பாஜக., தலைவர் ஜேபி. நட்டா முன்னிலையில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று முறைப்படி பாஜக.,வில் இணைந்தார். அவருக்கு பாஜக.,வின் அடிப்படை உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது.
தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர் சுப்ரமணியம் ஜெய்சங்கர். இவர் தில்லியில் பிறந்து வளர்ந்து, மத்திய அரசில் பல்வேறு உயர் பதவிகளை வகித்தார். வெளியுறவுத் துறையில் பணியாற்றி பெயர் பெற்றவர். சீனா, ரஷ்யாவில் இந்திய தூதராகவும் பணியாற்றியவர். பல்வேறு நாடுகளுக்கும் சென்றவர், அவற்றின் நாடித்துடிப்பை அறிந்தவர். இவரது செயல்பாடுகள் பிரதமர் மோடியைக் கவர்ந்ததால், இந்த முறை வெற்றி பெற்று ஆட்சி அமைந்ததும், வெளியுறவுத் துறைக்கே அமைச்சராக ஜெய்சங்கரை நியமித்தார் மோடி.
இதையடுத்து மத்திய அமைச்சராகப் பொறுப்பேற்ற ஜெய்சங்கர், இதுவரை எந்தக் கட்சியிலும் உறுப்பினராக இருந்ததில்லை. இந்நிலையில் இன்று முறைப்படி தன்னை பாஜக., உறுப்பினராக இணைத்துக் கொண்டார் ஜெய்சங்கர்.
பாஜக.,வில் உறுப்பினரே இல்லாத ஜெய்சங்கரை அமைச்சராக மோடி நியமித்தபோது பலருக்கு ஆச்சரியம் ஏற்பட்டது. இந்நிலையில் இன்று தில்லியில் உள்ள பாஜக.,வின் தலைமை அலுவலகத்துவந்திருந்த ஜெய்சங்கர், கட்சியின் செயல்தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் தன்னை முறைப்படி பாஜக.,வில் இணைத்துக் கொண்டார். கட்சியின் செயல்தலைவர் ஜே.பி.நட்டா, அவருக்கான உறுப்பினர் அட்டையை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.




