திருப்பதி: பிரதமர் மோடி இன்று திருப்பதி வருகிறார். இதை அடுத்து 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.
பிரதமர் மோடி இலங்கை சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு இன்று மாலை 4.30 மணிக்கு ரேணிகுண்டா விமான நிலையம் வருகிறார். அங்கு ஆந்திர மாநில கவர்னர் நரசிம்மன், முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் மாநில அமைச்சர்கள், அதிகாரிகள், பாஜக முக்கிய நிர்வாகிகள் ஆகியோர் பிரதமரை வரவேற்க உள்ளனர்.
பின்னர் 4 .40 மணி முதல் 5 .10 மணி வரை ரேணிகுண்டா விமான நிலையம் அருகே பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பிரதமர் உரையாற்றுகிறார். பின்னர் 5.10 மணிக்கு ரேணிகுண்டாவில் இருந்து காரில் புறப்படும் பிரதமர் மோடி 6 மணிக்கு திருமலைக்கு செல்கிறார். பின்னர் ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து செய்ய உள்ளார்.
இரவு 7.20 மணிக்கு திருமலையில் இருந்து புறப்பட்டு 8.15க்கு ரேணிகுண்டா விமான நிலையம் வருகிறார். விமான நிலையத்தில் இருந்து நேரடியாக விமானப்படை விமானத்தில் டெல்லி செல்ல உள்ளார்.
பிரதமர் வருகையை ஒட்டி திருப்பதி எஸ்பி அன்பு ராஜன் தலைமையில் தேசிய பாதுகாப்புப்படை, மாநில புலனாய்வு துறை அதிகாரிகள் ஆகியோர் பாதுகாப்பிற்கான வாகன ஒத்திகை நடத்தினர்.
பிரதமர் வருகையை ஒட்டி ரேணிகுண்டா முதல் திருப்பதி ஏழுமலையான் கோவில் வரை வழி நெடுகிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மலைப் பாதையில் போலீசார் தொடர்ந்து துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பிரதமர் வருகையை 3 எஸ்.பி.க்கள் ,7 கூடுதல் எஸ்.பி.க்கள், 33 டிஎஸ்பிக்கள், 77 இன்ஸ்பெக்டர்கள், 146 சப்-இன்ஸ்பெக்டர்கள் என 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.




