காங்கிரஸ் தலைவர் ராகுல் காண்டி மட்டும் அமேதியில் தோற்கட்டும்… நான் அரசியலை விட்டே விலகி விடுவேன் என்று சவால் விட்டுள்ளார் நவ்ஜோத் சிங் சித்து.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் அமேதி தொகுதியில் போட்டியிடுகிறார்!
கடந்த முறை அவரை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி அடைந்த மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியை மீண்டும் களம் இறக்கியுள்ளது பாஜக.,! ஸ்மிருதி இரானியும் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில், கடுமையாக களப் பணி ஆற்றி வருகிறார். ஸ்மிருதி இரானிக்கு தொகுதி மக்களிடம் கிடைத்துள்ள ஆதரவு காரணமாக அவர் இந்த முறை வெற்றி பெறுவார் என்று பரவலாக கருத்து எழுந்துள்ளது. இதனால் ராகுல் தோல்வி அடைவார் என்று கருத்து எழுந்துள்ள நிலையில், அவர் கேரளத்தின் வயநாடு தொகுதியிலும் போட்டியிடுகிறார். தாம் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற அச்சத்தின் காரணத்தாலேயே ராகுல் கேரளாவிற்கு செல்கிறார் என பாஜக., கேலி செய்தது.
இந்நிலையில், ராகுல் காந்தி மட்டும் அமேதி தொகுதியில் தோல்வி அடையட்டும்… நான் அரசியலை விட்டே சென்று விடுவேன் என்று கூறியுள்ளார் முன்னாள் கிரிக்கெட் வீரரும், தற்போதைய பஞ்சாப் மாநில அமைச்சருமான நவ்ஜோத் சிங் சித்து.
மேலும் தேசியவாதம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியாவிடம் பாடம் கற்க வேண்டும் என்று கூறி ஐஸ் வைத்துள்ளார். முன்னர் பாஜக.,வில் இருந்த போதும், வாய் மற்றும் பேச்சுக்காகவே பல முறை பலரது கண்டனங்களைப் பெற்றார் சித்து. இப்போது காங்கிரஸில் இருந்து கொண்டு அவர் தெரிவிக்கும் கருத்துகள், பலத்த விமர்சனங்களைச் சந்தித்து வருகிறது!




