சுய சிந்தனையுடன் செயல்படும் பிரதமரை சோனியா விரும்பவில்லை: சரத் பவார்

மும்பை :

சுய சிந்தனையுடன் செயல்படும் ஒருவர் காங்கிரஸ் சார்பில் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்படுவதை சோனியா குடும்பம் விரும்பவில்லை என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது புத்தகத்தில் எழுதியுள்ளார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவார் தனது 75-வது பிறந்தநாள் கொண்டாடுகிறார். இதை ஒட்டி, அவர் எழுதிய “’Life on my terms-From the Grassroots and Corridors of Power.” என்ற புத்தகம் வெளியிடப்பட்டது.

அந்த புத்தகத்தில், ‘சுய சிந்தனையுடன் செயல்படும் ஒருவர் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்படுவதை சோனியா குடும்பம் விரும்பவில்லை. நேரு குடும்ப விசுவாசிகள், எனக்குப் பதிலாக பி.வி. நரசிம்மராவை பிரதமராகத் தேர்ந்தெடுக்க சோனியாவுக்கு ஆலோசனை வழங்கினர்.

ராஜீவ் மறைவுக்குப் பிறகு, மகாராஷ்டிர காங்கிரஸில் மட்டுமல்ல, பிற மாநிலங்களிலும் எனது பெயர் பிரதமர் பதவிக்கு ஆலோசிக்கப்பட்டது. ஆனால், சோனியா வீட்டில்தான் அம்முடிவு எடுக்கப்படும் என்பதால் நான் தனிப்பட்ட முறையில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருந்தேன். மூத்த தலைவராக இருந்தாலும் பி.வி. நரசிம்மராவ் உடல் நலம் காரணமாக தீவிர அரசியலில் இருந்து தேர்தலுக்கு முன்பே ஒதுங்கியிருந்தார். ராஜீவ் காந்தி இல்லாத நிலையில் நரசிம்ம ராவின் நீண்ட அனுபவத்தைக் கருத்தில் கொண்டு, அவரை மீண்டும் அழைத்து வர ஆலோசிக்கப்பட்டது.

நேரு குடும்ப விசுவாசிகள் நடத்திய அந்தரங்க ஆலோசனையில், சரத் பவார் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் அது சோனியா குடும்பத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும். நீண்ட காலத்துக்கு கடிவாளம் அவர் கையில் இருக்கும் நேரிடும் என விவாதித்தனர். அவர்களில் எம்.எல். போடேடர், ஆர்.கே. தவண், அர்ஜுன் சிங், வி. ஜார்ஜ் உள்ளிட்டோர் முக்கியமானவர்கள்.

நரசிம்ம ராவை மீண்டும் கொண்டு வருவது நல்லது. ஏனெனில் அவருக்கு வயதாகி விட்டது. அத்துடன் உடல் நலக் குறைவுடன் உள்ளார் என சோனியாவை சம்மதிக்க வைத்தனர். நரசிம்ம ராவுக்குப் பிறகு, விரைவிலேயே பிரதமர் பதவியைக் கைப்பற்றலாம் என அர்ஜுன் சிங் நம்பினார். எனினும், 1991-ல் ராவை மீண்டும் தீவிர அரசியலுக்கு அழைத்து வரும் சோனியாவின் முடிவு எனக்கு எதிராகத் திரும்பியது. -என்று அவர் தெரிவித்துள்ளார்.