குஜராத்தில் அதிர்ச்சி: அவர் என்ன ஹிட்லரா..? ஹர்த்திக் படேல் கன்னத்தில் அறைந்த நபர்!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்

hardikpatel - 2026

குஜராத்தில் திடீர் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிகழ்வாக, காங்கிரஸ் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்த ஹர்திக் படேல் கன்னத்தில் ஒருவர் பளாரென அறைந்து சில கேள்விகளை எழுப்பினார். அந்த நபரை அங்கிருந்தவர்கள் சரமாரியாக தாக்க, போலீஸார் மிகவும் சிரமப் பட்டு, அந்த நபரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

நாடாளுமன்றத் தேர்தல் களைகட்டியுள்ள நிலையில், குஜராத் மாநிலம் சுரேந்திரநகர் பகுதியில் காங்கிரஸில் அண்மையில் தன்னை இணைத்துக் கொண்ட, அண்மைக்கால குஜராத் சாதிக் கலவரங்களுக்குக் காரணகர்த்தாவாகத் திகழும் படேல் சமூகத்தைச் சேர்ந்த ஹர்திக் படேல், காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்து கொண்டிருந்தார்.

அவர் பேசிக் கொண்டிருந்த போது, திடீரென மேடைமேல் ஏறிய ஒருவர், ஹர்திக்கின் கன்னத்தில் பலமாக அறைந்தார். உடனே அங்கிருந்த காங்கிரஸ் தொண்டர்கள், அவரைப் பிடித்து நையப் புடைத்தனர். அவர்களின் பிடியில் இருந்து அந்த நபரைக் காப்பாற்ற போலீஸார் திக்குமுக்காடினர். ஒருவழியாக அந்த நபரை மீட்ட போலீஸார், அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். போலீஸாரின் விசாரணையில், அந்த நபரின் பெயர் தருண் கஜ்ஜார் என்று தெரியவந்தது.

அவர் போலீஸாரிடம் தான் ஏன் ஹர்திக்கை தாக்கினேன் என்பது குறித்து தகவல் தெரிவித்த போது, ‘கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற படேல் சமூகப் போராட்டத்தின்போது, என் கர்ப்பிணி மனைவியை மருத்துவமனையில் அனுமதித்திருந்தேன். இவரின் போராட்டத்தால் ஆமதாபாத்தில் அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. அதனால் என் குழந்தைக்கு மருந்து வாங்கமுடியாத நிலையில் மிகவும் சிரமப்பட்டோம். அன்றே ஹர்திக் கன்னத்தில் ஓர் அறை விட்டு அவருக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என முடிவுசெய்தேன்.

இவரால்தான் குஜராத் அமைதி இழந்தது. அன்று அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டன. வாகனங்கள் இயங்கவில்லை. இவர் நினைத்தால் குஜராத்தின் எந்தப் பகுதியை வேண்டுமானாலும் அடைத்துவிடுகிறார். யார் இவர்? குஜராத்தின் ஹிட்லரா?’ என கடுமையாக திட்டித் தீர்த்தார் தருண் கஜ்ஜார்.

குஜராத்தில் பட்டிதார் சமூகத்தை சேர்ந்தோருக்கு வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் எனக் கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தி பாஜக அரசுக்கு கடும் நெருக்கடி தந்தவர் ஹர்திக் படேல். அண்மையில் அவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து அக்கட்சிக்காக பிரச்சாரம் செய்து வருகிறார்.

இவரை தேர்தலில் போட்டியிடச் செய்வதற்காக காங்கிரஸ் முயன்றது. ஆனால், இவர் மீதுள்ள கிரிமினல் குற்றச்சாட்டுகளால், நீதிமன்றம் இவர் தேர்தலில் போட்டி யிடுவதைத் தடை செய்தது. எனவே, காங்கிரஸுக்காக குஜராத்தில் இவர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

harthikpatel twitterpage - 2026

இதனிடையே இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய நபர் பாஜக., பிரமுகர் என்று சில செய்தி தளங்கள் பதிவு செய்தன. அதே நேரம் இவர் காங்கிரஸைச் சேர்ந்தவர் என்றும், ஒரு பரபரப்புக்காக இவ்வாறு நாடகம் மேற்கொள்ளப் பட்டது என்றும், தன்னை அடித்தாலும் தான் ஒன்றும் புகார் மனு கொடுக்கப் போவதில்லை என்று ஹர்த்திக் படேல் கூறியிருந்ததாகவும், ஆனால் அதை மீறி ஹர்த்திக் போலீஸில் புகார் அளித்துவிட்டதாகவும் சமூகத் தளங்களில் செய்திகள் உலா வந்தன. எப்படி இருப்பினும் இன்று பரபரப்பை ஏற்படுத்திய செய்தியாகவே இது அமைந்துவிட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.