எட்டுத் தொகை என்ற கணக்கில் வைக்கப் பட்டுள்ள சங்கத் தமிழ் நூலான புறநானூறில் வரும் ”யானை புகுந்த நிலம்” என்ற பிசிராந்தையாரின் பாடல் வரியை சுட்டிக் காட்டி நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையை நிகழ்த்தினார்.

நாடாளுமன்ற மக்களவையில் இன்று 2019 ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். அப்போது வரிவிதிப்பு தொடர்பான புறநானூற்றுப் பாடலை பாடி அதன் பொருளையும் அவர் எடுத்துக் கூறினார்.

வரி விதிப்பு தொடர்பாகப் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வரி செலுத்தும் பொதுமக்கள் அனைவருக்கும் நன்றி என்றார். வரி செலுத்துபவர்களின் பங்களிப்பால்தான் நாடு வளர்ச்சி அடைகிறது எனக் குறிப்பட்ட அவர், வரிவிதிப்பு தொடர்பான புறநானூற்றுப் பாடல் வரிகளை வாசித்தார்.

‘காய்நெல் அறுத்துக் கவளங் கொளினே … அறிவுடை வேந்தன் நெறியறிந்து கொளினே…  யானை புக்க புலம் போலத் …. தானும் உண்ணான் உலகமும் கெடுமே’ – என்ற இந்த புறநானூற்றுப் பாடலை வாசித்துக் காட்டினார்.

யானையின் பசிக்கு சிறிய அளவு நிலத்தில் இருந்து அறுவடை செய்த அரசியே போதுமானது. ஆனால், அந்த யானையை நிலத்திற்குள் அனுமதித்தால் அது நிலத்தில் உள்ள மொத்த பயிரையும் பாழாக்கிவிடும் என்பது இதன் பொருள். அதிக வரிவசூல் செய்த பாண்டிய மன்னன் அறிவுடை நம்பிக்கு உண்மையை உணர்த்த பிசிராந்தையார் இந்தப் பாடலை பாடி மன்னனின் தவறை உணரச் செய்தார். என்பது இந்தப் பாடலின் பின்னுள்ள வரலாற்றுச் சம்பவம்.

யானை புக்க புலம்! – இந்தப் பாடலைப் பாடியவர்  பிசிராந்தையார்.  இவர் காலத்து பாண்டிய நாட்டை ஆண்ட மன்னன் பாண்டியன் அறிவுடை நம்பி.

சோழ மன்னன் கோப்பெருஞ்சோழனிடம் மிகுந்த அன்புடையவர் பிசிராந்தையார். மிகுந்த அன்புடையவராக இருந்தாலும் இவரும் கோப்பெருஞ்சோழனும் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்ததில்லை. சந்திக்காமலேயே அவர்கள் நட்பு வளர்ந்தது. தன் புதல்வர்களுடன் ஏற்பட்ட பகை காரணத்தால் மனம் வருந்தி கோப்பெருஞ் சோழன் வடக்கிருந்து உயிர் நீத்தான். அதைக் கேள்வியுற்ற பிசிராந்தையார் சோழ நாட்டிற்குச் சென்று கோப்பெருஞ்சோழன் இறந்த இடத்திலேயே தானும் வடக்கிருந்து உயிர் நீத்தார்.

இவர் புறநானூற்றில் நான்கு பாடல்களையும், அகநானூற்றில் 308-ஆம் செய்யுளையும், நற்றிணையில் 91-ஆம் செய்யுளையும் இயற்றினார். இவர் செய்யுள்கள் சிறந்த கருத்தாழமும் இலக்கிய நயமும் உடையவை.

பாண்டியன் அறிவுடை நம்பி, அறிவிற் சிறந்தவனாக விளங்கியவன். இவன் புறநானூற்றில் 188- ஆம் செய்யுளை இயற்றியுள்ளான்.

பாண்டியன் அறிவுடை நம்பி தன் குடிமக்களைத் துன்புறுத்தி அவர்களிடம் வரி வசூல் செய்துவந்தார்.  அவனிடம் சென்று அவன் தவறுகளை எடுத்துரைத்து அவனைத் திருத்த யாரும் முன்வரவில்லை.

அந்த நிலையில் அறிவுடை நம்பியிடம் சென்று அவனுக்கு அறிவுரை வழங்குமாறு அந்நாட்டு மக்கள் பிசிராந்தையாரை வேண்டினர். அவரும் குடிமக்களின் வேண்டுகோளுக்கு இணங்கி, அறிவுடை நம்பியிடம் சென்று  ஓர் அரசன் எவ்வாறு வரியைத் திரட்ட வேண்டும் என்று அறிவுரை கூறுகிறார். இதைக் கேட்டு அவன் தன் தவறைத் திருத்திக் கொண்டான். அத்தகைய சிறப்பு பெற்ற பாடல் இது…

காய்நெல் அறுத்துக் கவளங் கொளினே
மாநிறைவு இல்லதும் பன்னாட்கு ஆகும்;
நூறுசெறு ஆயினும் தமித்துப்புக்கு உணினே
வாய்புகு வதனினும் கால்பெரிது கெடுக்கும்;
அறிவுடை வேந்தன் நெறியறிந்து கொளினே
கோடி யாத்து நாடுபெரிது நந்தும்;
மெல்லியன் கிழவன் ஆகி வைகலும்
வரிசை அறியாக் கல்லென் சுற்றமொடு
பரிவுதப எடுக்கும் பிண்டம் நச்சின்
யானை புக்க புலம்போலத்
தானும் உண்ணான் உலகமும் கெடுமே.

விளைந்த நெல்லை அறுத்து உணவுக் கவளங்களாக்கி யானைக்குக் கொடுத்தால், ஒருமா அளவுகூட இல்லாத நிலத்தில் விளைந்த நெல்கூட பல நாட்களுக்கு யானைக்கு உணவாகும்.

ஆனால், நூறு வயல்கள் இருந்தாலும், யானை தானே புகுந்து உண்ண ஆரம்பித்தால், யானை தின்பதைவிட யானையின் கால்களால் மிதிபட்டு அழிந்த நெல்லின் அளவு அதிகமாகும்.

அறிவுடைய அரசன் வரி திரட்டும் முறை தெரிந்து மக்களிடமிருந்து வரி திரட்டினால் நாடு கோடிக் கணக்கில் பொருள்களைப் பெற்றுத் தழைக்கும். அரசன் அறிவில் குறைந்தவனாகி, முறை அறியாத சுற்றத்தாருடன் ஆரவாரமாக அன்பு கெடுமாறு, நாள்தோறும் வரியைத் திரட்ட விரும்பினால், யானை புகுந்த நிலம் போலத் தானும் பயனடையாமல் உலகமும் (தன் நாடும்) கெட்டு அழிய நேரும் என்பதுதான் இந்தப் பாடலின் பொருள்.

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...