இலங்கைக்கு அமைதிப் படையை அனுப்பியது உச்சபட்ச கொள்கைத் தோல்வி : வி.கே.சிங்

VKSingh ராய்புர்: கடந்த 1987ல் இலங்கைக்கு ஐபிகேஎஃப் – இந்திய அமைதிப் படையை அனுப்பியது, நமது உச்சபட்ச கொள்கை அளவிலான தோல்வி என்று குறிப்பிட்டார் வெளியுறவுத் துறை இணை அமைச்சரும் ராணுவ முன்னாள் தலைமைத் தளபதியுமான வி.கே.சிங். உத்தரகண்ட் மாநிலம் ராய்ப்பூரில், செவ்வாய்க்கிழமை நேற்று நடைபெற்ற “தைரியமும், தண்டனையும்´ என்ற தனது சுயசரிதை தொடர்பான நிகழ்ச்சியில் வி.கே.சிங் பேசியபோது குறிப்பிட்டது… விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையிலான போரில், இலங்கை அரசுடனான உடன்படிக்கையின் மூலம் இந்தியா நுழைந்தது. இது, நமது கொள்கை ரீதியில் ஏற்பட்ட உச்ச பட்ச தோல்வி. இந்திய அமைதிப் படையால் விடுதலைப் புலிகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தன. அமைதிப்படைக்கு ஏற்பட்ட இந்தத் தோல்வி, இந்திய ராணுவத்தால் அமைதியை ஏற்படுத்த முடியாமல் போனதுதான்… மேலும், அமைதியை ஏற்படுத்த முடியாமல், இந்திய ராணுவமே போரில் சிக்கிக் கொண்டது. இலங்கையில், விடுதலைப் புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை பலமுறை நெருங்கியபோதும், ஒவ்வொரு முறையும் ஒரு கட்டளைகள் வந்து, அவர் தப்பிச் செல்வதற்கான பாதுகாப்பான பாதையை ஏற்படுத்திக் கொடுத்தன… என்று கூறினர் வி.கே.சிங். அதே நேரம் அப்போதைய இலங்கை அதிபர் ரனசிங்க பிரேமதாச, விடுதலைப் புலிகளுக்கு, இந்திய அமைதிப் படையை எதிர்ப்பதற்கு பலவிதங்களில் உதவினார் என்றும் கூறினார் வி.கே.சிங்.