திருப்பதி: செம்மரக் கடத்தலைத் தடுக்க கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுற்றுச்சூழல் துறை மத்திய அமைச்சர் மகேஷ் ஷர்மா செய்தியாளர்களிடம் பேசிய போது கூறினார்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு இன்று காலை சுவாமி தரிசனம் செய்ய மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மகேஷ் சர்மா மற்றும் மத்திய குடும்ப நலத்துறை அமைச்சர் அஸ்வின்குமார் ஆகியோர் வந்தனர். விஐபி தரிசனம் மூலமாக ஏழுமலையானை தரிசித்த இவர்களுக்கு தேவஸ்தான அதிகாரிகள் ரங்கநாயகி மண்டபத்தில் ஆசீர்வாதங்கள், தீர்த்த பிரசாதங்கள் வழங்கி கௌரவித்தனர்.
பின்னர் கோயிலுக்கு வெளியே வந்த அமைச்சர்கள் இந்தியாவில் உள்ள 125 கோடி மக்களும் சந்தோஷமாகவும் செழிப்புடனும் இருக்க வேண்டும் என வேண்டிக் கொண்டதாக தெரிவித்தனர்.
பின்னர் செம்மரக் கடத்தல் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, செம்மரக் கடத்தலை தடுக்க மத்திய மாநில அரசுகளின் கூட்டு முயற்சியோடு ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும், இதனை முற்றிலுமாக தடுக்க மத்திய வனத்துறை மற்றும் மாநில அரசுகளுடன் இணைந்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.




