ராஜீவ் கொலையாளிகள் 7 பேரை விடுவிப்பது தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பு, பரவலாக விவாதிக்கப் பட்டது. தீர்ப்பின் முழு விவரம் தெரியாமல், அரசியல் கட்சிகள் பலவும் அவரவர்க்கு ஏற்ப அறிக்கைகளை வெளியிட்டனர். உண்மையில், எல்லோரும் கொண்டாடத் தக்க வகையில் இந்தத் தீர்ப்பு அமைந் துள்ளதா? அப்படி என்னதான் இதில் சூட்சுமம் உள்ளது?
எழுத்தாளர் வசந்தன் பெருமாள் இந்தத் தீர்ப்பு குறித்து இவ்வாறு விளக்குகிறார்.
ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகளுக்கு விடுதலை இல்லை என்பதுதான் உண்மை!
ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகளை விடுதலை செய்வதைப் பற்றி தமிழக அரசே முடிவு செய்து கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கவில்லை!
ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு ராஜீவ்காந்தி கொலையாளிகளை கருணை அடிப்படையில் விடுதலை செய்வதாக சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது! ராஜீவ்காந்தி கொலை வழக்கை விசாரணை செய்தது சிபிஐ என்பதால் மத்திய அரசின் ஒப்புதலை மாநில அரசு பெற வேண்டும்!
ஆனால் குற்றவாளிகளை 3 நாட்களில் விடுதலை செய்யப் போவதாக மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பினார் ஜெயலலிதா! இது தன்னிச்சையாக மாநில அரசே விடுதலை செய்யப் போகிறது என்ற அறிவிப்பு போன்றது!
தனது ஒப்புதல் இல்லாமல் மாநில அரசு விடுதலை செய்ய தடை விதிக்கக் கேட்டு மத்திய அரசு உச்ச நீதிமன்றம் சென்றது! தடை உத்தரவு பெற்றது! இது 2016 ல் நடந்த கதை!
குற்றவாளிகளில் ஒருவரான பேரறிவாளன் இரண்டு கோரிக்கைகளுடன் உச்ச நீதிமன்றத்தை அணுகினார்!
1. கருணை அடிப்படையில் தன்னை விடுதலை செய்ய வேண்டும் என்று மாநில ஆளுநரிடம் தான் அளித்த மனுவின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருக்கிறது! நடவடிக்கை எடுக்க ஆளுநருக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்!
2. ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகளை விடுதலை செய்வதாக தமிழக அரசு அறிவித்ததைத் தொடர்ந்து மத்திய அரசு தொடுத்து இருக்கும் வழக்கை முடித்து வைக்க வேண்டும்!
குற்றவாளிகளை விடுதலை செய்வதாக தமிழக அரசு எடுத்த முடிவில் மத்திய அரசின் கருத்தை தெரிவிக்கும் படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது!
விடுதலை செய்ய ஒப்புக் கொள்ள முடியாது என்று மத்திய அரசு தனது பதிலை தாக்கல் செய்தது! கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தது! நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட மத்திய அரசின் பதில் கிடைத்து விட்டது!
அதனால் மாநில ஆளுநரை அணுகி தீர்வையும் வழிகாட்டுதலையும் பெற்றுக் கொள்ளும்படி மாநில அரசுக்கு தெரிவித்து விட்டது! இதற்கு பொருள் விடுதலையை சிபாரிசு செய்வது அல்ல! மத்திய அரசு விடுதலைக்கு ஒப்புதல் அளிக்காத இந்த நிலையில் என்ன செய்யலாம் என்று ஆளுநரிடம் வழிகாட்டுதலை கோரலாம்!
மத்திய அரசின் நிராகரிப்பை மீறி விடுதலை செய்யலாம் என்று ஆளுநர் சொல்லப் போவதில்லை! மத்திய அரசின் ஒப்புதலை பெற வழி இருக்கிறதா என்று வேண்டுமானால் ஆளுநரிடம் யோசனை கேட்கலாம்! அவ்வளவு தான்!
அதனால் ஏழுபேர் விடுதலைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு என்பது சரியான தகவல் அல்ல! பேரறிவாளன் ஆளுநரிடம் அளித்து கவனிக்கப்படாத கருணை மனு பற்றிய விவகாரத்தில் பேரறிவாளனின் மனுவை பரிசீலனை செய்யுமாறு உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது! பரிசீலனையின் முடிவு விடுதலையாக இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை! பேரறிவாளனுக்கு சாதகமாக பரிசீலனை செய்யும் படி நீதிமன்றம் சொல்லவில்லை! அப்படி சொல்ல முடியாது தவிர பரிசீலனை செய்து முடிவை அறிவிக்க ஆளுநருக்கு காலக்கெடு எதையும் உச்ச நீதிமன்ற ம் விதிக்கவில்லை!
எனவே ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகள் விஷயத்தில் புதிதாக எந்த மாற்றமும் நிகழ்ந்து விடவில்லை! நேற்றைய நிலை தான் இப்போதும் தொடர்கிறது!




