பெங்களூரில் போன சனிக்கிழமை ராத்திரி 11 மணிக்கு தோழிகளை சந்தித்து பேசிய இளம் பெண், கிளம்பும்போது ஊபர் கேப் ஒன்றினை புக் செய்தார். கொஞ்ச நேரத்தில் புக் செய்த கேப் வந்ததும் அதில் ஏறிக் கொண்டார்.
அந்த கால் டாக்சி டிரைவரோ, யாருக்கோ போனை போட்டு, “வண்டியில் ஏறியுள்ள பெண் கஸ்டமர் ரொம்ப மோசம்” என்று புகார் சொல்லியவாறே வந்தார்.
இதை கேட்டதும் அந்த பெண் திடுக்கிட்டார். இருந்தாலும் அமைதியாக இருந்தார் அந்த பெண். ஆனால் அந்த டிரைவர், பேசிக் கொண்டிருந்த செல்போனை கட் செய்துவிட்டு, அந்த பெண்ணிடம், “இனி இப்படி வெளியில போயயிட்டு, தண்ணி அடிச்சிட்டு வண்டியில வராதீங்க” என்றார்.
அதற்கு அந்த பெண், “உங்க வேலையை நீங்க பாருங்க, இதெப்பத்தியெல்லாம் உங்களுக்கு தேவை இல்லாத பேச்சு என்று கூறியிருக்கிறார். உடனே டிரைவர் வண்டியை ஓரங்கட்ட போகவும், அந்த பெண் எமர்ஜென்ஸி பட்டன் ஆப்பை போனில் அழுத்திவிட்டார். உடனே டிரைவருக்கு கஸ்டமர் கேரில் இருந்து போன் வந்து, விவரம் கேட்டனர்.
அதற்கு அந்த டிரைவர், இளம் பெண் குடித்துவிட்டு வந்திருப்பதாக புகார் சொன்னார். உடனே போனை புடுங்கிய இளம்பெண், “எப்படியாவது எனக்கு உதவுங்க” என்று கேட்டுக் கொள்ள, அந்த வண்டியை விட்டு கீழே இறங்கிவிடுமாறும், வேறு ஒரு வண்டியை அனுப்பி வைப்பதாகவும் கஸ்டமர் கேரில் இருந்து பதிலளித்தனர். இதை பார்த்ததும் டிரைவருக்கு இன்னும் டென்ஷன் ஆகிவிட்டது. “வண்டியை விட்டு கீழே இறங்கிறியா, இல்லைன்னா, உன் டிரஸ்ஸை கிழிக்கட்டுமா” என்று மிரட்டலாக பேசி உள்ளார்.
இதைக்கேட்டு அந்த பெண் கேபில் இருந்து இறங்கி கொண்டார். அப்போதுதான் தெரிந்தது, அந்த இடம் ஒரு கும்மிருட்டு, ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி என்றும் நேரம் ராத்திரி 11.15 என்பதும். நின்று நின்று பார்த்தால், சொன்னபடி இன்னொரு வண்டியும் ஏதும் வரவில்லை. அதனால் நண்பர்களுக்கு போன் செய்து அவர்களை வரவழைத்து, வீட்டுக்கு போய் சேர்ந்திருக்கிறார் இளம்பெண்.



