
ஒரு அடி! இரண்டு மாத தடை! மீண்டும் சி பி ஐ நிகழ்வு!
வருமான வரி துறை வழக்கு ஒன்றினை விசாரிக்க திருச்சி வருமான வரி அலுவலகம் சென்று இருந்தேன். தலைமை குமாஸ்தாவை விசாரித்து விட்டு அடுத்தவர் வருகைக்காக காத்திருந்தேன்.
நேரம் போனது .விசாரணைக்கு வர வேண்டிய நபர் வரவில்லை.,. என்ன ஆனது என்று பார்க்க அறையை விட்டு வெளியே வந்தால் தலைமை குமாஸ்தா கோட்டு சூட்டு அணிந்து இருந்த ஒரு நபரிடம் கை நீட்டி ஏதோ பணம் வாங்கி கொண்டு இருந்தார்.
தலைமை குமாஸ்தா என்னை பார்த்த உடன் ஒடி விட்டார்.கோட்டு சூட்டு நபர் அங்கேயே நின்று கொண்டு இருந்தார். அவரிடம் போய் என்ன கொடுத்தீர்கள் எவ்வளவு கொடுத்தீர்கள் ஏன் கொடுத்தீர்கள் என்று கேட்டேன். துண்டு சீட்டு கொடுத்தேன் என்றார். விட்டேன் ஒரு அடி.
மனிதன் கலங்கி போனார்.20 ரு கொடுத்தேன் என்றார். நான் சி பி ஐ அதிகாரி என்பதை சொல்லி இனி இப்படி லஞ்சம் கொடுக்காதீர்கள் என்று சொல்லி அனுப்பினேன்..
பின்னர் விசாரணையை முடித்து விட்டு கிளம்பினேன்! தலைமை எழுத்தர் ஒடி போனவர் பின்னர் நான் இருக்கும் வரை வரவில்லை..
சம்பவம் நடந்த கொஞ்ச நாள் கழித்து கோட்டு சூட்டு நபர் ஒரு பெரியவருடன் வீட்டுக்கு வந்தார். பெரியவர் ஜனதா கட்சிகாரர், என் தந்தைக்கு நண்பர். அவர் என் தந்தையிடம் ..கோட்டு சூட்டு நபர் ஒரு கல்லூரி பேராசிரியர் என்றும் லஞ்ச வழக்கு ஏதாவது போட்டால் வேலைக்கு ஆபத்து வந்துவிடும் ஆகவே 20 ரூ விவகாரத்தை விட்டு விடும் படி உங்கள் பையனிடம் சொல்லுங்கள் என்றார்.
என் தந்தை நான் அதில் எல்லாம் தலையிடமாட்டேன் என்று சொல்லி அவர்களை அனுப்பி விட்டார்.. பிறகு நான் அவர்களை பார்த்து ஒன்றும் பயப்பட வேண்டாம் வழக்கு எல்லாம் வராது என்று சொன்னேன்.
சம்பவம் நடந்து இரண்டு மாதம் கழித்து சி பி ஐ டி ஐ ஜி என்னை அழைத்தார். திருச்சியில் என்ன நடந்தது என்று கேட்டார். நான் நடந்ததை சொன்னேன்.
என்னையா நீ பாட்டுக்கு ஒருத்தனை அடித்துவிட்டு வந்து விட்டாய்.. அந்த அலுவலகத்திற்குள் இரண்டு மாதமாக பொதுமக்களையும், ஆடிட்டர்களையும் அனுமதிப்பதில்லையாம்! உள்ளே வந்தால் சி பி ஐ ஆட்கள் அடிப்பார்கள் என்று மிரட்டலாம்! நான் இனி அப்படியெல்லாம் நடக்காது என்று தைரியம் சொல்லி அனுப்பினேன் என்றார்.
மோகன்ராஜ் கொஞ்சம் கோபத்தை கட்டுப்படுத்துங்கள் .என்று புத்தி சொன்னார்!
ஆக… ஒரு அடியில் லஞ்சத்துக்கு இரண்டு மாத தடை விதிக்கப்பட்டது .
அடி உதவுவது போல அண்ணன் தம்பி உதவ மாட்டான் என்பது முற்றிலும் உண்மை!
- ஜெபமணி மோகன்ராஜ் (ஜெபமணி ஜனதா கட்சி)



