புது தில்லி: ஜெயலலிதா மேல்முறையீட்டு மனு விசாரணையில், அரசு வக்கீலாக பவானிசிங் ஆஜராக கூடாது என்று திமுக பொதுச் செயலர் க.அன்பழகன் தாக்கல் செய்த மனு மீதான இறுதிகட்ட விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. இதில், வாதம் முடிவடைந்த நிலையில், தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. தமிழக முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. நீதிபதி எம்.எஸ்.பாலகிருஷ்ணா இந்த வழக்கை விசாரித்து வருகிறார். இந்த வழக்கில், எதிர்த் தரப்பினரின் வாதம் முடிவடைந்த நிலையில், அரசுத் தரப்பு வாதத்தை வழக்குரைஞர் பவானி சிங் வெள்ளிக்கிழமை தொடர்ந்தார். இந்த நிலையில், அரசுத் தரப்பு சிறப்பு வழக்குரைஞர் பவானி சிங், எதிர்த் தரப்புக்கு ஆதரவாகச் செயல்படுவதாகவும், அவரை அரசுத் தரப்பு வழக்குரைஞர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்றும் அன்பழகன் தரப்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான இறுதிக்கட்ட விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது. சுமார் 2.30 மணி நேரம் இந்த வழக்கு விசாரணையின் வாதம் நீடித்தது. ஜெயலலிதா தரப்பில் ஆஜரான் பாலிநாரிமன் பல நிலைகளில் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றுள்ளது, இந்த வழக்கின் முழு விவரமும் தெரிந்தவர் பவானி சிங். எனவே, அவர் வழக்கின் விசாரணையில் ஆஜராவதில் தவறில்லை என்று கூறினார். இருப்பினும், மேல்முறையீட்டுக்கு செல்ல வழிமுறைகள் இல்லை, மத்திய அரசின் அனுமதி தேவை என்று அரசுத் தரப்பு வழக்குரைஞர் வாதத்தை முன்வைத்தார். கர்நாடக அரசுத் தரப்பில் எம்.என்.ராவ், இந்த வழக்கில் கர்நாடக அரசு பவானி சிங்கை நியமிக்கவில்லை, கர்நாடக அரசே இதை எதிர்க்கிறது என்று கூறினார். இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணை முடிவில், தீர்ப்பு தேதி குறிப்பிடாமல், உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது. இந்த வழகின் தீர்ப்பினை வைத்தே, அரசுத் தரப்பு வழக்கில் ஒருவர் நியமிக்கப்பட்டிருக்கும்போது, அவர் குறிப்பிட்ட நீதிமன்றத்தில் மட்டுமே ஆஜராக முடியுமா அல்லது, அது தொடர்பான அனைத்து நீதிமன்றங்களிலும் ஆஜராக முடியுமா என்ற நுட்பமான விவரம் தெரியவரும். எனவே இந்த வழக்கின் தீர்ப்பு சட்ட வல்லுநர்கள் மத்தியிலும் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்தத் தீர்ப்பை தொடர்ந்தே, கர்நாடக உயர் நீதிமன்றமும், மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு தேதியை அறிவிக்கும்.
ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு மேல்முறையீட்டு மனு: தீர்ப்பு ஒத்திவைப்பு
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari