புதன் கிழமை இன்று கர்நாடகத்தின் சமூக சீர்திருத்தவாதியான பசவண்ணவரின் ஜயந்தி விழா கொண்டாடப் பட்டது. இதை முன்னிட்டு, லண்டனில் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி அங்கே பசவண்ணரின் சிலைக்கு மரியாதை செய்தார். கர்நாடகாவில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள முதல்வர் சித்தராமையா, பசவண்ணர் சிலைக்கு மாலை அணிவித்தார்.
இந்தியா-நார்டிக் உச்சி மாநாடு மற்றும் காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் மாநாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக 5 நாள் சுற்றுப்பயணமாக இங்கிலாந்து சென்றுள்ளார் பிரதமர் மோடி. அவர் அந்நாட்டுப் பிரதமர் தெரசா மே-வை இன்று காலை சந்தித்து இரு நாட்டு உறவுகள், பொருளாதார விவகாரங்கள் குறித்து ஆலோசித்தார். தொடர்ந்து, லிங்காயத்து சமுதாயத்தைச் சேர்ந்த தத்துவவாதி பசவேஸ்வரரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியதை செலுத்தினார்.
12ஆம் நூற்றாண்டில் கர்நாடகாவில் லிங்காயத்துகள் எனும் வீர சைவப் பிரிவை போதனை செய்து வந்த தத்துவஞானி பசவேஸ்வரர், சாதி பேதத்தை அறுத்து, சமூக சீர்திருத்தத்துக்கு வித்திட்டவர். அவரது பிறந்தநாளான இன்று, ஆல்பர்ட் எம்பங்க்மெண்ட் கார்டனில் உள்ள பசவேஸ்வரா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் பிரதமர் மோடி.
இதே போல் கர்நாடக மாநிலத்தில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் பசவேஸ்வரர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா, பசவேஸ்வரர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். ஆனால், அவரை இதற்கு அனுமதிக்கக் கூடாது என்று கர்நடாக மாநில பாஜக எம்.பி. ஷோபா கரண்ட்லாகே செவ்வாய்கிழமை எதிர்ப்பு தெரிவித்திருந்தார். தனி மதம் என பிரிவினையை ஏற்படுத்தியுள்ள சித்தராமையா, பசவேஸ்வரர் சிலைக்கு மாலை அணிவித்து அவரது ஜயந்தி விழா கொண்டாட அருகதை அற்றவர் என குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு கர்நாடக உள்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி பதில் அளித்திருந்தார்.
இந்நிலையில் இன்று நடைபெற்ற பசவண்ணர் ஜயந்தி விழாவில் பங்கேற்ற கர்நாடக முதல்வர் சித்தராமையா, பசவேஸ்வரர் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதன் பின் செய்தியாளர்களிடம் அவர் பேசியபோது, “சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் விதமாக பசவண்ணருடைய தத்துவங்கள் அமைந்துள்ளன. இந்த சமூகத்தில் முதன்முதலில் சமதர்மப் புரட்சியை ஏற்படுத்தியது அவர்தான். சமூக ஒற்றுமைக்கு முதன்முதலில் அவர்தான் வித்திட்டார்” என்றார்.
It is an honour to pay homage to Bhagwan Basaveshwara during my UK visit. The ideals of Bhagwan Basaveshwara motivate people across the entire world. pic.twitter.com/Ul6KGoX6tj
— Narendra Modi (@narendramodi) April 18, 2018