அரசு முறைப் பயணமாக இலங்கை சென்ற இந்திய பிரதமர் மோடிக்கு அந்நாட்டு அரசு சார்பில் உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே விமான நிலையத்துக்கு நேரில் சென்று மோடியை வரவேற்றார்.
சனிக்கிழமை நேற்று மாலத்தீவு சென்ற பிரதமர் மோடி அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். பின்னர், அங்கிருந்து இலங்கை சென்ற மோடிக்கு அந்நாட்டு அரசு சார்பில் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இதன் பின்னர் இலங்கை அரசு உயர் அதிகாரிகள் அவரை வரவேற்றனர்.
பின்னர், மோடி தலைநகர் கொழும்புவில் கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி ஈஸ்டர் பண்டிகை அன்று இஸ்லாமிய பயங்கரவாதிகளால் குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்ட செண்ட் ஆண்டனி சர்ச்சுக்கு நேரில் சென்று பார்வையிட்டார். அவருடன் அதிபர் மைத்ரீபால சிறீசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரும் உடன் இருந்தனர். இந்த குண்டுவெடிப்பில் இறந்தோருக்கு அஞ்சலி செலுத்தினார் மோடி.
முன்னதாக, மாலத்தீவு சென்ற பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் அதிபர் இம்ராகிம் முகமது சோலிஹ் உற்சாக வரவேற்பு அளித்தார். நேற்று மாலத்தீவு அதிபருக்கு பரிசாக, உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்கும் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் கையெழுத்திட்ட கிரிக்கெட் பேட் ஒன்றையும் பிரதமர் மோடி அளித்தார். இந்திய பிரதமர் மோடிக்கு, அந்நாட்டின் உயரிய விருதாக கருதப்படும் நிஷான் இசுதீன் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
முன்னதாக இந்திய மாலத்தீவு நாடுகளிடையே நல்லுறவை மேம்படுத்தும் வகையில் அங்குள்ள 2 பாதுகாப்பு திட்டங்களை இருநாட்டு தலைவர்களும் கூட்டாக தொடங்கி வைத்தனர். கடற்படை கண்காணிப்பு ரேடார் மையம் மற்றும் மாலத்தீவு தேசிய பாதுகாப்பு பயிற்சி மையம் ஆகியவற்றை தொடங்கி வைத்து இருநாட்டு தலைவர்களும் பேசினர்.




