தை மாதம் பிறக்கட்டும்… விஜயகாந்த் தமிழகம் முழுதும் சிம்மக் குரலோடு வலம் வருவார் பாருங்க… என்று பேசினார் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன்.
திருச்சி மருங்காபுரியில் நேற்று தேமுதிக பிரமுகர் இல்ல காதணி விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக திருச்சி வந்திருந்தார் விஜய பிரபாகரன்.
காதணி விழாவில் கலந்து கொண்ட பின்னர் அவர் பேசியபோது, தேர்தலில் கட்சி வெற்றி பெறும்போது அரசியலுக்கு நான் வரவில்லை! கட்சி தொய்வாக இருக்கும்போது அரசியலில் ஈடுபட்டவன் நான்.. என்றார்.
மேலும், நம் கட்சித் தலைவர் விஜயகாந்த் நலமுடன் இருக்கிறார்! தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது போல்… தை மாதம் பிறக்கட்டும்… பிறகு பாருங்கள்… விஜயகாந்த் சிம்மக் குரலுடன் தமிழகம் முழுவதும் வலம் வருவார் என்றார். தொய்வடைந்து கிடந்த தொண்டர்களுக்கு உற்சாகம் ஊட்டும் வகையிலும் நம்பிக்கை தோன்றும் வகையிலும் பேசினார் விஜய பிரபாகரன்.




