December 7, 2024, 10:51 PM
27.6 C
Chennai

சந்திரயான்-2 வெற்றி! இளைஞர்களை ஊக்கப்படுத்தும்: மோடி பெருமிதம்!

சந்திரயான் 2 வெற்றிகரமாக ஏவப்பட்டதில் தாங்கள் மகிழ்ச்சி அடைவதாகவும் இந்தத் திட்டத்தில் ஈடுபட்ட விஞ்ஞானிகளுக்கு தங்களது பாராட்டுகள் என்றும் இஸ்ரோவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். சந்திரயான் 2 வெற்றிக்காக நாடாளுமன்றத்தில் இஸ்ரோவுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

சந்திரயான் -2 வெற்றி குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் மகிழ்ச்சி தெரிவித்துள்ள குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், அனைத்து இந்தியர்களும் பெருமை கொள்ள வேண்டிய தருணம் இது! விஞ்ஞானிகள், பொறியாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். புதிய தொழில்நுட்பம் மற்றும் புதிய திட்டங்களை முன்னெடுப்பதில் இஸ்ரோ, ஆசானாக இருக்க வேண்டும்!

சுமார் 50 நாட்களில் நிலவின் தென் துருவத்தை சந்திரயான் 2 அடையும்! புதிய கண்டுபிடிப்புகளுக்கு அது வழிவகுக்கும்! அறிவுசார் அமைப்புகளை இத்திட்டம் வளப்படுத்தும்! சந்திரயான்-2 வெற்றிக்கு ஒவ்வொருவருக்கும் வாழ்த்துகள் என்று கூறியுள்ளார்.

சந்திரயான் 2 வெற்றி குறித்து இரண்டு புகைப்படங்களுடன் தனது டிவிட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டுள்ளார் பிரதமர் மோடி. சந்திரயான் 2 விண்கலம் விண்ணில் ஏவப்படும் தருணத்தில், தனது இருக்கையில் இருந்து எழுந்து நின்று, கைகளைக் கட்டியபடி, தனது அறையில் உள்ள பெரிய திரையில் விஞ்ஞானிகளுடன் தானும் டென்ஷனுடன் அந்த நிகழ்வை நோக்குவதைக் காட்டும் வகையில் ஒரு படமும், கைத்தட்டி பாராட்டும் ஒரு படமும் என தனது டிவிட்டரில் பகிர்ந்துள்ளார் பிரதமர் மோடி. மேலும், இஸ்ரோ தலைவர் சிவன் மற்றும் அவரது குழுவினருக்கு தனது வாழ்த்துகளை குரல் ஒலிப்பதிவு மூலம் அவர் தெரிவித்துள்ளார்.


மேலும், வரலாற்றின் சிறப்பான தருணங்கள். அறிவியலின் புதிய எல்லையை அளக்க விரும்பும் 130 கோடி இந்தியர்களின் உறுதியையும், விஞ்ஞானிகளின் வலிமையையும் சந்திரயான் 2 காட்டுகிறது. அறிவியல், உயர் தர ஆராய்ச்சிகள் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை மேற்கொள்ள இளைஞர்களை சந்திரயான் 2 ஊக்கப்படுத்தும் என்று தனது டிவிட்டர் பதிவுகளில் குறிப்பிட்டுள்ளார் பிரதமர் மோடி.

ALSO READ:  மதுரை மாவட்டத்தில் கன மழை!