சபரிமலைக்கு அனைத்து வயதுப் பெண்களும் சென்று தரிசிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்கள் மீது ஜனவரி 22-ஆம் தேதி விசாரணை நடைபெறும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று கடந்த செப்டம்பர் 28 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து பல்வேறு தரப்பினரும் சீராய்வு மனுக்களை தாக்கல் செய்தனர். 48 சீராய்வு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த மனுக்களை விசாரணைக்கு ஏற்க தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் தலைமையிலான அமர்வு முடிவு செய்துள்ளது.
இதை அடுத்து வரும் ஜனவரி 22-ஆம் தேதி முதல் சீராய்வு மனுக்கள் மீது விசாரணை நடைபெறுகிறது. அதுவரை அனைத்து வயது பெண்களும் ஐயப்பன் கோவிலில் வழிபாடு நடத்தலாம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
ஜனவரி 22 ஆம் தேதி முதல் நீதிமன்ற அறையில் விசாரணை நடைபெறும் என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
முன்னதாக, சபரிமலை குறித்த தீர்ப்புக்கு எதிராக 3 பேர் உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தனர். இந்தப் புதிய மனுக்களையும், சீராய்வு மனுக்களுடன் சேர்த்து விசாரிக்கும்படி கோரிக்கை வைத்தனர்.
ஆனால் அதனை நிராகரித்த நீதிபதிகள், சீராய்வு மனுக்களை பரிசீலனை செய்து முடிவு செய்த பின்னர், புதிய ரிட் மனுக்களை விசாரிப்பதாகக் கூறினர்.




