புது தில்லி : நாடு முழுவதிலும் உள்ள நீதிமன்றங்களில் நடக்கும் முக்கிய வழக்குகளின் விசாரணையை நேரடியாக ஒளிபரப்புவதற்கு ஊடகங்களுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
முக்கிய வழக்குகளின் விசாரணையை நேரடி ஒளிபரப்பு செய்ய அனுமதி அளிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு இன்று விசாரித்து தீர்ப்பு வழங்கி உள்ளது.
அந்தத் தீர்ப்பில் வழக்கு விசாரணையை நேரடி ஒளிபரப்பு செய்ய போதிய விதிமுறைகளை மத்திய அரசு வகுக்க வேண்டும். நீதித்துறையின் பொறுப்புணர்வை அதிகரிக்க வழக்கு விசாரணையை நேரடி ஒளிரப்பு செய்வது உதவும்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையில் நடக்கும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளின் விசாரணையை நேரடியாக ஊடகங்கள் ஒளிபரப்பலாம்.
முதல் கட்டமாக உச்ச நீதிமன்றத்தில் நடக்கும் வழக்குகளின் விசாரணையை நேரடி ஒளிபரப்பு செய்யலாம். போதிய விதிமுறைகளை வகுத்த பின் நாட்டின் பிற நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்குகளின் விசாரணைகளை நேரடியாக வழங்கலாம் என்று கூறியுள்ளது.




