
ஆயுள் காப்பீடு செய்தவர்கள் உயிருடன் இருக்கும்போதே, அவர்கள் இறந்துவிட்டதாக போலியாக ஆவணங்கள் தயாரித்து அவர்களுக்காக ஆயுள் காப்பீடு வழங்கி விட்டதாக கூறி சுமார் 3 கோடி ரூபாய் வரை மோசடி செய்த இரு ஆயுள் காப்பீட்டு உயரிதிகாரிகளின் மீது மத்திய குற்றப்புலனாய்வு அதிகாரிகள் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கடந்த 2008ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரையிலும் இந்த மோசடி நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
ஆயுள் காப்பீட்டு நிறுவன அதிகரிகளின் மோசடியில் சில ஏஜெண்ட்களும் உடந்தையாக இருந்தது தெரியவந்துள்ளது. ஆனால், எதிர்பாராதவிதமாக ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் தலைமையகத்தில் இருந்து நடத்தப்பட்ட உள்துறை தணிக்கையில் (Internal Audit) இந்த மோசடி கண்டுபிடிக்கப்பட்டது.
எல்ஐசியின் உயர் அதிகாரி மற்றும் ஏஜெண்ட்களும் கூட்டு சேர்ந்து மோசடி செய்த 190 பாலிசிதாரர்கள் அனைவரும் இன்னும் உயிருடன் உள்ளதாகவும், அவர்களில் பெரும்பாலானவர்கள் அரசு அதிகாரிகள் என்பதும் சிபிஐ விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஏமாறாதே ஏமாற்றாதே
ஏமாறுபவர்கள் இருக்கும் வரையிலும் ஏமாற்றுபவர்களும் தங்களின் மோசடிகளை தொடர்ந்து நடத்திக்கொண்டுதான் இருப்பார்கள்.
ஆனால் ஏமாற்றுபவர்களை கண்டுபிடித்து கடுமையான தண்டனைகள் கொடுக்கப்பட்டால்தான் மோசடிகள் குறையும், அப்பாவிகளின் எதிர்காலமும் காப்பாற்றப்படும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாகும்.
இது குறித்து ஒரு சினிமாவில் வரும் நகைச்சுவை காட்சி
ஒரு தமிழ் படத்தில் காமெடி காட்சியில், ஒருவர் தன்னுடைய மனைவி கொடுமைப்படுத்துவதாக சொல்லி, தனக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்துவிடும் என்று முன்ஜாக்கிரதையாக ரூ. 2 லட்சத்திற்கு ஆயுள் காப்பீடு எடுத்திருப்பார்.
இதை தன் நண்பரிடம் சொன்ன உடன், நண்பர், சரி திடீர்னு நீ செத்துபோய்ட்டா அந்த பணம் யாருக்கு போய்ச் சேரும் என்று கேட்டவுடன், இவர், அண்ணே நான் செத்ததுக்கு அப்புறம் என் பொண்டாட்டிக்கு தான்னே போகும். பாவம் நான் செத்ததுக்கு அப்புறம் அவ கஷ்டப்படக்கூடாதுல்லே அதான் என்று இவர் சொல்லுவார்.
உடனே நண்பர், அடேய், அந்த பணத்தை நீயே எடுத்துக்குற மாதிரி நான் ஒரு ஐடியா சொல்றேன், அது படி நடந்தால், வர்ற பணத்துலே ஆளுக்கு பாதியா பிரிச்சுக்கலாம் என்று சொல்லுவார்.
பின்னர் இவர் இறந்துபோனது மாதிரி நாடகம் நடத்தி ஆயுள் காப்பீட்டு அதிகாரிகளிடம் மாட்டிக்கொள்வார்.
அந்த காமெடி காட்சி தற்போது உண்மையாக நடந்துகொண்டிருக்கிறது.
ஆனால் இங்கல்ல, அண்டை மாநிலமான தெலங்கானா மாநிலத்தில் தான் இந்த மோசடி நடந்துள்ளது.
இதில் சில எல்ஐசி முகவர்களும் சம்பந்தப்பட்டுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலான மாதச்சம்பளதாரர்களும், கூலி வேலை செய்பவர்களும் தங்களின் ஓய்வூதியத்தை நிம்மதியாக கழிப்பதற்காகவே தங்களின் வருமானத்தில் சிறிது சிறிதாக சேமித்து ஆயுள் காப்பீடு மற்றும் முறையான முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்வதை பழக்கமாகக் கொண்டுள்ளனர்.
அதிலும் குறிப்பாக அரசுத் துறை திட்டங்களில் முதலீடு செய்வது பாதுகாப்பாக இருக்கும் என்ற நப்பாசையில் தான் எதைப் பற்றியும் கவலைப்படாமல் எல்ஐசி பாலிசியில் திட்டங்களில் தங்களின் பணத்திதை போட்டு வைக்கின்றனர்.
