
சென்னை- மதுரை இடையே அதி வேக தேஜஸ் ரயில் சேவையை வரும் 19 ம் தேதி பிரதமர் தொடங்கி வைக்கிறார்!
சென்னை – மதுரைக்கு இடையே செயல்படும் ’வைகை எக்ஸ்பிரஸ்’ தான் தென்னகத்தின் அதிவேக ரயிலாகக் கருத்தப்பட்டது. இதன் பயண நேரம் 7 மணி நேரம்.
இந்த சாதனையை முறியடிக்கக் களமிறங்கியிருக்கிறது ‘தேஜஸ் ரயில்’ சென்னையிலிருந்து மதுரைக்கு வெறும் 6 மணி 30 நிமிடங்களில், இதில் நீங்கள் பயணிக்கலாம்.

இதனை வரும் 19-ம் தேதி பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார். பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலையில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த ரயிலில் வைஃபை, சி.சி.டி.வி கேமரா, தீ புகை கண்டுப்பிடிக்கும் கருவி, ஜி.பி.எஸ் என விமானத்தில் உள்ளது போன்று வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
முதல் வகுப்பு ஏசி பெட்டிகள், இரண்டாம் வகுப்பு ஏசி பெட்டிகள், இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டி, முன்பதிவில்லா பெட்டிகள், ஜெனரேட்டர் பெட்டி என மொத்தம் இதில் 15 பெட்டிகள் உள்ளன.
தற்போது இதன் பயண விவரங்கள் வெளியாகியுள்ளன. மணிக்கு சுமார் 160 கி.மீ வேகத்தில் பயணிக்கும் இந்த ரயில், காலை 6 மணிக்கு சென்னையில் இருந்து கிளம்பி, நண்பகல் 12.30-க்கு மதுரையை அடைகிறது.

பிறகு அங்கிருந்து மீண்டும் மதியம் 3 மணிக்குக் கிளம்பி, இரவு 9.30-க்கு சென்னை வருகிறது. இடையில் திருச்சி மற்றும் கொடைரோட்டில் மட்டும் நின்று செல்லும்.

இந்த தேஜஸ் ரயில், வியாழன் தவிர மற்ற 6 நாட்களும் செயல்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
பிறகென்ன இனி நினைத்த போதெல்லாம் சென்னைவாசிகள் மீனாட்சி அம்மன் கோயிலுக்கும், மதுரைக்காரர்கள் மெரீனாவுக்கும் வந்து செல்லலாம்…



