தில்லியில் கூட்டு மரணத்தை தேர்ந்தெடுத்த வீட்டின் பின்புறத்தில் அதிர்ச்சி அளிக்கும் விதமாக, 11 ஆவிகள் வெளியேற 11 குழாய்கள் பதிக்கப் பெற்றுள்ளதாக கூறப்படுவதால், இந்த விவகாரம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தில்லி புராரி பகுதியில் நேற்று ஒரு வீட்டிலிருந்து 11 பிணங்கள் கண்டெடுக்கப்பட்டன. அந்த வீட்டில் போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் கடிதங்களும் டைரிகளும் சிக்கின. வீட்டின் உள்ளே 11 பேர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டனர். ஏதோ ஒரு மதச் சடங்கை மேற்கொள்வதற்காக இவர்கள் இவ்வாறு தங்களைத் தாங்களே மாய்த்துக் கொண்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதை வைத்து போலீஸார் இந்தச் சம்பவம் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

தில்லி புராரியில் நடந்த இந்தச் சம்பவத்தில், 11 பேரில் 7 பேர் பெண்கள். குடும்பத்தின் மூத்த பெண்மணி 77 வயதான நாராயன் தேவி தரையில் கிடந்துள்ளார். மற்ற அனைவரும் தூக்கில் தொங்கியுள்ளனர்.

நாராயன் தேவியின் மகள் பிரதீபா (57), மகன்கள் பவ்னேஷ் (50) லலித் பாடியா (45) அவர்களது குடும்பத்தினர், பவ்னேஷின் மனைவி சவீதா(45) அவர்களது மகள்கள் மீனு (23) நோட்ஜி (25) துருவ் (15), லலித் பாடியாவின் மனைவி டினா (42), ,மகன் ஷிவம் (15) ஆகியோர் தூக்கில் தொங்கியுள்ளனர்.

பிரதீபாவின் பெண் ப்ரியங்கா (33) கடந்த மாதம் திருமண நிச்சயதார்த்தம் ஆகியுள்ளது. தனது திருமணம் குறித்து எதிர்பார்ப்புடன் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். ஐ.டி., நிறுவனப் பணியாளரான அவரும் தூக்கில் தொங்கியுள்ளார்.

எவ்வாறு தற்கொலை செய்து கொண்டால் சொர்க்கத்தை அடையலாம், என்ன செய்தால் மோட்சம் கிடைக்கும் என்றெல்லாம் எழுதி வைத்துள்ள குறிப்புகள் போலீஸாரின் சந்தேகத்தை மேலும் அதிகரித்துள்ளது. போலீஸாரிடம் சிக்கிய முதல் குறிப்பில், எந்த நாளில், எப்படி சாக வேண்டும் என்றும் விவரமாக எழுதியுள்ளனர்.

இந்த நிலையில் அந்த வீட்டில் சோதனை நடத்திய போலீஸாருக்கு மேலும் அதிர்ச்சியூட்டும் வகையில் ஒன்று கண்ணில் பட்டுள்ளது. அந்த வீட்டுக்குப் பின் புறத்தில் 11 குழாய்கள் வெளியே வருவதைக் கண்டு ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைந்த போலீஸார், மொத்தமாக 11 குழாய்கள் வெளியே வந்து இணைப்பு இல்லாமல் முடிந்துள்ளதைக் கண்டனர்.

இந்தக் குழாய்களும் உள் பக்கம் எதனுடனும் இணைக்கப்படவில்லை. அதேபோல் வெளியேயும் எதனுடனும் இணைக்கப்படவில்லை. 11 பேரும் உயிரிழந்து கிடந்த அறைக்கு அருகில் இந்தக் குழாய்கள் தொடங்கி வெளிப்பக்கம் வரை வந்துள்ளன. எனவே, இது எதோ கண்டிப்பாக ஒரு நம்பிக்கை காரணமாக வைக்கப் பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

அங்கே கிடந்த குறிப்புகளில், அந்த வீட்டில் இறந்த 11 பேரின் ஆவியும் வெளியே மோட்சத்துக்குச் செல்ல இந்தக் குழாய்கள் உதவும் என்று குறிப்பிடப் பட்டிருந்ததாம்.  இருப்பினும் போலீஸார் இதுகுறித்து மேலும் அதிகமாக விசாரிக்க முடிவு செய்துள்ளனர். அங்கே ஒவ்வொன்றும் மர்மமானதாக இருப்பதால் போலீஸார் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

போலீஸார் இந்த விவகாரத்தை தற்கொலை என்று கருதுகின்றனர். இருப்பினும், இதனை கொலை என்று கூறுகின்றனர் மற்ற உறவினர்கள். இந்நிலையில் அருகில் உள்ளோர், அவர்கள் ஏன் தற்கொலை செய்து கொள்ளவேண்டும், எந்த வித பொருளாதார நெருக்கடியோ, கடனோ இல்லாத குடும்பத்தினர் என்பதால், தற்கொலைக்கு வழி இல்லை என்று கருதுகின்றனர். இருப்பினும், இந்த விவகாரம் ஏதோ மதச் சடங்கின் பின்னணியில் இருப்பதால், இது தற்கொலையாக இருக்கக் கூடும் என்றும் கருதப் படுகிறது.

 

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.