ஜெயலலிதாவின் அம்மா உணவகம் போல சந்திரபாபு நாயுடு அண்ணா கேன்டீன் தொடங்கினார். தற்போது தாற்காலிக அண்ணா கேன்டீன்கள் மூடப்படுகின்றன.
மிகக் குறைந்த விலையில் சுவையான உணவை அளிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு தெலுங்கு தேசம் கட்சி அரசு சென்ற ஆண்டு ஜூலையில் அண்ணா கேன்டீன்களை அட்டகாசமாக ஆரம்பித்து வைத்தது.
வெறும் ஐந்து ரூபாய்க்கே சாப்பாடு போட வேண்டும் என்ற நல்ல எண்ணத்தோடு சந்திரபாபு நாயுடு அண்ணா கேன்டீன்களை தொடங்கி வைத்தார். முதலில் நகரங்களில் தொடங்கப்பட்டது. பின் மாநிலத்தின் பல்வேறு மண்டல கேந்திரங்களில் தற்காலிக இடங்களில் அண்ணா கேன்டீன்களை அமைத்தார்கள்.
ஆனால் தற்காலிக கேன்டீன்கள் தற்போது மூடப்பட்டு வருகின்றன. நிர்வாக அமைப்பிற்கு அளிக்க வேண்டிய தொகை ரூ. 45 கோடி வரை நிலுவையில் இருப்பதால் கேன்டீன்களுக்கு உணவு அனுப்புவதை நிறுத்தி விட்டார்கள்.
மாநில அளவில் 204 அண்ணா கேன்டீன்களை ஏற்பாடு செய்ய வேண்டும் என்று சென்ற அரசு லட்சியமாகக் கொண்டு இருந்தது! அதில் 184 கேன்டீன்களை நகரங்களில் தொடங்கினார்கள். மீதி உள்ளவற்றின் வேலைகள் பல நிலைகளில் முடிவடையாமல் நிற்கின்றன .
ஆனால் எம்எல்ஏக்களிடமிருந்து பெரிய அளவில் வேண்டுகோள்கள் வந்ததால் தேர்தலுக்கு முன் மண்டல கேந்திரங்களில் இந்த கேன்டீன்களை தெலுங்கு தேசம் கட்சி அரசு தொடங்கி வைத்தது. இருப்பினும் கட்டடங்கள் கிடைக்காததால் தற்காலிக ஷெட்களில் அவற்றை அமைத்தார்கள்.
இந்த கேன்டீன்களுக்கு உணவு அனுப்பும் “அட்சய பாத்ரா” நிர்வாகத்திற்கு அரசிடமிருந்து கிடைக்க வேண்டிய நிலுவை கோடிக் கணக்கில் பாக்கி இருக்கிறது.இது தொடர்பாக தங்களது சிரமத்தை அதிகாரிகளின் பார்வைக்கு கொண்டு சென்றாலும் எந்த ஏற்பாடும் நடைபெறாததால் கேன்டீன்களுக்கு உணவு விநியோகம் செய்வதை நிறுத்தி வைத்துள்ளார்கள்.
நிரந்தர கட்டிடங்களில் நடந்து வரும் கேன்டீன்களுக்கு மட்டும் எந்த தொந்தரவும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.




