்டே இருக்க வேண்டும் நாமுமே கூட நமக்கு கிடைத்திருக்கும் விலைமதிப்பில்லாத உரிமைகளை விழிப்போடு கண்காணித்து வர வேண்டும், என் உரிமையை நான் பயன்படுத்துகிறேனா இல்லையா என்று யோசித்துப் பார்க்க வேண்டும். இதை நாம் ஒரு பழக்கமாகவே கொள்ள வேண்டும். நாட்டின் இளைஞர்கள் தங்களை வாக்காளர் பட்டியலில் இணைத்துக் கொள்ள முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும், வாக்களிப்பிலும் கண்டிப்பாக பங்கு கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். தேர்தல் காலங்களில் நான் நிச்சயம் ஒரு விஷயத்தைக் கூறி வருகிறேன். முதலில் வாக்களிப்பு, பிறகு தான் மற்றவை எல்லாம். இந்தப் புனிதமான பணியை அனைவரும் மேற்கொள்ள வேண்டும்.
சில நாட்கள் முன்பாக நான் வாராணசி சென்றிருந்தேன், அங்கே பலரை என்னால் சந்திக்க முடிந்தது, பல நிகழ்ச்சிகளில் பங்கு எடுத்தேன். பலரை நான் சந்தித்தாலும் கூட, அவர்களில் இரு சிறுவர்கள் பற்றி நான் உங்களோடு பேச விரும்புகிறேன். அவர்களில் க்ஷிதிஜ் பாண்டே என்ற ஏழாம் வகுப்பு படிக்கும் ஒரு சிறுவனை சந்தித்தேன். பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தின் கேந்த்ரிய வித்யாலயாவில் ஏழாம் வகுப்பு படிக்கிறான். மிகவும் புத்தி கூர்மையுடைய இந்த சிறுவனுடைய தன்னம்பிக்கை அளப்பரியது. ஆனாலும் இந்தச் சின்ன வயதிலும் கூட இயற்பியலில் அவனுக்கு இருக்கும் நாட்டத்தை என்னால் பார்க்க முடிந்தது. அவன் நிறைய படிக்கலாம், இணையதளங்களில் நிறைய கற்றுக் கொண்டிருக்கலாம், புதிய புதிய பரிசோதனைகளைப் பார்க்கலாம், ரயில் விபத்துக்களை எந்த தொழில்நுட்பம் மூலம் தடுக்க முடியும், குறைவான ஆற்றலைக் கொண்டு எப்படி இயக்கலாம், ரோபோவில் எப்படி மனித உணர்வுகளை ஊட்ட முடியும் என ஏராளமான விஷயங்களைப் பற்றி என்னிடம் பேசினான். மிகவும் விசித்திரமான சிறுவன். அவன் கூறியவற்றை என்னால் நுணுக்கமாகப் பார்க்க முடியவில்லை, ஆனால் அவனது தன்னம்பிக்கையையும், நாட்டத்தையும் பார்க்கும் போது, நமது நாட்டின் சிறுவர்களுக்கு அறிவியல் மீது நாட்டம் அதிகரிக்க வேண்டும் என்று புலப்பட்டது. சிறுவர்களின் மனதில் கேள்விகள் தொடர்ந்து எழுந்து வர வேண்டும் – ஏன், எப்படி, எப்போது என்ற கேள்விகள் அவர்கள் மனங்களில் ஏற்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.
இதே போல சோனம் படேல் என்ற ஒரு சிறுமியை சந்திக்கும் வாய்ப்பும் கிட்டியது. வாரணாசியின் சுந்தர்பூரில் வசிக்கும் 9 வயது ஆன இந்தச் சிறுமி சதாவ்ருஜ் படேல் அவர்களின் மகள். மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த பெண் இவள். இந்தச் சிறுமிக்கு ஒட்டு மொத்த கீதையும் தலைகீழ்ப் பாடம்; ஆனால் மிகப் பெரிய விஷயம் என்னவென்றால், கீதையின் ஏதாவது ஒரு சுலோகத்தைப் பற்றிக் கேட்டவுடன், அவள் அதை ஒப்பிப்பதுடன் அதன் ஆங்கில விளக்கத்தையும் ஹிந்தி மொழி விளக்கத்தையும் அளித்தாள். அவள் தகப்பனாரிடம் நான் இது பற்றிக் கேட்ட போது அவர் இதை அவள் தன் 5வது வயதிலிருந்து சொல்லி வருவதாகத் தெரிவித்தார். இதை எங்கே கற்றுக் கொண்டாள் என்று நான் கேட்டதற்கு அவர், எங்களுக்கும் இது தெரியாது என்றார். அவள் கீதையை மட்டும் தான் படிக்கிறாளா அவள் படிப்பு என்று வேறு என்ன இருக்கிறது என்று நான் கேட்ட போது, அவர் காலையில் கணிதப் பாடத்தை எடுத்துக் கொண்டால், மாலைக்குள்ளாக அவளுக்கு அனைத்தும் கரதலப் பாடமாக ஆகி விடுகிறது, சரித்திரத்தை எடுத்துக் கொண்டால், அதுவும் சில மணிகளுக்குள்ளாக கரதலப் பாடமாகி விடுகிறது என்றார். மேலும் அவர் குடும்பத்தில் உள்ள எங்கள் அனைவருக்குமே கூட இது மிகுந்த ஆச்சரியத்தை அளிக்கிறது என்றார் அவர். இது உன்மையிலேயே எனக்குப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. சில குழந்தைகளுக்கு பிரபலங்கள் மீது ஒரு ஈடுபாடு ஏற்படுகிறது, ஆனால் குழந்தை சோனமுக்கோ அப்படி எந்த ஒரு ஈடுபாடும் இல்லை. அவளுக்கு கடவுள் ஏதோ ஒரு விசேஷ சக்தியை அளித்திருக்கிறார் என்பது மட்டும் எனக்குத் தோன்றியது. இந்த 2 குழந்தைகளையும் எனது இந்த காசி யாத்திரையின் போது நான் சந்தித்தது சிறப்பான ஒரு விஷயம். இதை உங்களோடு நான் பகிர்ந்து கொள்ள விரும்பினேன்.