குறிப்பாக, அரசுத் துறையில் வேலை பார்க்கும் அனைவருமே தங்களின் ஓய்வூ காலத்திற்கு உதவும் என்று நம்பிக்கையில் எல்ஐசி பாலிசி திட்டங்களில் துணிந்து பணத்தை சேமிப்பதுண்டு.
இவர்கள் தங்களின் பாலிசியின் பிரீமியத் தொகையை நேரடியாக எல்ஐசி அலுவலகத்திற்கு சென்று செலுத்துவதற்கு சோம்பேறித்தனப்பட்டு, அதற்கென உள்ள எல்ஐசி முகவர்களிடம் கொடுத்து பணத்தை கட்டச் சொல்லிவிடுகின்றனர்.
எல்ஐசி முகவர்களும் இவர்களின் பிரீமியத் தொகையை ஒழுங்காக தவணை தேதிக்கு முன்பாகவே எல்ஐசி அலுவலகத்தில் செலுத்தி அதற்கான ரசீதையும் பெற்று அதை முறையாக உரிய எல்ஐசி பாலிசிதாரர்களிடம் கொடுத்துவிடுவதுண்டு.
ஆனால் இதிலும் சில டுபாக்கூர் ஏஜெண்ட்களும் உள்ளனர். இவர்கள் பாலிசிதாரர்களின் பணத்தை செலுத்தாமல் தங்களின் சொந்த செலவுக்கு பயன்படுத்திக் கொள்வதும் உண்டு.
அதேபோல் உயிருடன் இருக்கும் பாலிசிதாரர்களின் பாலிச தொகையை போலியான ஆவணங்கள் தயாரித்து அதன் மூலம் இறந்தவர்களின் பணத்தைப் பெற்று கையாடல் செய்வதும் உண்டு.
அண்டை மாநிலமான தெலங்கானா மாநிலத்தில் இந்தக் கூத்து தான் நடந்துள்ளது.
அதுவும் கடந்த 10 ஆண்டுகளாக யாருடைய இடைஞ்சலும் இல்லாமல் கனஜோராக இந்த மோசடி நடைபெற்றுள்ளது.
இந்த மோசடியில் எல்ஐசி ஏஜெண்டுகளுடன் எல்ஐசி உயரதிகாரிகள் இருவரும் சம்பந்தப்பட்டிருப்பது தான் அதிர்ச்சியான விசயமாகும். கடைசியில் எல்ஐசியின் உள்துறை தணிக்கையின் போது இந்த மோசடி வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
தெலங்கானா மாநிலம், சூர்யபேட் (Suryapet) மாவட்டத்திலுள்ள, கொடட் (Kodad) கிளையின் எல்ஐசி அலுவலக துணை நிர்வாக அதிகாரியான பனோத் பீக்கு (Banoth Beeku) மற்றும் அலுவலக ஊழியரான குகுலோத்து ஹர்யா (Gugulothu Harya) ஆகிய இருவரோடு எல்ஐசி ஏஜண்ட்களான பாலக்கி ரகு சாரி, ஏ. கொண்டையா, பி,.சுரேஷ், எம்.தன மூர்த்தி, தூமதி சுரேந்தெர் ரெட்டி, போனகிரி விஜயகுமார், வங்காள சைத சாரி, புக்கிய ரவி, மற்றும் கல்வகுண்ட்டியா வெங்கண்ணா ஆகிய ஒன்பது பேரும் சேர்ந்து கடந்த 10 ஆண்டுகளாக ரூ.3 கோடி வரையிலும மோசடி செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
எல்ஐசியின் உள்துறை தணிக்கை (Internal Audit) ஆய்வின் போது இந்த மோசடி நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த 2008ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டுவரையிலும் மொத்தம் 190 பாலிசிகளுக்கான இறப்புச் சான்றிதழ்களை போலியாக தயார் செய்து, அதற்கான இழப்பீட்டுத் தொகையை இறந்தவர்களுடைய வாரிசுதாரர்களின் வங்கிக் கணக்குகளில் செலுத்திவிட்டதாகவும் போலியாக ஆவணங்களை தயார் செய்துள்ளனர்.
உடனடியாக இது பற்றி எல்ஐசியின் உயரதிகாரிகளின் பரிந்துரையின் பேரில் மோசடி செய்து உயரதிகாரி, அலுவலக உதவியாளர் மற்றும் ஏஜெண்ட்கள் 9 பேர் மீதும் சிபிஐ அமைப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.
சிபிஐ அமைப்பும் அவர்கள் அனைவர் மீதும் வழக்குப் பதிவு செய்து மேற்கொண்டு விசாரண செய்துவருகிறது.
இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், 190 பாலிசிதாரர்களும் இன்னும் உயிருடன் இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்களில் பெரும்பாலானவர்கள் அரசு ஊழியர்கள் என்பது மற்றொரு முக்கியமான அம்சமாகும்.


