காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவு 370ஐ நீக்கி இன்று உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவிப்பு வெளியிட்டுள்ளதற்கு நாடு முழுதும் பெரும் வரவேற்பு காணப் படுகிறது. எதிர்க்கட்சிகள் சில எதிர்ப்பு தெரிவித்தாலும், பெரும்பாலான கட்சிகளும் அதற்கு ஆதரவு அளித்துள்ளன.
இந்நிலையில், இந்திய சட்ட மேதை பாபா சாஹேப் அம்பேத்கர் கண்ட கனவை பிரதமர் மோடி நிறைவேற்றியுள்ளார் என்று பலரும் சமூக வலைத்தளங்களில் பாராட்டுகளைக் குவித்து வருகின்றனர்.
இது குறித்து பாஜக., பிரமுகர் நாராயணன் திருப்பதி குறிப்பிட்ட போது…
“இந்தியா காஷ்மீரின் எல்லையை பாதுகாக்க வேண்டுமென்று விரும்புகிறீர்கள்! இந்தியா உங்களுக்கு உணவு, தானியங்களை அளிக்க வேண்டும் என்கிறீர்கள்! சாலை மற்றும் அடிப்படை வசதிகளை உருவாக்கி தரவேண்டும் என்கிறீர்கள். ஆனால் இந்தியாவுக்கு குறைந்த அதிகாரமே இருக்க வேண்டும், இந்தியர்களுக்கு காஷ்மீரில் உரிமை இல்லை என்கிறீர்கள்.
இந்த நாட்டின் சட்ட அமைச்சராக, காஷ்மீருக்கு சட்டப் பிரிவு 370ன் கீழ் சிறப்பு அந்தஸ்திற்கு நான் ஒப்புதல் கொடுப்பது இந்த நாட்டின் நலனுக்கு எதிராக நான் செய்யும் துரோகம். நான் எப்போதும் இதற்கு உடன்படமாட்டேன் ” என்று சொல்லி மிகக் கடுமையாக எதிர்த்த டாக்டர் அண்ணல் அம்பேத்கரின் கனவை நனவாக்கிய பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு பாராட்டுக்களும், நன்றிகளும்… என்றார்.




