இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (‘இஸ்ரோ) அதிநவீன தகவல் தொடர்பு சேவைக்காக ‘ஜிசாட்-29’ என்ற செயற்கைக்கோளை ஜிஎஸ்எல்வி மாக்3-டி2 உதவியுடன் நவ.14 புதன்கிழமை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இந்த திட்டத்தில் செயல்பட்ட விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
அதிநவீன தகவல் தொடர்பு சேவைக்காக 3,423 கிலோ எடை கொண்ட ஜிசாட்-29 என்ற செயற்கைக்கோள் ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டா, சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மைய ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து ஜிஎஸ்எல்வி மாக்3-டி2 ராக்கெட் மூலம் மாலை 5:08க்கு விண்ணில் செலுத்தப்பட்டது.
சென்னையை புயல் தாக்கும், வானிலை மோசமாக இருக்கும் என்றெல்லாம் செய்திகள் வந்து கொண்டிருந்த நிலையில், திட்டமிட்டபடி ராக்கெட் ஏவப் படும் என்று கூறியிருந்தது இஸ்ரோ. அதன்படி, இந்த ராக்கெட் ஏவுவதற்கான கவுண்ட் டவுன், செவ்வாய்க்கிழமை நேற்று மதியம் 2:50க்கு தொடங்கியது.
ரூ.400 கோடியில் உருவாக்கப்பட்டுள்ள இந்த செயற்கைக்கோளின் ஆயுள்காலம் 10 ஆண்டுகள். 3423 கிலோ எடை கொண்ட இந்த ஜிசாட் 29 உயர் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது.
#ISROMissions#GSLVMkIIID2 #GSAT29
Today’s successful mission at a glance. pic.twitter.com/76pye5QGmx
— ISRO (@isro) November 14, 2018
ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது குறித்து இஸ்ரோ தலைவர் சிவன் கூறியபோது, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஜிஎஸ்எல்வி விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. சந்திராயன் விண்கலத்திலும் ஜிஎஸ்எல்வி மாக் 3 தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும். 3 ஆணடுகளில் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்ப முடியும். மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக, தற்போது ஏவப்பட்டுள்ள இந்த செயற்கைக்கோள் மூலம், காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் சேவை வழங்கப்பட உள்ளது.
சுதந்திர தினத்தன்று கங்கயான் திட்டத்தை அறிவித்து பிரதமர் நமக்குப் பெரிய பரிசு வழங்கினார். இதற்கான குழு கண்டுபிடிக்கப்பட்டதுடன், பணிகள் நடந்து வருகின்றன. 2020 டிசம்பருக்குள் கங்கயான் திட்டம் செயல்படுத்தப்படும். இதற்கான முழுத் திறனும் இஸ்ரோவுக்கு உள்ளது என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
பிரதமர் மோடி வாழ்த்து:
இந்நிலையில், ஜிசாட் 29 வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது குறித்து பிரதமர் மோடி தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டுள்ளார். அவர் டிவிட்டரில் இது குறித்து தெரிவித்த போது, ஜிசாட் 29 செயற்கைக்கோளுடன் ஜிஎஸ்எல்வி மாக் 3 டி2 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. விஞ்ஞானிகளுக்கு மனமார்ந்த பாராட்டுகள். இந்தியாவில் உருவாக்கப்பட்ட வாகனம் மூலம், பெரிய செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி என்று தெரிவித்துள்ளார்.
My heartiest congratulations to our scientists on the successful launch of GSLV MK III-D2 carrying GSAT-29 satellite. The double success sets a new record of putting the heaviest satellite in orbit by an Indian launch vehicle. @isro
— Narendra Modi (@narendramodi) November 14, 2018
வெற்றிகரமாக பிரிக்கப் பட்டது:
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி ராக்கெட் ஏவு தளத்தில் இருந்து ஏவப்பட்ட ஜிஎஸ்எல்வி மாக்3 டி2 ராக்கெட், ஜிசாட் 29ஐ வெற்றிகரமாக சுமந்து சென்றது. ஏவப்பட்ட 17 நிமிடங்கள் கழித்து, ஏவு வாகனம் ஜிசாட் செயற்கைக்கோளை புவிவட்டப்பாதையில் வெளியே செலுத்தியது. ஹசனில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்து செயற்கைக்கோள் கண்காணிக்கப் பட்டு வருகிறது… என்று இஸ்ரோ அறிக்கை வெளியிட்டது.