மனதின் குரலில் சிலர் எனக்கு நிறைய வேலைகளைக் கொண்டு வருகிறார்கள். ஹரியாணாவின் சந்தீப் கூறுவதைக் கேளுங்கள். மாதம் ஒரு முறை நீங்கள் நிகழ்த்தும் மனதின் குரலை வாரம் ஒரு முறை என்று ஆக்க வேண்டும்; ஏனென்றால், இவற்றிலிருந்து எங்களுக்கு அதிக கருத்தூக்கம் கிடைக்கிறது. சந்தீப் அவர்களே, நீங்கள் என்னிடமிருந்து என்னவெல்லாம் வேலை வாங்க நினைக்கிறீர்களோ, தெரியவில்லையே? மாதம் ஒரு முறை இதைச் செய்யவே எனக்கு ஏகப்பட்ட முயற்சிகள் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது, நேரத்தை ஒதுக்க வேண்டியிருக்கிறது. சில வேளைகளில் ஆல் இண்டியா ரேடியோவைச் சேர்ந்த நம் நண்பர்கள் 30 நிமிடங்கள், 45 நிமிடங்கள் என்று காத்திருக்க வேண்டியிருக்கிறது ஆனால் நான் உங்கள் உணர்வுகளை மதிக்கிறேன், உங்கள் ஆலோசனைக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இப்போது மாதமொரு முறை என்பதே உகந்ததாக இருக்கிறது. மனதின் குரலைத் தொடங்கி ஓராண்டு நிறைவடைந்திருக்கிறது.
சுபாஷ் பாபு வானொலியை எந்த அளவு பயன்படுத்தினார் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஜெர்மனியில் அவர் ஒலிபரப்பைத் தொடக்கினார். இந்தியாவில் வாழும் மக்களுக்காக அவர் சுதந்திர வேள்வி தொடர்பாக வானொலி வாயிலாக தம் கருத்துக்களைப் பரப்பி வந்தார். ஆஸாத் ஹிந்த் ரேடியோவின் தொடக்கத்தை ஒரு வாராந்திர செய்தி அறிக்கை மூலம் செய்தார். ஆங்கிலம், ஹிந்தி, பங்காலி, மராட்டி, பஞ்சாபி, உருது, பஷ்டூ என பல மொழிகளில் அவர் வானொலி ஒலிபரப்பைச் செய்தார். எனக்குமே கூட மனதின் குரல் நிகழ்ச்சி மூலமாக என் வானொலி ஒலிபரப்புத் தொடங்கி ஓராண்டுக் காலம் நிறைவடைந்திருக்கிறது. எனது மனதின் குரல், உங்கள் குரலாக மாறியதற்கு நீங்கள் தான் காரணம். உங்கள் மனங்களின் குரல்களை நான் கேட்கிறேன், அதைப் பற்றி நினைக்கிறேன், உங்கள் ஆலோசனைகளைப் பார்க்கிறேன். அவற்றிலிருந்து தான் என் எண்ண ஓட்டங்கள் சிறகடிக்க ஆரம்பிக்கின்றன. இவை தாம் ஆல் இண்டியா ரேடியோ மூலமாக உங்களை வந்து அடைகின்றன. கூறுவது என்னவோ நானாக இருந்தாலும், கூற்றும் கருத்தும் உங்களுடையது தான். இது தான் என் மகிழ்ச்சியே.
அடுத்த மாதம் மனதின் குரல் நிகழ்ச்சியில் மீண்டும் சந்திப்போம். உங்கள் ஆலோசனைகள் மேலும் கிடைக்கட்டும், உங்கள் ஆலோசனைகளால் அரசுக்கு நன்மை ஏற்படுகிறது, மேம்பாடு ஏற்படுகிறது. உங்கள் பங்களிப்பு எனக்கு விலை மதிக்க முடியாத ஒன்று. மீண்டும் உங்கள் அனைவருக்கும் என் நல்வாழ்த்துக்கள். நன்றி.
* 20.9.15 அன்று ஒலிபரப்பான மன் கீ பாத் – மனதின் குரல் நிகழ்ச்சியின் தமிழாக்கம்:
தமிழில்: ராமஸ்வாமி சுதர்ஸன், அகில இந்திய வானொலி, சென்னை


