ஆகம விதிகளின்படியே அர்ச்சகர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும்: உச்ச நீதிமன்றம்

புது தில்லி:
ஆகம விதிகளின்படியே ஆலயங்களில் அர்ச்சகர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தகுதியுடைய அனைத்து சாதியினரும் கோயில்களில் அர்ச்சகர்களாக நியமிக்கப்படலாம் என்ற தமிழக அரசு பிறப்பித்திருந்த அரசாணையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் ஆகம விதிகளின் படியே அர்ச்சகர்கள் நியமிக்கப் படவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

அனைத்து சாதியினரும் அர்சகராகலாம் என்ற கடந்த 2006-ம் ஆண்டு திமுக அரசு பிறப்பித்திருந்த அரசாணையை எதிர்த்து ஆதி சைவ சிவாச்சாரியார்கள் நல சங்கம் மற்றும் தென்னிந்திய திருக்கோயில் நிர்வாக சபை ஆகியவை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதையடுத்து அப்போது உச்ச நீதிமன்றம் தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு இடைக்கால தடை விதித்திருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கின் மீதான இறுதிக் கட்ட விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ரஞ்சன் கோகய், மற்றும் என்.வி.ரமணா ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு வந்தது.
இந்த விசாரணை முடிவில் புதன்கிழமை வெளியிடப்பட்ட தீர்ப்பில், ஆலய ஆகம விதிகளைப் பின்பற்றியே அர்ச்சகர்கள் நியமிக்கப் படவேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசியல் சாசன பிரிவு 14-ல் உள்ள சமத்துவத்துக்கான உரிமையை ஆகம சாஸ்திர விதிகள் மீறவில்லை என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

கடந்த 2006ஆம் ஆண்டு திமுக அரசு பிறப்பித்த அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற உத்தரவுக்கு இணங்க இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள 36,000 கோயில்களில் தகுதியும் பயிற்சியும் பெற்ற எந்த சாதியினரும் அர்ச்சகர்கள் ஆகலாம் என்று கூறப்பட்டது. மேலும், இந்து அறநிலையத்துறை 207 பேர்க்கு கோயில்களில் பூஜை செய்யும் பயிற்சி அளித்தது. இந்நிலையில் உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தது.