புது தில்லி:
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி இந்த நாட்டுக்காக செய்த உயிர்த் தியாகத்தை மறந்துவிட முடியாது என பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.
மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 30-வது நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது.
இதையொட்டி, தில்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசுத் துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத்தலைவர் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள், எம்.பி.க்கள் ஆகியோர் டெல்லி ராஜ்காட் பகுதியில் உள்ள இந்திரா காந்தி நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
இந்திராவின் நினைவு தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டரில் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். மேலும், இன்று காலை டெல்லியில் நடைபெற்ற ஒருமைப்பாட்டுக்கான ஓட்டம் நிகழ்ச்சியை கொடியசைத்து துவக்கி வைத்த அவர் ‘இதே நாளில், இந்த நாட்டுக்காக முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி செய்த உயிர்த் தியாகத்தை மறந்துவிட முடியாது’ என குறிப்பிட்டுள்ளார்.
தில்லியில் உள்ள இல்லத்தில் கடந்த 31-10-1984 அன்று இந்திரா காந்தி தனது பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது உடலில் பாய்ந்த 30 தோட்டாக்களில் 23 உடலை துளைத்து, வெளியேறின. ஏழு தோட்டாக்கள் உடலிலேயே தங்கிவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
Tributes to former Prime Minister of India, Mrs. Indira Gandhi on her death anniversary.
— Narendra Modi (@narendramodi) October 31, 2015



