
கண்ணணூர் விமான நிலையத்தை திறந்து வைத்தார் பினராயி விஜயன் … அபுதாபிக்கு பறந்தது முதல் விமானம்!
கேரள மாநிலம், கண்ணணூரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சர்வதேச விமான நிலையத்தை, மாநில முதல்வர் பினராயி விஜயன் மற்றும் மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் சுரேஷ் பிரபு ஆகியோர் இன்று திறந்து வைத்தனர். காலை 10 மணியளவில் முதலாவது விமானத்தை அவர்கள் கொடியசைத்து அனுப்பி வைத்தனர்.
ஏர் இந்தியா சார்பில் இயக்கப்படும் அந்த விமானம் அபுதாபிக்கு பறந்தது. முதல் நாள் சிறப்பைக் கொண்டாடும் வகையில், அந்த விமானத்தில் பயணித்த அனைவருக்கும் கண்ணணூர் விமான நிலைய நிர்வாகத்தின் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டனர்.
திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு ஆகிய இடங்களில் சர்வதேச விமான நிலையங்கள் உள்ள நிலையில், கண்ணணூரில் திறக்கப்பட்டிருப்பது நான்காவது விமான நிலையம் ஆகும். இதன் திறப்பு விழாவையொட்டி கலாசார நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. ஏராளமான மக்களும், அரசியல் தலைவர்களும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
கண்ணணூர் விமான நிலையத்தில் இன்று மேலும் இரண்டு விமானங்கள் இயக்கப்படவுள்ளன. ஐக்கிய அரபு அமீரக நாடுகள், ஓமன், கத்தார் போன்ற சர்வதேச நாடுகளுக்கும், ஹைதராபாத், பெங்களூரு, மும்பை போன்ற உள்நாட்டு நகரங்களுக்கும் இங்கிருந்து விமான சேவைகள் இயக்கப்படவுள்ளன.
இங்கு விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளதால் கண்ணணூர், காசர்கோடு, வயநாடு போன்ற மாநிலங்கள் சுற்றுலா வளர்ச்சியடையும் என்றும், கைவினைப் பொருள், மிளகு, கிராம்பு போன்ற மசாலா பொருள்களின் வர்த்தகம் மேம்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.



